தேவன் தம் மக்களை காக்க சிம்சோனை ஏற்படுத்தினார்
ஆற்றல் இல்லாத மனிதரே இல்லை. இறைவன் மனிதனுக்கு சிறப்பான ஆற்றல்களைத் தந்துள்ளார்.
ஆற்றல் இல்லாத மனிதரே இல்லை. இறைவன் மனிதனுக்கு சிறப்பான ஆற்றல்களைத் தந்துள்ளார். ஒரு தனிமனிதன் சிறந்த ஆற்றல் பெற்று, தனக்கும் தன் மக்களுக்கும் பாதுகாவலனாக செயல்பட்டு, அவர்களுக்கு வரும் துன்பம், வறுமை, நோய், பஞ்சம், எதிரிகளால் வரும் சண்டைகள், போர்கள் போன்ற நேரங்களில் அவ்வாற்றல் பெற்றவர் தெய்வத்தால் சிறப்பான பலம்பெற்று மக்களைக் காப்பாற்றுகிறார்.
அவ்வாற்றல் மிகவும் அசாதாரணமாக, மிகப்பெரிய ஆற்றலாக வெளிப்படும். அதுபோன்றவர்கள் வரலாற்றில் போற்றப்படுகின்றனர்.
வேதாகம வரலாற்றில் இஸ்ரவேல் மக்கள் கானான் தேசத்தில் வாழ்ந்தனர். அவர்களிடம் போர், சண்டை போன்ற போர்க்குணங்கள் இல்லை. மிகவும் சாந்த குணம் உள்ளவராகவும், தெய்வபக்தி உள்ளவராகவும் இருந்தனர். ஆனால், மற்ற மக்கள் தங்களுக்கு ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டனர். அவர்கள் ஆட்சி செய்து தம் மக்களைப் பாதுகாத்தனர்.
"கடவுளே தங்களுக்கு அரசர். வேறு மனித அரசர் வேண்டுவதில்லை' என இஸ்ரவேலர் மக்கள் வாழ்ந்தனர். பலமில்லாத இம்மக்களை பெலிஸ்தியர்கள் ஆட்சியாளர்களாக இருந்து ஆண்டனர். இஸ்ரவேல் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இக்காலத்தில் இஸ்ரவேல் மக்களுள் ஆற்றல் மிக்கவர்கள் தோன்றி நியாயாதிபதிகள் என்று நியாயம் விசாரித்தார்கள். மக்களைப் பிற இனத்தவரிடமிருந்து காப்பாற்றினார்கள்.
மனோவா என்பவர் தம் மனைவியுடன் பிள்ளை இல்லாமல் வாழ்ந்தார். கடவுளின் தேவ தூதன் தோன்றி "நீ ஓர் ஆண்மகனைப் பெறுவாய். அவன் ஆற்றல் மிக்கவராக வளர்வான். நசரேய விரதம் கடைப்பிடிப்பான். அவன் தலைமுடியை சவரக் கத்தியால் சிரைக்கக் கூடாது. அவன் ஆற்றல் அவன் தலை முடியில் உள்ளது. நீ அவனைப் பெற்றெடுக்கும் வரைக்கும் மதுபானத்தையோ, திராட்சை ரசத்தையோ குடிக்கக் கூடாது' என்றார்.
அப்படியே ஆண் மகன் பிறந்தபோது அவனுக்கு "சிம்சோன்' என்று பெயரிட்டு வளர்த்தனர். அவன் தன் இன மக்களுக்கு பாதுகாவலனாக இருந்தான். பெலிஸ்தியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினான். தன் பெலிஸ்தியர் மனைவியை வேறு ஒருவருக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டதால் சிம்சோன் கோபம் கொண்டு 300 நரிகளைப் பிடித்து, அவற்றின் வால்களில் தீப்பந்தம் கட்டி, கோதுமை விளைந்த நிலத்தில் அனுப்பி பெரும் சேதம் உண்டாக்கினான்.
ஒருசமயம் புதிய கயிற்றால் கட்டி அவனை பெலிஸ்தியர் கையில் ஒப்புக்கொடுத்தார்கள். சிறைபிடித்து போகும் வழியில் ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பை எடுத்துத் தாக்கி, ஆயிரம் பேரைக் கொன்று போட்டான் சிம்சோன். பெலிஸ்தியரால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை.
சிம்சோனுக்கு தெலீலாள் என்ற மிக அழகுள்ள பெண்ணின் நட்பு கிடைத்தது. சிம்சோன் அவள் வீட்டுக்கு வந்து இரவு தங்குவான்.
பெலிஸ்தியர் தெலீலாளிடம் நயமாகப் பேசி, "சிம்சோனின் பலம் எங்குள்ளது? அவனை எப்படி வெற்றி கொள்ள முடியும். ரகசியம் அறிந்து சொல்' என்றனர். தெலீலாள் சிம்சோனிடம் நயமாக பேசி கேட்டாள்.
சிம்சோன் தன்னை ஏழு அகதனி கயிற்றால் கட்டினால் தன் ஆற்றல் போய்விடும் என்றான். ஆனால், கட்டிய கயிற்றைத் தன் பலத்தால் அறுத்துப் போட்டான். மேலும் சணல் கயிற்றால் கட்டினால் பலம் போய்விடும் என்றான். ஆனால் அவ்வாறு கட்டிய போதும் கயிற்றை அறுத்துப் போட்டான். தெலீலாள் மிகவும் நயந்து கேட்டபோது தன் பலம் தலை மயிரில் உள்ளது. பிறந்தது முதல் தலைமுடி சிரைக்கப்படவில்லை என்று தன் நசரேய விரதத்தை வெளிப்படுத்தி விட்டான்.
அன்று இரவு சிம்சோனின் தலை மயிர் சிரைக்கப்பட்டது. அவன் பலம் கடவுளின் ஆவி போய்விட்டது. சிம்சோன் பிடிபட்டான். அவனின் இரு கண்களைக் குருடாக்கினர். சிறையில் வைத்தனர்.
பெலஸ்தியரின் பண்டிகையில் சிம்சோனை வைத்து வேடிக்கை காட்ட பெரிய மண்டபத்தில் பெலிஸ்தியரின் ஐந்து ராஜாக்கள் மற்றும் உயர் பதவியில் உள்ளவர்கள் அமர்ந்திருந்தனர். குருடனாகிய சிம்சோன் மண்டபத்தின் முக்கிய இரு தூண்களுக்கு நடுவே நிறுத்தப்பட்டான். வேடிக்கை காட்டப்பட்டான்.
சிம்சோன் தலையில் கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது. இரு தூண்களையும் கையில் ஊன்றித் தள்ளினான். பெரிய மண்டபக் கூரை அப்படியே சிம்சோனோடு விழுந்தது. எல்லோரும் மரித்துப் போயினர்.
கர்த்தர் நமக்குக் கொடுக்கும் ஆற்றலை நமக்கும், பிறருக்கும் பயன் தரும் வகையில் பயன்படுத்துவோம். இறையருள் நம்மோடு.