முகப்பு
வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள்: சங்கரன்கோவில் கோமதியம்மன்  - 4 

""ஈஸ்வரனே உயர்ந்தவர்''- சங்கன்.""இல்லை, மகாவிஷ்ணுவே உயர்ந்தவர்''- பதுமன்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


"ஹரிஸ் த்வா - மாராத்ய ப்ரணத - ஜன செளபாக்ய ஜனனீம் 
புரா  நாரீ பூத்வா புரரிபுமபி - úக்ஷப மனயத்...'

- சௌந்தர்ய லஹரி

""ஈஸ்வரனே உயர்ந்தவர்''- சங்கன்.

""இல்லை, மகாவிஷ்ணுவே உயர்ந்தவர்''- பதுமன்.

இரண்டு நாகராஜாக்களுக்குள் வழக்கமாக எழும் விவாதம் அன்று சிறிது உச்சத்திற்குப் போனது. இருவருக்கும் அடிக்கடி தாங்கள் வணங்கும் கடவுளே பெரிது என்று விவாதம் எழும். அடங்கும். ஆனால் இன்று இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அம்பிகை நினைத்தாள்.

ஒரு ரூபத்தில் சத்வம், காரியத்தில் தாமசம், மற்றொரு ரூபத்தில் தாமசம், காரியத்தில் சத்வம் இருக்கிறது. மற்றபடி சாராம்சத்தில் இருவரும் ஒருவரே. சிவா - விஷ்ணு பேதம் இன்றி அனைத்தும் எல்லையற்ற அந்தப் பிரபஞ்ச சக்தியின் வெவ்வேறு வடிவம் என்று உணர்வதே சிறப்பு. 

ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய "பிரச்னோத்தர ரத்னமாலிகா' என்ற கிரந்தத்தில் "பகவான் யார்?' என்ற கேள்விக்கு "சங்கரனாகவும், நாராயணனாகவும் இருக்கிற ஒருவன்' என்று பதில் கூறியிருக்கிறார். இவர்கள் இருவரும் அடங்கிய உருவமே பராசக்தி. சக்தியின் மற்றொரு உருவமே திருமால். அவளை விட்டுப் பிரிக்க முடியாத ஆதாரப் பொருளே ஈசன்.

"அனைத்தும் ஒன்றே, இருவருக்குள் பேதம் இல்லை' எனக் காட்ட விரும்பிய அம்பிகை ஈசனை வேண்டுகிறாள். ""நாராயணனுடன் இணைந்த உருவமாகத் தாங்கள் காட்சி அளிக்க வேண்டும்'' என்று கூறுகிறாள்.

இறைவன் அவளிடம் ""பொதிகை மலைச் சாரலில் புன்னை மரங்கள் நிறைந்த வனத்தில் சென்று தவம் செய்!'' என்கிறார். அப்போது தேவ மாதர்கள் அம்பிகையை விட்டுப் பிரிய மனமில்லாமல் தாங்களும் தேவியுடன் வருகிறார்கள். 

பசுக்களாக, கனிகள் தரும் மரங்களாக தேவியைச் சுற்றி அமைகிறார்கள். சந்திரனைப் போன்ற முக லாவண்யத்துடன் பசுக்கள் சூழ அம்பிகை தவம் இருந்ததால் "கோமதி' என்றும், "ஆவுடையாம்பிகை' என்றும் அழைக்கப்படுகிறாள்.

ஊசிமுனையில் ஒற்றைக்காலுடன் தவமிருந்த தேவியின் முன் சிவனும், விஷ்ணுவும் இணைந்த  வடிவில் தோன்றுகிறார்கள். ஒருபுறம் மழு, சந்திரன், சடைமுடி, புலித்தோல், மற்றொருபுறம் பீதாம்பரம், சங்கு என அம்பிகை வேண்டிக் கொண்டதற்கு இணங்க சங்கரநாராயணராகக் காட்சி அளித்தார் ஈசன். 

இதையடுத்து, ஒற்றுமையான சங்கன், பதுமன் ஆகிய இரு நாகராஜாக்களும் இங்கு சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தார்கள். நாளடைவில் லிங்கத்தைப் புற்று மூடி விட்டது. மணிக்ரீவன் என்ற தேவன் அம்பிகையின் சாபத்தினால் பூமிக்கு வந்து புன்னைவனக் காவலனாக இருந்தான். அங்கு ஒரு பூந்தோட்டம், அங்குதான் புற்று இருந்தது. அங்கு வளர்ந்திருந்த செடிகளை காவலன் வெட்டும்போது புற்றில் பட்டு அதிலிருந்து ரத்தம் வந்தது.

அதே நேரத்தில் உக்கிர பாண்டியனின் பட்டத்து யானை, திடீரென்று தன் தந்தங்களால் தரையைக் கொத்தி மண்ணில் விழுந்து புரண்டது. ஏதோ விபரீதம் என்று மன்னன் உணரும் நேரத்தில் காவலன் அரசனிடம் வந்து விஷயத்தைக் கூறினான்.

உடனே அங்கு வந்த மன்னன் புற்றை விலக்க உள்ளே லிங்கம் இருப்பது தெரிய வருகிறது. ஈசனுக்கு அங்கு கோயில் எழுப்புகிறான் உக்கிர பாண்டியன். தென்காசி அருகே சுமார் 975 ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய கோயில் இது. 

கோயிலில் முதல் சந்நிதி சங்கரலிங்கம், இரண்டாவது சங்கர நாராயணர், மூன்றாவது சந்நிதியில் கோமதி அம்மன் காட்சி அளிக்கிறாள். சங்கனும் பதுமனும் இறைவனை வழிபட்டு கோமதி அம்மனுடன் தங்கினர். ஒன்பது நிலைகள் கொண்ட கோபுரத்தின் நுழைவு வாயிலில், ஐவகை நந்திகளில் ஒருவரான அதிகார நந்தி தன் மனைவி சுயஞ்சை தேவியுடன் காட்சி அளிக்கிறார்.

இங்கு அம்பிகைக்கு ஈசன் சங்கரநாராயணனாகக் காட்சி அளித்த நாளான "ஆடித் தபசு' விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் மகர மண்டபத்தில் வலக்காலை உயர்த்தி, இடக்காலை ஊன்றியபடி கையில் விபூதிப் பையுடன் நிற்பாள் அன்னை. அன்று மாலை சங்கரநாராயணன் காட்சி அளிப்பார். இருவரும் மண்டபத்திற்குள் செல்வார்கள். பின் ஈசன் அம்பிகையைத் திருமணம் செய்து கொள்வார்.

சங்கரன்கோவில் "பூகைலாயம்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு புற்று மண்தான் பிரசாதம். அம்பிகைக்கு திங்கள்கிழமைகளில் புஷ்பப் பாவாடையும், வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடையும் அணிவிக்கப்படுகிறது.

அம்மன் திருக்கோயில்களில் பொதுவாக ஸ்ரீசக்ரம் தேவியின் பாதத்தடியில்தான் அமைப்பது வழக்கம். ஆனால் இங்கு அம்மன் சந்நிதி முன் உள்ள மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஆக்ஞா சக்கரம்' என்று பெயர். இச்சக்கரத்தின் மீது அமர்ந்து பிரார்த்தித்துக் கொண்டால் நினைத்ததை நடத்திக் கொடுப்பாள் அம்பிகை என்பது நம்பிக்கை.

"தாயே, உன்னை வணங்கினால் கிடைக்காத செளபாக்கியம் இல்லை. இந்த உலகையே வசீகரிக்கும் சக்தி படைத்தவள் நீ. மனிதர்கள் விரும்பும் சகல நலன்களையும் தருபவள் நீ!' என்கிறார் ஆதிசங்கரர். 

தட்ச யாகத்தில் சிதறிய அம்பிகையின் உடல் பாகங்களில் முன் நெற்றியின் உள் பகுதி விழுந்த இடம். தசமஹா வித்யா பீடங்களில் ஷோடசி பீடமாக அமைந்தது சங்கரன் கோவில்.

இங்கு தங்கக் கொடிமரத்துடன், தனிக் கோயிலில் வீற்றிருக்கிறாள் தேவி. பாம்பாட்டிச் சித்தர் குண்டலினி சக்தியாக, பாம்பு வடிவத்தில் அன்னையை வழிபட்ட தலம் என்பதால், இது  கால சர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷம் போக்கும் தலமாகவும், திருமணத் தடைகள் நீக்கி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப் பேறு அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது.

அம்பிகை வாலைக் குமரியாக, அழகின் ஸ்வரூபமாக, கண்கவரும் அழகுடன் புன்னகையும், கனிவுமாகக் காட்சி அளிக்கிறாள். அம்பிகைக்கு நாலுவேளை பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்றன. தங்கப் பலகையுடன் கூடிய பள்ளியறையும் உள்ளது.

தினமும் லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அம்பலவாண தேசிகர் பதித்த மந்திர சக்கரத்தின் மீது மாவிளக்கு வைத்து சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

"கேடாவரும் நமனைக் கிட்ட வாராதே தூரப் 
போடா என்றோட்டி உன்றன் பொற்கமலத் தாள் நிழற்கீழ் 
வாடாவென அழைத்து வாழ் வித்தாலம் மாயுன்னைக் 
கூடாதேயென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே!' 

என்கிறார் அழகிய சொக்கநாதர். 

கேட்டவரம் அளிக்கும் அம்பிகையை வாழ்வில் ஒரு முறையேனும் தரிசித்தாலே வாழ்வதற்கான அர்த்தம். அவள் தன் இருகைகளையும் விரித்து பக்தர்களைக் காக்கும் பிரபஞ்ச சக்தியாக இருக்கிறாள்.

தேடி வரும் பக்தர்களை மட்டுமல்லாமல் காண வேண்டும் என்று மனதிற்குள் நினைத்தாலே கருணைமழை பொழியும் தேவி அவள்!

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →