ஞாலத்தின் ஞானஒளி!
இரண்யகசிபுவின் உடன் பிறந்தவன் இரண்யாட்சன் என்னும் அசுரன். தன் வலிமையால் பூமியை பாயாகச் சுருட்டி கொண்டு கடலில் மூழ்கி மறைந்து விட்டான். தேவர் முனிவர் முதலியோர் திருமாலிடம் வேண்டினர்.
இரண்யகசிபுவின் உடன் பிறந்தவன் இரண்யாட்சன் என்னும் அசுரன். தன் வலிமையால் பூமியை பாயாகச் சுருட்டி கொண்டு கடலில் மூழ்கி மறைந்து விட்டான். தேவர் முனிவர் முதலியோர் திருமாலிடம் வேண்டினர். திருமால் மகாவராகமாக திருவவதாரம் செய்து அவனுடன் போர் செய்து வளைந்த கூரான கோட்டினால் குத்தி கொன்றார். பாதாளத்தில் இருந்த பூமிதேவியை அதே கோட்டில் தாங்கிக்கொண்டு வந்து இவ்வுலகை விரித்து அருளினார் என்பது வராக அவதார வரலாறு ஆகும். சங்க இலக்கியமான பரிபாடல் வராக அவதாரத்தைக் குறித்துப் பேசுகிறது. வராகப் படிமங்களை, அமைப்பைக் கருதி ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாகக் குறிப்பர்.
வட இந்தியா: ஸ்ரீ ஸ்வேத வராக கல்பம் என அழைக்கப்படும் இப்பூமியில் ஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து கோயிலில் உள்ள வராக சிலை தற்போது உள்ளவற்றில் தொன்மையானதாகும். வடஇந்திய மதுரா நகரில் துவாரகீஷ் கோயிலுக்கு அருகில் ஆதிவராக மூர்த்திக்குத் தனிக்கோயில் உள்ளது. செந்நிறத் தோற்றம் கொண்டு லால் வராகர் எனும் உக்ரமூர்த்தியும், சற்றுத் தொலைவில் வெண்ணிறத் தோற்றம் கொண்ட சாந்தமாய் அருள் வழங்கும் ஸ்வேத வராக மூர்த்தியும் எழுந்தருளி அருள்கின்றனர். புஷ்கரில் உள்ள பிரசித்தி பெற்ற பிரம்மா கோயிலில் வராகமூர்த்தி தனி சந்நிதியில் அருள்கிறார்.
ஜெய்ப்பூரில், கேந்த்ரபராவில் யக்ஞவராக மூர்த்தியின் கோயில் உள்ளது. ஹரியானாவில், ஜின்ட் மாவட்டத்தில் வராக கிராமத்தில் சுயம்பு வராகர் ஆலயம் உள்ளது. மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில் வராக மூர்த்திகள், ஒடிசாவில் அவுல் எனும் ஊரில் லட்சுமி வராகர் கோயில்கள் பழைமை ஆனவை. ராஜஸ்தான், ஜலோர் மாவட்டத்தில் உள்ள பின்மல் நகரத்திலுள்ள வராஹ் ஷ்யாம் மந்திர் ஆகியவையும் தொன்மையானதாகும்.
கர்நாடகா: மைசூர், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லஹள்ளி பூக்கனகரேவில் பூவராகர் ஆலயம் உள்ளது.
கேரளா: திருவனந்தபுரத்தில் அனந்தபத்மநாப சுவாமி ஆலயத்திற்கு 1 கி.மீ. தொலைவில் லட்சுமியுடன் வராக மூர்த்தி தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார். எர்ணாகுளம் கொடுங்கல்லூர் பாதையில், வரபுழா எனும் தலத்தில் 450 ஆண்டுகள் பழைமையான ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தியுடன் வராக மூர்த்தியும் தரிசனம் தருகிறார். கொச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் சேரை எனும் தலத்தில் அழீக்கல் வராக மூர்த்தி திருவருள் புரிகிறார். கேரளம், இடுக்கி மாவட்டம் பன்னூர் தொடுபுழாவில் வராக மூர்த்திக்கென தனி ஆலயம் உள்ளது.
ஆந்திரா: திருமலை (திருப்பதி) புஷ்கரணிக்கரையில் வராக மூர்த்தி விசேஷமாக வழிபடப்படுகிறார். ஸ்ரீநிவாசருக்கே இடம் தந்த மூர்த்தியாதலால் முதல் நிவேதனம் இந்த வராகருக்கே செய்யப்படுகிறது. விசாகப்பட்டினம், வால்டேரில் உள்ள சிம்மாசலத்தில் லட்சுமிநரசிம்மரும் வராக மூர்த்தியும் இணைந்து ஒரே உருவில் அருள்கிறார்கள்.
தமிழகம்: பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்திய காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பரங்குன்றம் கோயில்களில் வராகச் சிற்பங்கள் உள்ளன. விருத்தாசலம் அருகே, ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை வராக வடிவில் வந்து அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராக மூர்த்தியாய் எழுந்தருளியுள்ளார். நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் மிகவும் வரப்பிரசாதியாக, ஆதிவராகர் கோயில் கொண்டருள்கிறார். 108 திவ்ய தேசங்களில் ஒருவரான கள்வர் பெருமான், தொடக்கத்தில் ஆதி வராகர் என்ற பெயரில் வணங்கப்பட்டார்.
செங்கல்பட்டை அடுத்த திருமலைவையாவூர் தலத்தில் லட்சுமி வராக மூர்த்தியும் கும்பகோணத்தில் ஆதிவராகப் பெருமாளுக்கு என பழைய கோயில் ஒன்றும் உள்ளன. சென்னை அருகே திருவிடந்தையில் 365 கன்னியரை ஒரே கன்னிகையாக்கித் தன் இடபாகத்திலேற்று அமர்த்தி அருளும் வராக மூர்த்தியை தரிசிக்கலாம் . இவர் நித்யகல்யாணப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார்.
மல்லை வராகர்: கடல் மல்லை எனப்படும் மகாபலிபுரம் தலத்தை, பூதத்தாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் இரண்டு பதிகங்களில் மங்களாசாசனம் செய்துள்ளனர். இங்கு அர்ச்சா ரூபியாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ வராக பெருமாளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் உள்ள மல்லாபுரம் சேத்திர மகாத்மியம் விளக்குகிறது. மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் வராக மூர்த்தங்களில் இவரே மிகப்பழைமையானவராக கருதப்படுகிறார்.
இங்கு, ஹரிசேகரவர்மன் என்னும் ஒரு மன்னன் தினமும் சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள திருவிடந்தைக்கு சென்று பூவராகரான நித்ய கல்யாணப் பெருமாளை தரிசனம் செய்து விட்டு மல்லாவரத்தில் தனது அரண்மனை வந்து திருவாராதனம் முடித்த பின்பே தினந்தோறும் 4000 பக்தர்களுக்கு உணவளித்து பின்னர் உண்பதை கைக்கொண்டிருந்தான்.
ஒரு நாள் வராகர், திருவிடந்தை பூமி பிராட்டியைச் சிறுபெண்ணாக்கி ஒரு முதியவர் வேடத்தில் அழைத்துக் கொண்டு மாமல்லைக்கு வந்தார். திருவிடந்தை புறப்பட்டுக் கொண்டிருந்த ஹரிகேசவர்ம மன்னனிடம் பசிக்கு உணவு கேட்டார். தான் திருவிடந்தை சென்று எம்பெருமானைத் தரிசித்த பின்னரே உமது பசி தீர்க்க இயலும் என்றான். "அதுவரை என்னால் பசி பொறுக்க இயலாது எனக்கு உணவிட்டுப்போ' என்று பெருமாள் சொன்னார். சற்றே யோசித்த மன்னன் இந்த முதியவனையே திருவிடந்தைப் பெருமாளாக நினைத்துக் கொண்டு முறைப்படியான பூஜைமுறைகளை மேற்கொண்டு உணவு கொண்டு வரும் வேளையில் முதியவரான இந்த வராகப் பெருமாள் தேவியை தனது வலப்பாகத்தில் வைத்துக் கொண்டவாறு ஹரிசேகர வர்மனுக்கு காட்சி கொடுத்தார்.
இங்கே தன் வலப்பாகத்தே வைத்து காட்சி கொடுத்து ஞானஉபதேசம் செய்தார். எம்பெருமான் எப்போதும் தனது வலமார்பினைப் பிராட்டிக்குத் தந்திருப்பர். திருவிடந்தையில் திருமணக்கோலத்தில் நித்ய கல்யாணப் பெருமாளாகக் காட்சியளித்தார். ஆனால் இவ்விடத்தில் ஏனப்பிரானாக நிலமங்கைத்தாயாருடன் காட்சி தந்தார். ஞானத்தின் ஒளியுருவை, ஞான உருவாகக் காட்டப்படும் ஸ்ரீ வராகருக்கு ஹரிசேகரவர்மனால் காட்சி தந்த அதே இடத்தில் ஒரு குடவரைகோயில் அமைக்கப்பட்டது.
கடல்மல்லையில் தலசயனப்பெருமாள் கோயில் அமைவதற்கு முன்பே ஆதிவராகப் பெருமாள் கோயில் இருந்தது. இப்போதும் அந்தத்தலம் இங்குள்ள கலங்கரை விளக்கத்திற்குச் செல்லும் பாதையின் புறத்தே குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. திருக்கடல் மல்லையில் எழுந்தருளிய எம்பெருமான் தனது வலக்காலை ஆதிசேடன் மீது வைத்துக் கொண்டும் வலது துடையின் மீது பூமிப்பிராட்டியைத் தாங்கிக் கொண்டுமுள்ளார்.
சிற்பக்குடைவரை: பல்லவர்காலக் குடவரைக் கோயிலாக இருப்பதால் தென்புறம் நோக்கி கங்காதீஸ்வரரும் மகேந்திரவர்ம பல்லவன் துணைவியருடன் சிற்ப வடிவில் காட்சி தருகின்றார். மேற்கு நோக்கி கஜலஷ்மியும் மகாவிஷ்ணு நின்ற கோலத்திலும் பிரதானமாக வராகர் சந்நிதியும் அடுத்து சங்கர நாராயணர், சாந்த துர்க்கையும், பிரம்மா நின்ற கோலத்திலும் சிற்பவடிவிலும் காட்சி தருகின்றனர்.
வராகர் தலங்களில் சித்திரை ரேவதி அவதார தினமாகக் கொண்டாடப்பட்டாலும் கடல் மல்லையில் மட்டும் சித்திரை உத்திரட்டாதி அவதார தினமாகக் கொண்டாடப்படுகிறது. மாசிமகத்தில் ஆதிவராகர் கருடவாகனத்தில் கடலுக்கு புறப்பட்டுச் செல்லுவதும் பூதத்தாழ்வார் சாற்றுமுறையில் 5 -ஆம் நாள் இத்திருக்கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் செய்வதும் சிறப்பான உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது
பிரிந்த தம்பதியர் சேரவும், நிலம் தொடர்பான பிரச்சினைக்காக வேண்டிக் கொள்ளுவதும், பலனடைவதும் சிறப்பான பிரார்த்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன.
தொடர்புக்கு: 94449 39164/ 98409 85753.