முகப்பு
வெள்ளிமணி

ஸ்ரீஆண்டாள் அருளும் கூட்டுப் பிரார்த்தனை! 

தனது தேனினும் இனிய தமிழ்ப்பாசுரங்களாகிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவற்றால் எம்பெருமான் ஸ்ரீ கண்ணபிரானின் திருவுள்ளத்தைக் கவர்ந்து அவனுக்கே நாயகியானார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
பகிர்:


தனது தேனினும் இனிய தமிழ்ப்பாசுரங்களாகிய திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகியவற்றால் எம்பெருமான் ஸ்ரீ கண்ணபிரானின் திருவுள்ளத்தைக் கவர்ந்து அவனுக்கே நாயகியானார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார். 
புனிதமான ஆடி மாதத்தில் புண்ணியம் செய்த பூர நட்சத்திரத் திருநாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வடபெருங்கோயிலுடையான் திருக்கோயிலின் அருகிலுள்ள ஒரு துளசித்தோட்டத்தில் தோன்றி, ஸ்ரீ பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட புனிதவதி ஸ்ரீஆண்டாள்.

மற்ற ஆழ்வார்களெல்லாம் தனித்தனியே எம்பெருமானைப் போற்றிப்பாடி மங்களா சாஸனம் செய்திருக்க, ஸ்ரீஆண்டாளோ திருப்பாவையின் மூலம் தன் தோழிகளையெல்லாம் உடன் இணைத்துக்கொண்டு எம்பெருமானின் திருமாளிகையை நோக்கி ஊர்வலமாகச் சென்று தன் வேண்டுதலைக் கேட்டுப்பெறுகிறாள். 

இவ்விதம் கூட்டுப்பிரார்த்தனை என்ற கருதுகோளுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  ஸ்ரீஆண்டாள் செயல்வடிவம் கொடுத்திருக்கிறாள். 

கலியுகம் தவிர்த்த மற்ற யுகங்களுக்குரிய புராண-இதிகாச நாயகர்கள் எல்லாம் தனியொருவராகக் காரியம் சாதிக்கக்கூடியவர்கள். கலியுகத்தில் நாம் காணும் தனிமனித சக்தியோ வரையறைகளுக்குக் கட்டுப்பட்டது.

ஸ்ரீராமபிரான் தமது வில்வித்தைத் திறன்கொண்டு பல லட்சம் அரக்கர்களை வீழ்த்தினார். ஸ்ரீஅனுமன் இலங்கையில் பிரவேசித்துப் பல்லாயிரம் அரக்கர்களைக் கொன்று இலங்கையையே கதிகலக்கிவிட்டு வந்தார். மஹாபாரதக் கால நாயகர்களும் எத்தனை பேர் தங்களை எதிர்த்தாலும் அத்தனை பேரையும் தனித்து நின்று வெல்லக்கூடியவர்கள்.

கலியுகத்தின் மனிதசக்தி என்பது முந்தைய யுகங்களைப் போல மகத்தானதல்ல. பலர் ஒன்றுகூடினால்தான் ஒரு பலமான எதிரியை வீழ்த்த முடியும்.

சங்கே சக்தி ("கலெள யுகே') என்ற வடமொழிப் பழமொழி, இக்கலியுகத்தில் ஒன்றுகூடிச் செயல் புரிவதால் மட்டுமே காரியங்களைச் சாதிக்க முடியும் என்று கூறுகின்றது. 

எதிரியை வீழ்த்துவதற்கு மட்டுமல்ல; வேளாண்மை முதலிய பல துறைகளிலும் வெற்றி பெறுவதற்கும் கூட்டு முயற்சி அவசியம் என்பதை நம் நாடு முழுவதிலுமுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் இயக்கம் உணர்த்துகின்றது. 

இவ்விதம் இந்த யுகத்தில் அமைந்த மனித வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலும் கூட்டுமுயற்சி தேவைப்படுவதைப் போலவே, கடவுளின் அருளைப் பெறுவதற்கும் கூட்டு முயற்சியும் கூட்டுப்பிரார்த்தனையுமே பலம் மிகுந்த ஆயுதம் என்பதை அன்றே இவ்வுலக மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறாள் ஸ்ரீஆண்டாள்.

அதனால்தான், தான் அருளிய திருப்பாவைப் பாசுரங்களில் தன் தோழிகளையும் துயிலெழுப்பி உடன் அழைத்துக்கொண்டு  கண்ணன் அறிதுயில் புரியும் நந்தகோபரின் திருமாளிகை நோக்கி நெடும்பயணம் செல்வதைப் பதிவு செய்கின்றாள்.

நற்குணங்கள் மிகுந்த கணவனைப் பெறுவதற்காக அக்காலப் பெண்கள் "காத்தியாயினி விரதம்' நோற்பது வழக்கம். அந்த நோன்பையும் தான் தனியாக நோற்காமல், தன்னைப் போன்ற தோழிகளுடன் இணைந்து கூட்டாக நோன்பு நோற்பதை "நாராயணனே நமக்கே பறை தருவான்'  என்று தனது திருப்பாவையின் முதல் பாசுரத்திலேயே முரசறைந்து கூறிவிடுகிறாள் ஸ்ரீஆண்டாள்.

கண்ணன் என்னும் பேரரசனின் ஆளுகைக்குட்பட்டு அவன் திருவடிகளின் கீழ் கப்பமாக எடுத்துவந்த பொன்னையும் பொருளையும் சமர்ப்பிக்க வரும் அரசர்கள் ஒன்றுதிரண்டு வந்து அவனைத் தரிசிப்பது போலவே, தானும் தன் தோழிகளும் பெருந்திரளாக வந்திருப்பதை "அங்கண் மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டின் கீழ் சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்!' என்ற பாசுரத்தில் குறிப்பிடுகின்றாள் ஸ்ரீ ஆண்டாள்.

"பல்லாண்டிசைப்பரே, கோல விளக்கே, கொடியே, விதானமே ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்'என்ற பாசுரத்தில்,எங்களுடன் சேர்ந்துகொண்டு உனக்குப் பல்லாண்டு பாடுவதற்கு வேண்டிய அடியார்கள் கூட்டத்தையும் கொடுத்தருள்க! என்று வேண்டுகின்றாள்.

"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா' என்று தொடங்கும் இருபத்தேழாம் பாசுரத்தின் இறுதியில் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என்று உரைக்கிறாள்.

"வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை' எனத் தொடங்கும் பலசுருதிப் பாடலிலும் சங்கத்தமிழ் மாலை முப்பது தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்! என்று எடுத்துரைக்கிறாள். அதாவது, அடியவர்கள்  பலரும் ஒன்றாக இணைந்து ஓதிப் பயன்பெற வேண்டும் என்பதையே "சங்கத்தமிழ் மாலை' என்ற தனது சொல்லாடல் மூலம் விளக்கியருள்கிறாள் ஸ்ரீஆண்டாள்.

இவ்விதம், கூட்டுப் பிரார்த்தனை என்ற வலிமை மிகுந்த வழிபாட்டு நெறியின் மூலம் இவ்வுலகில் பிறந்த ஜீவாத்மாக்கள் அனைவரும் உலக இன்பங்கள் மட்டுமின்றி வீடுபேற்றினையும்  பெற்றுப் பேரின்பம் அடையலாம் என்பதைத் தனது திருப்பாவைப் பாசுரங்களில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்து நமக்கெல்லாம் பேருபகாரம் செய்த ஸ்ரீஆண்டாள் அவதரித்த திருவாடிப்பூரம் திருநாள் இவ்வருடம் ஆடி மாதம் 9 -ஆம் நாள் (24-07-2020) வெள்ளிக்கிழமையன்று அமைகிறது. 

நாமும் ஸ்ரீஆண்டாள் திருப்பாவை காட்டும்  கூட்டு வழிபாட்டு நெறியின் வழிநின்று வணங்கி இகபர சுகங்களைப் பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.