முகப்பு
வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: மதுரை மீனாட்சி  - 2

நீயாம்சம் பாம்ஸூம் தவ சரண- பங்கேருஹ பவம் விரிஞ்சி: சஞ்சிந்வன் விரசயதி லோகா-நவிகலம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:


நீயாம்சம் பாம்ஸூம் தவ சரண- பங்கேருஹ பவம் 
விரிஞ்சி: சஞ்சிந்வன் விரசயதி லோகா-நவிகலம்

-செளந்தர்ய லஹரி 

""தாயே நீ என் மகளாகப் பிறக்க வேண்டும்!''
இருகை கூப்பி வணங்கினாள் வித்யாவதி.

கந்தர்வலோகத்தில் வசித்த விசுவாவஸூ என்பவனுக்கு சிவனருளால் பிறந்த பெண் வித்யாவதி. ஒரு சமயம் அவளுக்கு பூமியில் உள்ள புண்ணிய தலங்களில் அருளும் அம்பாளை தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் உண்டானது. எனவே, அவளது தந்தை கடம்பவனத்தில் உள்ள சியாமளா தேவியை தரிசிக்கச் சொல்லி அனுப்புகிறார்.

அத்தலமும், தேவியின் அழகும் அவளுக்குப் பிடித்துப்போக அங்கேயே தங்கி அம்பாளுக்குச் சேவை செய்து வந்தாள். அவளின் பக்தியில் மகிழ்ந்த அம்பாள் அவள் முன் தோன்றினாள். 

""உனக்கு என்ன வரம் வேண்டும்?'' சியாமளா தேவி கேட்கிறாள்.

அம்பிகையின் அழகில் மகிழ்ந்த வித்யாவதி, ""தாயே, நீ எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும்'' என்கிறாள். 

""அடுத்த ஜென்மத்தில் உன் மகளாகப் பிறக்கிறேன்'' என்கிறாள் தேவி. அடுத்த ஜென்மத்தில் சூரிய வம்சத்தில் வந்த சூரசேனனின் மகள் "காஞ்சனமாலை'யாகப் பிறக்கிறாள் வித்யாவதி.  பின்பு மலையத்துவஜ பாண்டியனை மணம் முடிக்கிறாள். 

இவர்களுக்குக் குழந்தை இல்லாததால் சியாமளா தேவியை வணங்கி, அரசன் இந்தக் கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்கிறான். அந்த யாக குண்டத்திலிருந்து மூன்று வயதுக் குழந்தையாக அம்பாள் தோன்றுகிறாள்.

மூன்று தனங்களுடன் பிறந்த தேவியைக் கண்டு மன்னன் கலங்கிய போது, "இவள் தனக்குரிய மணாளனைக் காணும்போது அந்த மூன்றாவது தனம் மறையும்' என்று அசரீரி கேட்கிறது.

மகளுக்கு "சியாமளா' என்று பெயர் சூட்டி, சீரும் சிறப்புமாக ஓர் ஆண்பிள்ளை போலவே சகல கலைகளையும் கற்றுக் கொடுத்து, மதுரையை ஆட்சி செய்யும் பொறுப்பையும் தருகிறான் பாண்டியன். மீன் போல் விழிப்புடன் இருந்து கருணையுடன் காப்பவள் என்பதால் "மீனாட்சி' என்று பெயர்.

திக்விஜயம் செய்த அன்னை ஈசனைக் கண்டதும்  வெட்கித் தலை குனிந்தபோது அவளின் மூன்றாவது தனம் மறைந்தது. ஈசனை மணக்கிறாள் அன்னை. 

மதுரையின் ஆதிபெயர் "கடம்பவனம்'. இந்தக் கோயிலை இந்திரன் கட்டியதாகப் புராணங்கள் கூறுகின்றன. 

விருத்திராசுரனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க, இந்திரன் ஈசனை இங்கு சுயம்புவாகக்  கண்டு பூஜித்து, தோஷம் நீங்கிய இடம். ஈசன் சித்தராக வந்து தன்னுடைய திருவிளையாடல்களை நிகழ்த்திய தலமும் மதுரைதான்.

கோயில் 3,600 ஆண்டுகளுக்கு முன் கட்டியதாகக் கூறப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் முதலாவது மதுரை. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று சிறப்பு பெற்றது மட்டுமல்ல, கட்டடக் கலையில் பல சிறப்புகளையும், ஆச்சரியங்களையும் கொண்டது.

தமிழகத்தின் அடையாளம், முத்திரையாகத் திகழ்கிறது கோயில். பாண்டிய மன்னன் கேட்டுக் கொண்டதற்காக ஈசன் கால் மாற்றி ஆடிய இடம். பஞ்ச சபைகளில் இது வெள்ளி சபை. ஈசன் தன் சூலாயுதத்தால் ஊன்றி உண்டாக்கியது பொற்றாமரைக் குளம். அம்பிகையின் பூஜைக்கு இதில் தாமரை மலர்கள் பூத்தன. இதன் தென்புறம்தான்  திருக்குறள் அரங்கேறியது. எனவே அதன் சுவர்களில் 1330 குறள்களும் எழுதப் பட்டுள்ளன. ஆயிரங்கால் மண்டபத்தில் இருபத்தி இரண்டு இசைத் தூண்கள் உள்ளன. இவைகளெல்லாம் சிற்பக் கலையின் ஆச்சரியங்கள்.

பதினேழு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட இதன் நான்கு புறங்களிலும் பெரிய கோபுரங்களும், உள்ளே எட்டு சிறிய கோபுரங்களும் உள்ளன. தெருக்களுக்கு தமிழ் மாதப் பெயர்கள். இங்கு அன்னை முழு மரகதச் சிலையாக கிழக்கு நோக்கி நின்று அருள் பாலிக்கிறாள். அவள் கையில் உள்ள கிளி, ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அறிந்தவள் அன்னை என்பதைக் குறிக்கிறது. பக்தர்களின் கோரிக்கைகளை மீண்டும், மீண்டும் அம்பாளிடம் கொண்டு செல்கிறது அக்கிளி.

தடாதகை, அபிடேகவல்லி, கற்பூரவல்லி, மரகத வல்லி, சுந்தரவல்லி, கயற்கண்ணி, திருக்காமத்துக் கோட்ட ஆளுடை நாச்சியார் என்று பல பெயர்கள் அன்னைக்கு வழங்கப்படுகின்றன. தேவியின் ஐம்பத்தோரு சக்தி பீடங்களில் ஒன்று. "ராஜமாதங்கி சியாமளா பீடம்' என்று அழைக்கப்படுகிறது. 
தமிழுக்கென்று தனிச் சங்கம் வைத்து வளர்த்த நகரம் மதுரை. ஈசனின் அணிகலனான பாம்பு வட்டமாகத் தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால், "ஆலவாய்' என்றும் ஒரு பெயர். இக்கோயிலில் உள்ள ஒவ்வொரு சிற்பத்திற்கும் ஒரு கதை உண்டு. 

அப்பைய தீட்சிதரின் மகனான நீலகண்ட தீட்சிதர்  பெரும் ஞானி.  அவர் மீனாட்சி உபாசகர். அவரின் ஞானம் அறிந்த திருமலை நாயக்கர் தன் அரசவையில் அவரை முதலமைச்சராக நியமித்திருந்தார். 

அப்போது, அவரது மேற்பார்வையில் சிற்பி சுந்தரமூர்த்தி அரசியின் சிலையை வடிக்கும் பணியைச் செய்து வந்தார். அப்போது ராணியின் வலது தொடையில் ஒரு சில்லு தெறித்து விழுந்தது. மறுபடியும் அதைச் சரி செய்யச் செய்ய மீண்டும் மீண்டும் சில்லு தெறித்து விழுந்தது.

சிற்பி இதனை நீலகண்ட தீட்சிதரிடம் சொல்லி ""என்ன செய்வது?'' என்று கேட்கிறார். தீட்சிதர் தன் ஞான திருஷ்டி மூலம் அரசிக்கு வலது தொடையில் மச்சம் இருப்பதை உணர்ந்து ""சில்லு விழுந்த பகுதி அப்படியே  இருக்கட்டும்'' என்று கூறிவிடுகிறார். 

நடந்ததை அறிந்த மன்னருக்கு தீட்சிதர் மேல் சந்தேகம் வந்து விடுகிறது. அவரைக் கைது செய்ய ஆட்களை அனுப்புகிறார்.

அம்பிகையின் கற்பூர ஆரத்தியில் இருந்த தீட்சிதர், மன்னர் தன்னை சந்தேகப் படுவதில் மனம் வருந்தி அந்த தீபத்தினால் தன் கண்களைப் பொசுக்கிக் கொள்கிறார். 

மன்னர் ஓடோடி வருகிறார். மன்னிப்பு கேட்கிறார்.  தீட்சிதர் அம்பிகையின் மேல் "ஆனந்த சாகர ஸ்தவம்' பாடுகிறார். 108 ஸ்லோகங்களைக் கொண்ட அவற்றைப் பாடி முடிக்கும்போது அவருக்குக் கண்ணொளி கிடைக்கிறது.

அன்னை மீனாட்சி வேண்டுவது அனைத்தையும் தருவாள். பெண்களுக்கு மண வாழ்வு, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வீடு, வாசல், செல்வம் என்று அனைத்தையும் அளித்து, முடிவில் தன் பாதங்களில் அடைக்கலமும் தருவாள்.

பக்தர்களின் இதயத்தில் அமர்ந்து, தன் அளவற்ற கருணையினால் ஜீவன்களைக் காப்பாற்றும் அன்னை மீனாட்சியை நம்பியவர்கள் எப்போதும் துன்பம் அனுபவித்ததில்லை. ஈசனிடம் அடங்குவது போல் அடக்கி, அடங்கி இருவரும் அன்பில் தோய்ந்து அரசாட்சி நடத்தும் இடம் மதுரை.

"பிரம்மன் உன் திருவடித் தாமரைகளில் உள்ள மிக நுட்பமான துகள்களைத் தொகுத்து உலகங்களைத் தடையின்றிப் படைத்தான். ஈசன் அத்துகள்களை நன்றாகப் பொடியாக்கி நெற்றியில் திருநீறு அணியும் முறையைப் பின்பற்றுகிறார்'' என்கிறார் ஆதிசங்கரர் தன் செளந்தர்ய லஹரியில்.

"ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்திவ்வுல 
                                                                                       கெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் 
                                                         என்றன் நெஞ்சினுள்ளே!' 

என்கிறார் அபிராமி பட்டர்.

லலிதா சஹஸ்ரநாமம் அம்பிகையை "கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதா' என்கிறது. அப்படி அனைத்து சக்திகளாலும் பூஜிக்கப்படும் ஆதிசக்தி அவள்.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →