பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் "லலிதா சஹஸ்ரநாமம்' இயற்றப்பட்டது என்பது வரலாறு.
திருமீயச்சூர் ஸ்ரீலலிதாம்பிகை கோயிலில் "லலிதா சஹஸ்ரநாமம்' இயற்றப்பட்டது என்பது வரலாறு. இங்கு நவகிரகங்கள் எல்லாம் சர்ப்ப வடிவிலேயே இருப்பது ஓர் அபூர்வக் காட்சி. சக்திவாய்ந்த இந்த அம்பிகையை தரிசித்தால் தடைகள் இன்றி காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே இடுக்கம்பாளையத்தில் உள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில் கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாறு. நவகிரக தோஷ நிவர்த்தித் தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஈரோடு அருகில் உள்ளது பூந்துறை. இங்குள்ள கோயிலில் முருகப் பெருமான் ஆறுமுகங்களுடன் வள்ளி தெய்வானை சமேதராகக் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் வழிபாடு செய்தால் திருமணத் தடை நீங்கும், பிள்ளைப்பேறு பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
நாகப்பட்டினம் - நன்னிலம் அருகே உள்ளது திருக்கண்ணபுரம் சௌரி ராஜ பெருமாள் கோயில். இங்கு எழுந்தருளியுள்ள நீலமேகப்பெருமாள் பக்தர்களின் குறைகளை எல்லாம் தம்மிடம் எடுத்துக் கொள்ளும் விதமாக இரண்டு கைகளையும் பக்தர்களை நோக்கி விரித்தபடி காட்சியளிக்கிறார். இக்கோயிலில் வழிபட்டால் வரவேண்டிய சொத்துகள் வந்து சேரும் என்பது ஐதீகம்.
திருவிடைமருதூரில் மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இங்குள்ள இறைவன் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார் என்பது கோயில் புராணம். மனநலம் குன்றியவர்களை இங்கு அழைத்து வந்தால் குணம் அடைகிறார்கள். அகிலாண்ட நாயகி ஸ்ரீபிரகத் சுந்தர குஜாம்பிகை அருள்பாலிக்கும் அபூர்வத் திருத்தலம் இது.