வெள்ளிமணி

புத்தொளி பெற்ற விண்ணமங்கலம் திருக்கோயில்!

தினமணி

காஞ்சி மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள சிதிலமடைந்த பழைமையான சிவன் கோயில் புத்தொளி பெற்று ஜூலை 8 -ஆம் தேதி கும்பாபிஷேக வைபவம் காண உள்ளது. 
சென்னையிலிருந்து வரலாற்றுப் புகழ் பெற்ற உத்திரமேரூர் செல்லும் வழியில் நெல்வாய் கூட்டுச் சாலையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. காசிக்கு இணையான பாலாற்றின் வடகரையில் உள்ளது இத்தலம். திருமால் உலகளந்த பெருமாளாக அருள்புரியும் பொழுது இவ்வூரில் ஒரு பாதமும் மற்றொரு பாதத்தை (திருவடியை) விண்ணுலகத்தில் வைத்ததால் இவ்வூர் "விண்ணமங்கலம்' என்று அழைக்கப்படுவதாக ஒரு கர்ணபரம்பரைத் தகவலை ஊரார் கூறுகின்றனர். இவ்வூரின் பெருமாள் கோயிலின்  எதிரே விஜயநகர மன்னர் முதலாம் புக்கர் காலத்தில் வாணிகன் ஒருவனால் அமைக்கப்பட்ட கல்செக்கு கல்வெட்டு (14 -ஆம் நூற்றாண்டு) பொறிப்புடன் காணப்படுவது இவ்வூரின் தொன்மைச் சிறப்புக்கு அடையாளமாக விளங்குகிறது.
இயற்கை வளம் தவழும் இவ்வூரின் வடகிழக்கு மூலையில் வயலின் நடுவே கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளாக இக்கோயில் 
வழிபாடு இல்லாமல் முள் செடிகள் முளைத்து இடிந்து போய் கிடந்தது. இவ்வூரில் உள்ள ஆன்மீக பக்தர்கள் இணைந்து இக்கோயிலை புதியதாக கட்டியுள்ளனர். இது மிகவும் பாராட்டப்பட வேண்டிய திருப்பணி. 
கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபத்துடன் கோயில் விளங்குகின்றது. முன் மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் விசாலாட்சி சந்நிதி கொண்டிருக்கிறார். தேவகோட்டங்களில் உரிய தெய்வத் திருமேனிகளை எழுந்தருளவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கில் சண்டிகேசுவரர் சந்நிதி, வடகிழக்கு மூலையில் நவக்கிரக சந்நிதி மற்றும் வடக்கு பக்கம் உள்ள வேப்பமரத்தினடியில் நாக பிரதிஷ்டையும் செய்யப்பட்டு உள்ளது. வில்வமரமும் தல விருட்சமாக வளர்ந்து வருகிறது. 
இறைவன் லிங்கத் திருமேனிகொண்டு காசி விசுவநாத சுவாமி என்ற திருநாமத்துடன் அருள்புரிகின்றார். காண்போரை பரவசமடையச் செய்யும் திருமேனி. இன்னும் நிறைவேற வேண்டிய பணிகளாக தரைதளம், சுற்றுசுவர் கட்டுதல் மற்றும் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டிய தண்ணீர் பெற ஆழ்துளை அமைத்தல் போன்றவை மீதமுள்ளன. அவைகள் இனிது நிறைவேற பக்தர்கள் அவசியம் பங்கேற்று உதவிடல் வேண்டும். நம் குலம் தழைக்கும் செங்கற்பட்டிலிருந்து தடம் எண்: 7, பேருந்து இவ்வூர் வழியே செல்கிறது. ஷேர் ஆட்டோ வசதிகளும் உண்டு. 
தொடர்புக்கு:  93807 72507 / 97864 90888.
- கி.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT