முகப்பு
வெள்ளிமணி

தேவன் பாபேலில் நாம் பேசும் மொழிகள் தந்தார் 

இறைவன் நாம் பேசும் மொழியினை தந்தார். இன்று உலகில் 6500 மொழிகள் பேசப்படுகின்றன.

பகிர்:

இறைவன் நாம் பேசும் மொழியினை தந்தார். இன்று உலகில் 6500 மொழிகள் பேசப்படுகின்றன. நியு கினி என்ற தீவில் மட்டும் 820 மொழிகள் பேசப்படுகின்றனவாம்.  நம் பாரதத்தில் 1500 மொழிகள் பேசப்படுகிறதாம். அதில் 480 மொழிகளை மிக அதிகமானவர்கள் பேசுகின்றனர். எழுத்து வடிவான மொழிகள் 18  ஆகும். 

"அப்பா', "அம்மா' என்ற இரு சொற்கள் எல்லா மொழிகளிலும் அதே ஒலியுடன் உச்சரிக்கப்படுகின்றன. சீனாவில் அப்பாவை "பா' எனவும் அம்மாவை "மா' எனவும் அழைக்கின்றனர். உலக மொழிகளில் அடிப்படை ஒலி ஓசை மாறாமல் உள்ளது. எழுத்து வடிவம் கொண்ட மொழிகள் பெரும்பாலும் பேசும் மொழிகளுக்கே அமைந்துள்ளன. இன்றும் பல மொழிகள் அழிந்து வருகின்றன. புது மொழிகளும் தோன்றியிருக்கின்றன. 

மொழி இறைவன் தந்தது. மனிதனை இணைக்கிறது, தொடர்புப்படுத்துகிறது. அன்பை, பாசத்தை, உறவை மொழி கொடுக்கின்றது. தாய்மொழி என்கின்றோம், தெய்வம் தந்த மொழியை தாய் தந்தை பேச, பிறந்த பிள்ளையும் கேட்டு, கற்றுப் பேசுகிறது. மொழியில்லா உலகைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.

தேவன் ஆதாம் ஏவாளிடம் பேசினார். ஆதாமும் தேவனிடத்தில் தேவன் மொழியிலே பேசினான். இம்மொழியை பின்பு சந்ததிகள் பேசின. உலக மக்கள் அழிக்கப்பட்டு நோவாவுக்குப் பின் ஒரே மொழியைப் பேசினர். வேதம் கூறுகின்றது ""பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது'' ஆதியாகமம் 11:1. 

அவர்கள் ஒரே கூட்டமாய் ஒரே ஊரில் தங்கி வாழ்ந்தனர். அவர்களிடம் இறை தேடல் உணர்வு தம் முன்னோர் இறைவனிடம் தொடர்பு கொண்டதைப் போல். நாமும் வானத்தில் வாழும் இறைவனிடம் தொடர்பு கொள்ள வானத்தை முட்டும் பெரிய கோபுரம் கட்டுவோம், சுட்ட செங்கல்லும் கீலும் உள்ளது என எல்லாரும் ஒரு மொழி பேசி ஒற்றுமையாக செங்கல் கொண்டு மடமடவென்று வானம் எட்டும் கோபுரம் கட்டினர். 

கர்த்தர் இப்பெரிய பிரமாண்டமான கோபுரம் பாபேலில் கட்டுவதைப் பார்த்தார். உடனே கர்த்தர் அவர்கள் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம் என்றார். 

அப்படி மொழி தாறுமாறாக்கப்பட்டபோது வேறு வேறு மொழிகள் உண்டாயின. பாபேல் கோபுரம் நிறுத்தப்பட்டது. மக்கள் மொழியினால் இணைக்கப்பட்டனர். வேற்றுமொழி பேசுவோரைத் தவிர்த்தனர். ஒரே மொழி பேசிய அவர்கள் கலைக்கப்பட்டனர். உலகமெங்கும் பிரயாணப்பட்டு, பரவிப் போய் உலகமெங்கும் குடிபெயர்ந்தனர். 

அவர்கள் பேசும் பேச்சும் இனம் ஆகிற்று. இறைவனின் திட்டம் மக்களை உலகெங்கும் பரவச் செய்தது. தம் மொழியிலே நாகரிகம், பண்பாடு, தெய்வ வணக்கம் அமைந்தது. ஆனால் "அம்மா', "அப்பா'  ஒலிச் சொல் - நாம் இறைவனின் படைப்பு; இவ்வுலகம் நமக்குக் கொடுக்கப்பட்டது. நாம் பேசும் பேச்சு இறைவனால் கொடுக்கப்பட்டது. மொழியைப் போற்றுவோம், தெய்வத்தை தாய்மொழியிலேயே வணங்குவோம். இறையருள் நம்மோடு. 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.