முகப்பு
வெள்ளிமணி

புத்தாண்டில் திரிசக்ர தரிசனம்!

""2021 ஜனவரி - 1 ஆங்கிலப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவது சிறப்பு. அன்றைய தினம் வளங்களைத் தரக்கூடிய அபூர்வ பொருள்களை முதலில் காண்பதும்,  அம்மன் கோயில்களில் ஸ்ரீசக்ர மகாமேருவை தரிசிப்பதும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

""2021 ஜனவரி - 1 ஆங்கிலப் புத்தாண்டு வெள்ளிக்கிழமையில் வருவது சிறப்பு. அன்றைய தினம் வளங்களைத் தரக்கூடிய அபூர்வ பொருள்களை முதலில் காண்பதும்,  அம்மன் கோயில்களில் ஸ்ரீசக்ர மகாமேருவை தரிசிப்பதும், தேவியை வழிபடுவதும் ஆண்டு முழுவதும் செளபாக்கியங்களைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை'' என்கிறார் குன்றத்தூர் கே.குமார சிவாச்சாரியார். 

குன்றத்தூர் காத்யாயினி அம்மன் கோயிலின் குருக்களான இவர் மேலும் கூறியது: இந்த 2020 -ஆம் ஆண்டில் பல சோதனைகளை மக்கள் கடந்து வந்திருக்கின்றனர். அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படவும், மனக்குறைகள் நீங்கவும், எல்லா நலங்களையும் பெற தெய்வ தரிசனம் தேவையாகும்.  

காத்யாயினி கோயில் வளாகத்தில் அஷ்டலட்சுமி கோபுரக் கருவறையில் இருக்கிறாள் ஸ்ரீஅத்தி விருட்ச மஹாலட்சுமி.  வெள்ளிக்கிழமை பிறக்கும் புத்தாண்டு அன்று காலை 7 மணிக்கு பிருந்தாவனத் திருவறையிலிருந்து ஸ்ரீஅத்தி விருட்ச மஹாலட்சுமி எழுந்தருள்கிறாள். வளம் கூட்டும் ஸ்ரீகற்பக விருட்ச அலங்காரத்துடன் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்காக தரிசனம் தருகிறாள். 

மேலும், யோக கணபதியாக வீற்றிருக்கும் தோரண கணபதி,  பாலமுருகன், தேர் வடிவிலான கருவறையில் எழுந்தருளும் அஷ்டலட்சுமி, கல்யாண மகிழ்ச்சிக்கு வித்திடும் ஸ்ரீகாத்யாயினி, தோஷங்களைஅகற்றும் நாகராஜர் குடும்பம் ஆகிய சுப மூர்த்தங்களை ஆண்டின் தொடக்க நாளில் தரிசித்து செளபாக்கியங்களைப் பெறலாம். 

அயனம் என்பது ஆறு மாதங்களைக் குறிக்கும். திருமண பாக்கியம் வேண்டுகின்ற பக்தர்களின் பிரார்த்தனையை  ஓர் அயன காலத்துக்குள் நிறைவேற்றிக் காத்து அருள்பவள் என்பதால் "காத்யாயினி' என்பது தேவியின் நாமமாயிற்று. மூன்று கிளை வேம்பு இங்கு தல விருட்சமாக உள்ளது. இக்கோயிலின் எதிரில்தான் பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் பெருமான்அவதரித்த இல்லம் அமைந்துள்ளது.  

திருவேற்காட்டில் காக்கும் கருமாரி, மாங்காட்டில் சக்தி காமாட்சி, குன்றத்தூரில் கல்யாண காத்யாயினி ஆகிய மூன்று தலங்களிலும் ஸ்ரீசக்ர மகாமேரு ஒரே வரிசையில் நிறுவப்பட்டுள்ளது. 

பேருந்தில் திருவேற்காட்டிலிருந்து மாங்காடு மற்றும் வேலப்பன் சாவடி வழியாக குன்றத்தூர் சென்றால், மொத்தம் சுமார் 12 கி.மீ. பிரயாணத்தில் காலை முதல் மதியத்துக்குள் மூன்று அம்மனையும் வழிபட்டு, புத்தாண்டில் திரிசக்ர மகா மேருவை தரிசனம் செய்த பலனைப் பெறலாம்'' என்றார் கே.குமார சிவாச்சாரியார். 

தேவி காத்யாயினி அம்மன் கோயிலுக்குச் செல்ல (திருநீர்மலை சாலை வளைவு) குன்றத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.