சஞ்சீவி பாகவதர் நூற்றாண்டு!
திருவையாறில் தியாகப்பிரும்மம் தியாகராஜரின் ஜயந்தியைப் போலவே, புதுக்கோட்டையில் ஆண்டு தோறும் மே மாதத்தில் நடைபெறும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஜயந்தி மகோற்சவத்தில் இந்தியாவின் பல பக
திருவையாறில் தியாகப்பிரும்மம் தியாகராஜரின் ஜயந்தியைப் போலவே, புதுக்கோட்டையில் ஆண்டு தோறும் மே மாதத்தில் நடைபெறும் ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஜயந்தி மகோற்சவத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக் கணக்கானோர் வந்து பங்கேற்றுச் சிறப்பிப்பார்கள்.
நாம சங்கீர்த்தன இசைக்கலைஞர்கள் ஒன்றுசேரும் இந்த நரசிம்ம ஜயந்தி மகோற்சவத்தை புதுக்கோட்டையில் பூஜ்யஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவத சுவாமி 1919-இல் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து அவரது புதல்வர் ஸ்ரீசஞ்சீவி பாகவத சுவாமிகள் நடத்தி வந்தார். இந்த மகோற்சவத்தின் நூற்றாண்டு விழா கடந்த 2019-இல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1920 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 -ஆம் தேதி பிறந்த சஞ்சீவி பாகவதர், தனது தாய் மங்கள நாயகி அம்மாளின் வயிற்றில் வளரும் பொழுதே ராம நாம சங்கீர்த்தனத்தைக் கேட்டு வளர்ந்தவர். சங்கீதத்திலும், பஜனையிலும் தந்தையிடம் பயிற்சி, தேர்ச்சி பெற்றார்.
இளம் வயதில் பல கிலோமீட்டர் தூரம் வெறுங்காலுடன் நடந்து சென்று பஜனை மூலமாக பக்தியைப் பரப்பினார். பின்னர், பேருந்து மற்றும் ரயில் வசதிகள் வந்தபிறகு தேசத்தின் பல ஊர்களுக்கும் சென்று பஜனை மூலமாக பக்தி நெறியூட்டினார்.
யாரிடமும் அவர் எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைவரையும் பாட வைப்பார். குடும்பத்தில் ஒவ்வொருவரும் கலியுகத்தில் கடவுளை அடைவதற்கு எளிதான வழிமுறை பகவான் நாமத்தை உச்சரிப்பதே என்பதை அனைவரிடமும் வலியுறுத்துவார்.
அவர் பயணம் செய்யாத சமயங்களில், தனக்கு வரும் ஒவ்வொரு கடிதத்திற்கும் அவர் தனிப்பட்ட முறையில் பதிலளிப்பார். கடவுள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியின் மூலம் புத்திசாலித்தனமான ஆலோசனைகளையும், பிரச்னைகளிலிருந்து விடுபடுவதற்கு நல்ல உபாயங்களையும் சொல்லுவார்.
சஞ்சீவி பாகவத சுவாமி திடமான உறுதியும், மிகுந்த சமத்துவமும் கொண்டவர். அவர் ஒரு வைராக்ய புருஷர். நிர்ணயித்த அன்றாடக் கடமைகளை (நித்ய-கர்மா) ஒருநாள் கூடத் தவற விட்டதில்லை.
அவர் காலையில் உஞ்சவிருத்தி பஜனை செய்து, வீடு வீடாகச் சென்று ஆசீர்வாதங்களை வழங்குவார். ஒவ்வொரு வீட்டினரின் நலனுக்காகவும் ஜபம் செய்வார். பிறகு மாலையில் நாம சங்கீர்த்தனத்தைத் தொடங்குவார்; இது பெரும்பாலும் அடுத்தநாள் அதிகாலை வரையில் தொடரும்.
அவ்வளவு நீண்ட நேரம் அவர் நாம சங்கீர்த்தனத்தை நிகழ்த்துவது நம்மைப் பிரமிக்கச் செய்து பரவசத்தை ஏற்படுத்தும். பக்தி உணர்ச்சியைத் தூண்டும் மனப்பான்மையுடன் அவர் அதைச் செய்வார். அவரைச் சந்தித்த அனைவருக்கும் அது ஒரு சுகானுபவமாக அமையும்.
பஜனை சம்பிரதாயத்திற்கு வழி வகுத்தவர். கர்நாடக இசையின் பல நுணுக்கங்களை அறிந்திருந்தாலும் அவரது குரல் வளம், எளிய நடத்தை, உணர்ச்சிவசமாகப் பாடும் விதம் இவையனைத்தும் இணைந்து கேட்போரை எல்லாம் மகிழ்வித்து புத்துணர்வளிக்கும்.
பஜனையில் அவருக்கு நேரக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது. பணத்தை எதிர்பார்த்ததில்லை. வேறு எந்த வருமான ஆதாயமும் இல்லாத போதிலும், அவர் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளிப்பார். தேவைப்படுபவர்களுக்கு பண உதவியும் செய்வார். அவர் கிரஹஸ்தரின் உடையில் ஒரு துறவியாக இருந்தார். ஸ்ரீமத் பாகவதத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு உண்மையான பாகவதருக்கு உதாரணமாக அவர் விளங்கினார். கடவுளை அடைவது ஒன்றே குறிக்கோளாக நிராபக்ஷம், முனிம், சாந்தம், நிர்வரம், சமதர்ஷனம் போன்றவை அமைந்து அவரின் ஒவ்வொரு செயலிலும் இந்த அருங்குணங்கள் வெளிப்பட்டன.
சஞ்சீவி பாகவதர் ஆசார சீலர், அனுஷ்டான புருஷர், தப பலம் உடையவர். தன்னுடைய பஜனை பக்தி மார்க்கத்தினால் பாமர மக்களுக்கும் நல்வழி காட்டியவர். கடந்த 2001-ஆம் ஆண்டு செப்.28-இல் ஜீவசமாதி அடைந்தார். இம்மகானின் 100 -ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில் அவரை மனதில் பிரார்த்தித்து அவரது ஆசிகளைப் பெறுவோமாக.