வெள்ளிமணி

பொருநை போற்றுதும்! 71

டாக்டா் சுதா சேஷய்யன்

பூரணம் கொடுக்கும் பரிபூரணேச்வரர்
 தருவைக்கும் கிழக்காக, அநேகமாகப் பாளையங்கோட்டையைத் தொட்டுக்கொண்டு உள்ளது முந்நீர்ப்பள்ளம்.
 இந்த ஊரின் சுவாமி, அருள்மிகு பரிபூரண கிருபேச்வரி உடனாய அருள்மிகு பரிபூரண கிருபேச்வரர். இந்த சுவாமியைப் பூரணலிங்கம் என்றும் அழைக்கிறார்கள். நெல்லைக்காரர்கள் பலருக்கும், பூரணலிங்கம், பூரணேச்வரன் என்றெல்லாம் பெயர்கள் இருப்பதற்கு இவரே காரணம்.
 எனது தாத்தா பூர்ணம் ஐயர் இங்கு அக்ரஹாரத்தில் பல வருடங்கள் வசித்தார். குலதெய்வமான பூரணேச்வரர் பெயரே குடும்பப் பெயராயிற்று. தந்தை பூர்ணம் ராமச்சந்திரன், சித்தப்பாக்கள் பூர்ணம் விசுவநாதன், பூர்ணம் சோமசுந்தரம், பூர்ணம் பாலகிருஷ்ணன். தாத்தா கர்நாடக இசை பயின்றவர். பாமாலைக் குழு வைத்து விழா நாள்களில் நிகழ்ச்சி நடத்துவார் என்று சுவாமியின் பெருமையையும் பெயரின் பெருமையையும் சிலாகிக்கிறார், முந்நீர்ப்பள்ளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மேனாள் காவல் துறை தலைமை இயக்குநரும், இப்போதைய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். நட்ராஜ் அவர்கள்.
 ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
 ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
 (ஆடுவோமே)
 - என்பது மகாகவி பாரதியாரின் அமரத்துவம் பெற்ற பாடல்களில் ஒன்று. நம்முடைய நாடு விடுதலை பெறுவதற்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே பாரதியார் இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்திருந்தார் என்றாலும், நாடு விடுதலை பெற்ற காலத்தில் இப்பாடல் பெருமதிப்பு கண்டது. பாரதத் திருநாடு விடுதலை பெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர், 1947 ஜனவரி 12- ஆம் நாள் வெளியான ஏவி. எம்-மின் "நாம் இருவர்' திரைப்படத்தில், இசையரசி டி.கே.பட்டம்மாள் குரலில் ஒலித்த இப்பாடலுக்கு, (அப்போதைய) பேபி கமலாவின் நாட்டியத்தைக் கண்டு உருகாதவர்கள் இருக்கமுடியாது. இப்போதும் ஒவ்வொரு விடுதலைத் திருநாள் மற்றும் குடியரசுத் திருநாள் கொண்டாட்டங்களின் போதும், இதனைப் பாடிக் களிக்காதவர் இல்லை எனலாம். இப்பாடலின் நிறைவுச் சரணம் இப்படியாக அமையும்:
 நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் இது
 நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் இந்த
 பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்
 இங்குக் குறிக்கப்பெறுகிற பரிபூரணன், முந்நீர்ப்பள்ளம் ஸ்ரீ பரிபூரண கிருபேச்வரர் என்றே அறிஞர்கள் பலரும் நம்புகின்றனர். நெல்லைப் பகுதிக்காரரான பாரதியாருக்கு இந்த சுவாமியின் பேரருள்பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆகவேதான், நாட்டு விடுதலைக்கான விண்ணப்பத்தைக் கட்டாயம் நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையில், விடுதலை கிட்டிவிட்டதாகவே மகாகவியும் பாடினார் போலும்! கோயிலிலும், பாரதியாரின் திருவுருவப் படத்தையும் இந்தச் சரணத்தையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
 முந்நீர் சேர்ந்த முந்நீர்ப்பள்ளம்
 முந்நீர்ப்பள்ளம் என்னும் பெயர், சற்று வினோதமாக தோன்றுகிறதா? இப்பெயருக்குப் பலரும் பலவிதமாகக் காரணம் சொல்கிறார்கள். "முந்நீர்' என்றால் கடல். கடல் போல் நீர் நிறைந்த இடம் என்று பொதுவாகச் சொல்லலாம். அருகிலேயே தருவை, கோபாலசமுத்திரம் போன்ற ஊர்கள் இருப்பதையும் நினைவுகூரலாம். கிழக்காக ஓடிவரும் பொருநையாள், வடக்கு முகமாகத் திரும்புகிற பகுதியில், திருப்பத்திற்குத் தென்கிழக்கில் இருக்கும் இவ்வூர்கள், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தனவாகவும், ஆங்காங்கே நீர்நிலைகள் நிறைந்தனவாகவும் இருந்தன. ஆகவே, இப்படிப்பட்ட பெயர்கள் தோன்றியுள்ளன.
 வேறு வகையான தானதருமங்கள் செய்தாலும், தாக சாந்திக்கான தானம் எதுவும் செய்யாத மன்னன் ஒருவன், முனிசாபத்தால் பல்லியாக மாறினான் என்றும், சாப விமோசனத்திற்காக இன்னொரு முனிவரின் கமண்டல நீருக்குள் அடைக்கலம் புகுந்தான் என்றும், பல்லி விழுந்திருப்பதைக் கண்ட அந்த முனிவர் கமண்டலத்தைத் தூக்கி வீசினார் என்றும், அவ்வாறு வீசியபொழுது ஆற்றுநீரும் (தாமிரவருணி), ஊற்றுநீரும் (இப்பகுதியின் நிலத்தடி நீர்), வேற்றுநீரும் (கமண்டல நீர்) கலந்ததால், மூன்று நீர்கள் கலந்த இடம் முந்நீர்ப்பள்ளம் ஆயிற்று என்றுமொரு கதை நிலவுகிறது.
 இந்தப் பெயருக்கான காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் சிலர் அழகாக விளக்கியுள்ளனர். அந்தக் காரணத்தைப் புரிந்துகொள்ள, பழவூர் அணைக்கட்டுக்குச் செல்லவேண்டும். நாம் ஏற்கெனவே கண்டுவிட்ட அணைக்கட்டுதான் இது. இருந்தாலும், நினைவுபடுத்திக் கொள்வோம். பழவூர் அணைக்கட்டின் வடக்கு முனையில் பழவூர்; தெற்கு முனையில் மேலச்செவல். மேலச்செவல் பகுதியில், பழவூர் அணைக்கட்டிலிருந்து கால்வாய் ஒன்று புறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட பசவப்பபுர-சாணாண்குளம் வரைக்கும் இக்கால்வாய் ஓடுகிறது என்றாலும், பிரதானமாக மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளுக்குப் பயன் தந்ததால், பாளையங்கால் அல்லது பாளையன் கால்வாய் என்றே இது வழங்கப்பட்டது (இப்போதும் வழங்கப்படுகிறது).
 (தொடரும்...)
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT