பரிசேயனும் ஆயக்காரனும்!
அன்புள்ளவர், உண்மையுள்ளவர், தியாக குணம் உள்ளவர், உதவும் எண்ணம் கொண்டவர், இறை பக்தியுடையவர் இவர்களிடம் தாழ்மை குணம் இருக்கும்.
அன்புள்ளவர், உண்மையுள்ளவர், தியாக குணம் உள்ளவர், உதவும் எண்ணம் கொண்டவர், இறை பக்தியுடையவர் இவர்களிடம் தாழ்மை குணம் இருக்கும். தாழ்மை, வணக்கத்தையும் பிறரை மதிக்கும் நற்பண்பையும் கொண்டிருக்கும்.
வேதாகமத்தில் இயேசு சொன்ன நிகழ்ச்சி ஒன்று உண்டு. தேவாலயத்திற்கு இருவர் ஜபம் பண்ணச் சென்றார்கள். அவர்களில் ஒருவன் பரிசேயன்; மற்றொருவன் ஆயக்காரன்.
பரிசேயன் மிகுந்த பக்தியுள்ள சமூகத்தைச் சேர்ந்தவன். அவன் இவ்வாறு ஜபம் செய்தான்: ""தேவனே! நான் அநீதியுடையவன், விபசாரகன் போல் இல்லாமல் வாரத்தில் இரு நாள்கள் உபவாசித்து வருகிறேன். என் சம்பாத்தியத்தில் தசமபாகம் செலுத்துகிறேன். என் அருகே நிற்கிற ஆயக்காரன் போல் இல்லாமல் நான் மிகுந்த பக்தி உள்ளவன். என்னை இரட்சியும்!'' என்று வேண்டினான்.
அதேசமயம் ஆயக்காரன் - தன்னை மிகவும் தாழ்ந்தவனாக எண்ணுபவன் - தேவாலயத்துக்கு மிக அருகில் நெருங்காமல், முழங்காலிட்டுத் தன் தலையை உயர்த்தாமல், தன் மார்பில் அடித்துக்கொண்டு இவ்வாறு ஜபித்தான்: ""தேவனே... பாவியாகிய என்னை இரட்சியும்'' என வேண்டினான்.
இறைவன் சொன்னார்: ""பரிசேயன் ஜபம் ஏற்கப்படவில்லை. தன்னைத் தாழ்த்திக் கொண்ட ஆயக்காரனின் ஜபம் ஏற்றுக்கொள்ளப்பட்டது'' (லூக்கா 18:10 -14). இவ்வாறு தன்னைத் தாழ்த்திக்கொண்ட ஆயக்காரன் தெய்வத்தின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டான்.
இயேசுவின் தாழ்மையைப் போற்றுதல் நன்று! வானத்தையும் பூமியையும் நாம் காண்கின்ற எல்லாவற்றையும் படைத்தவர். அவர் சொல்வது நடக்கும், அவர் கட்டளையிட நிற்கும். இத்தகைய பேராற்றல் படைத்த இறைவன் நம்மையும் படைத்தார். மனிதன் மீட்படையவே மனிதனாக அவதரித்தார்.
மனிதனுக்கு வாக்களித்தபடியே ஒரு கன்னியின் வயிற்றில் கருவாகி, உருவாகி, பத்து மாதங்களுக்குப் பின் குழந்தையாகப் பிறந்தார். தெய்வமே குழந்தையாகப் பிறந்தது விந்தையிலும் விந்தை!
ஓர் ஏழை விவசாயியின் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த அவர், கந்தல் துணியால் சுற்றி வைக்கப்பட்டிருந்தார். அவரைக் காண வந்தவர்கள் எல்லாம் ஆடு மேய்ப்பவர்கள், ஏழைகள். இவ்வுலகில் இயேசு 30 ஆண்டுகள் சாதாரண மனிதர் போல் வாழ்ந்தார்.
தன் தாய்க்கும் தகப்பனுக்கும் அடங்கி நடந்தார். தன் தகப்பன் செய்த தச்சுத் தொழிலைச் செய்தார்.
ஏழையின் வீட்டில் எளிய உணவையே உண்டார். ஏழை மனிதர்களிடம் நட்பாய் வாழ்ந்தார். அவரது இறைப்பணி மூன்றரை ஆண்டுகள். மனிதர் மீட்படைய மரண பரியந்தம் தம்மைத் தாழ்த்தினார். இயேசுவின் தாழ்மை நம்மிடத்தில் இருக்கவேண்டும். சக மனிதரை மதித்து அன்பு கொண்டு வாழ வேண்டும்! வாழ்க இயேசுவின் தாழ்மை! என்றும் இறையருள் நம்மோடு!