வெள்ளிமணி

மக்களுக்காக விரதமிருக்கும் மகமாயி!

DIN

தீயசக்திகளை அழித்து, நல்லவர்களைக்காக்க அன்னை பராசக்தி எடுத்த பல ரூபங்களைப்பற்றி தேவிபாகவதமும், மற்ற புராணங்களும், மந்திர தந்திர சாஸ்திரங்களும் உயர்வாகப் பேசுகின்றன. இதில் மாரியம்மன் ரூபமும் ஒன்று. மாரியம்மன் என்று நினைத்த மாத்திரமே நினைவில் வருவது சமயபுரம்தான். மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரமாகும். திருச்சி அருகில் உள்ள மிகவும் புகழ்பெற்ற இத்திருத்தலம் தென்னிந்தியாவில் முக்கியமான கோயிலாகும். அன்னை இத்திருத்தலத்தில் வந்தமர்ந்ததே ஒரு வரலாற்று நிகழ்வாகும். தன் கண் பார்வையாலேயே பல கோடி பக்தர்களை தன்பால் ஈர்த்து அருள்பாலிக்கிறாள் சமயபுரத்தாள்.
 மானிடர்களாகிய நாம் அம்பிகைக்கு நேர்ந்து கொண்டு விரதமிருப்பது வழக்கம். ஆனால் கருணையே உருவான இந்த மாரியம்மன் மக்களுக்காக விரதமிருக்கிறாள் என்பது ஓர் ஆச்சரியமான தகவல் அல்லவா? அதுவும் பச்சைப்பட்டினி விரதமாகும். இருபத்து எட்டு நாள் விரத நாட்களில் துள்ளுமாவு, நீர்மோர், கரும்புபானகம், இளநீர் போன்றவை தான் அம்மனுக்கு நிவேதனம். சமைத்த உணவு எதையும் படைப்பதில்லை. மா விளக்கு சமர்ப்பித்தலும் கூட கிடையாது. எதற்காக இந்த விரதம்? பருவ காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் சீதோஷ்ண நிலை தாக்கங்களினால் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல சௌபாக்கியங்களுடன் நலமுடன் வாழ அம்மனே பக்தர்களுக்காக இந்த விரதம் மேற்கொள்கிறாள் என்று ஐதீகம்.
 இத்திருத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மாசிமாதம் கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழா முக்கியமாகும். கத்திரி வெயிலின் தாக்கத்தை தாயாய் இருந்து தான் ஏற்றுக்கொண்டு மக்களை குளிரவைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தைத் தணிக்கவே பூ மாரி பொழியப்படுகின்றது. இந்த விழாவில் தமிழகத்தில் மட்டுமில்லாது அனைத்து மாநிலங்களிலிருந்தும் உள்ள பக்தர்களின் காணிக்கை மலர்கள் சமர்ப்பிக்கப்படுகிறது. திருவிழா அன்று (இவ்வாண்டு மார்ச் - 10) காலை 8.00 மணி அளவில் அம்பாளுக்கு பச்சைபட்டினி விரத காப்பு கட்டுதல் நடைபெறும். கணபதி பூஜை முடிந்தவுடன் பூச்சொரிதல் ஆரம்பமாகும். முதலில் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்க நாதஸ்வாமி திருக்கோயிலிருந்து மேளதாளத்துடன் கோயில் யானை மேல் கொண்டுவரும் புஷ்பங்களைச் சமர்ப்பித்தப் பிறகுதான் மற்ற பக்தர்களின் புஷ்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது அண்ணனாகிய அருள்மிகு ரங்கநாத ஸ்வாமி தங்கைக்கு அளிக்கும் மரியாதையாகக் கருதப்படுகிறது. கருவறையில் அம்மன் சிரசு மட்டும் தான் அன்று தரிசிக்க முடியும் என்ற அளவிற்கு பூச்சொரிதலுக்காக கூடை கூடையாக பூக்கள் அன்று முழுவதும் வந்த வண்ணம் இருக்கும்.
 இந்த பூச்சொரிதல் விழாவில் பங்கேற்பதற்கு சென்னையிலிருந்து ஜி.சிதம்பரம் ஐயர் என்பவரால் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் பூச்சொரிதல் விழா குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு கடந்த 43 வருடங்களாக சென்னையிலிருந்து அனைத்து வித வாசனை புஷ்பங்களை ஏற்பாடு செய்து அம்பாளின் அருளோடு புஷ்ப அபிஷேகம் செய்கிறார்கள். விரதம் முடிவில் மகாஅபிஷேகம் ஒன்றினையும் நடத்துகிறார்கள். இந்த கைங்கர்யம் தொடர்ந்து நடைபெற பக்தர்கள் ஆதரவு அளித்து ஸ்ரீ சமயபுரத்தாளின் பேரருளுக்கு பாத்திரராகலாம்.
 தொடர்புக்கு: 97898 56037 / 98407 32978.
 - எஸ்.வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT