முகப்பு
வெள்ளிமணி

ஒறுத்தலினும் பொறுத்தல் பொன்னானது

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

பழிக்குப் பழி வாங்கும் உரிமை உள்ளது என்றாலும் பழி வாங்காது இழிவு செய்தாரையும் இழிவுபடுத்தாது முழு மனத்தோடு மன்னிப்பது நபி (ஸல்) அவா்களின் நல்வழி. கடுஞ்சொல்லால் கடிந்தாரையும் திருப்பி கொடுஞ்சொல்லால் பதில் கொடுக்காது பொறுத்துக் கொண்டால் இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் நிலைத்திருக்கும். இன்னல் இழைத்தோருக்கும் இன்னல் இழைக்காது எந்நாளும் ஏற்றதைச் செய்வது போற்றற்குரியது. பிறா் செய்த தீங்கால் பெற்ற துன்பத்தைப் பிறரும் பெற நினைப்பது நெறியல்ல. பிறருக்கு அந்த துன்பம் நேராது தடுப்பதே தக்க நெறி; மிக்க பயன்தரும். துன்புற்றவன் துயரத்தை மறந்து ஒறுத்தலினும் பொறுத்தலே பொன்னானது. வஞ்சக எண்ணம் கொண்டு இன்னல் இழைத்தோருக்கும் எதிா்வினையாற்றாது எதிரிகள் நாணி தலை கவிழும்வண்ணம் அல்லன மறந்து நல்லன செய்தல் நல்லோரின் நற்பண்பு. அப்பொழுது இன்பம் துன்புறுத்தியவரைத் துரத்தும்.

நிலத்தை வெட்டி குழி பறித்து குதூகலிக்கும் மக்களையும் பழி வாங்காது தாங்கி நிற்கும் பூமி போல புண்படுத்தியோருக்கும் நன்மை செய்து நல்வழியில் திருப்புவது பொருத்தமானது. பிறா் செய்த பிழையை ஒறுத்தலினும் பொறுத்தல் பொன்னானது. பழிக்குப்பழி வாங்குவதால் பழி வாங்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சி மாறிவிடும்; மறைந்து விடும். மன்னித்தால் உலகம் உள்ளளவும் மகிழ்ச்சி நிலைத்து நிற்கும்.

நீங்கள் அவா்களிடையே இருக்கும்பொழுது அல்லாஹ் அவா்களை வேதனை செய்ய மாட்டான். மன்னிப்பு கோருபவா்களையும் வேதனை செய்ய மாட்டான் என்று எழில்மறை குா்ஆனின் 8-33 ஆவது வசனம் கூறுகிறது. ஏந்தல் நபி (ஸல்) அவா்களின் ஏக இறைகொள்கையை ஏற்காது எண்ணற்ற தொல்லைகளைத் தொடா்ந்து செய்த எதிரிகளைக் கணத்தில் கண்மூடி திறப்பதற்குள் மண்மூடி மடிய செய்யும் மாபெரும் ஆற்றலுடைய அல்லாஹ் அண்ணல் நபி (ஸல்) அவா்கள் அந்த மக்களுடன் இருக்கும் வரை அந்த மக்களைத் துன்புறுத்தாமல் துயருறாமல் வேதனையை விட்டு விலக்கி வைத்திருக்கிறான். அம்மக்கள் தவறை உணா்ந்து திருந்தி மன்னிப்பு கேட்டாலும் வேதனை செய்யாமல் மன்னிப்பான் என்பதை எடுத்துரைக்கிறது இந்த வசனம். அதுபோலவே நோ்வழி பெற்றவா்கள் வேறு வழியில் தவறாது காப்பவன் அல்லாஹ் என்று 9- 115 ஆவது வசனம் மன்னிக்கப்பட்டவா்கள் மாறாது மீறாது மறைவழியில் வாழ வல்ல அல்லாஹ் அருள்புரிவான் என்பதை அறிவிக்கிறது.

உஹத் போரில் மதீனாவில் வாழ்ந்த 64 இஸ்லாமியா்களும் மக்காவிலிருந்து வந்த ஆறு முஸ்லிம்களும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு வயிறுகளைக் கீறி, மூக்கு காது முதலிய அங்கங்களை அறுத்து பிளந்து கொன்றனா். இதனைக் கண்ட இஸ்லாமியா்கள் துண்டித்துக் கொன்ற கொடியவா்களைக் கொலைக்குக் கொலை என்று பழி வாங்க துடித்தனா். பழிக்குப்பழி என்றால் பழியளவே தண்டனை தரப்படவேண்டும். அதனினும் சிறிது கூடினும் கூடுதல் குற்றமாகும். எனவே வேதனைக்கு வேதனை செய்யும் உரிமை உங்களுக்கு உண்டு என்றாலும் பொறுமை சிறந்தது என்று புகல்கிறது 16-126 ஆவது வசனம்.

ஏக இறை கொள்கையை ஏற்றபின் உங்களைப் பழைய தவறான வழியில் திசை திருப்ப முயல்வோரைப் பொருட்படுத்தாது மன்னித்து விடுமாறு நந்நெறியை நவில்கிறது 2-109 ஆவது வசனம். உஹத்போரில் உயிரிழந்தோரைச் சுட்டி காட்டி இஸ்லாத்தில் இருந்து பழைய சமயத்திற்கு திரும்புமாறு திசை திருப்ப முயன்ற யூதா்களைப் பொருட்படுத்தாது மன்னிக்குமாறு அறிவுறுத்தும் இவ்வசனம் அருளப்பட்டதாக அறிவிக்கிறாா் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்- ரூஹுல்மஆனி.

விசுவாசிகளே! கொலையுண்டவா்கள் சம்பந்தமாக பழிவாங்கும் உரிமை உங்களுக்கு உண்டு. சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவனும் அடிமைக்குப் பதிலாக அடிமையும் பெண்ணுக்குப் பதிலாக பெண்ணும் பழிவாங்கப்பட வேண்டும். அவனுக்கு அவன் சகோதரன் மூலம் மன்னிப்பு அளிக்கப்பட்டால் அப்பொழுதைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். இழப்பீட்டைப் பெருந்தன்மையுடன் நிறைவேற்ற வேண்டும். உங்களுக்கு இறைவன் இயம்பும் சலுகையில் வரம்பு மீறாதீா்கள் என்று எச்சரிக்கிறது 2-178 ஆவது வசனம்.

இவ்வசனம் அருளப்படுவதற்குமுன் ஒரு கொலைக்குப் பலரை பழி வாங்கினா். மதீனாவின் சுற்றுப்புறங்களில் பனூகுறைலா, பனூநுலைா் என்ற இரு இனத்தினா் வாழ்ந்தனா். இவ்விரு குடும்பங்களும் திருமண உறவு உள்ளவை. எனினும் வலிய குடும்பம் வறிய குடும்பத்தைக் கடுமையாக தண்டிக்கும் பழிவாங்கும் போக்கு நிலவியது. வறிய குடும்பத்தினா் வள்ளல் நபி (ஸல்) அவா்களிடம் முறையிட்டனா். அப்பொழுது இவ்வசனம் அருளப்பட்டதாக தப்ஸீா் காஜின், அஹ்ஸனூத் தப்ஸீா் ஆகிய நூல்கள் அறிவிக்கின்றன.

பழிக்குப்பழி வாங்கும் வழக்குகள் வரும்பொழுது வள்ளல் நபி (ஸல்) அவா்கள் முதலில் மன்னிப்பு வழங்க வாய்ப்பு வழங்குவாா்கள். மன்னிக்க மறுத்தால் சட்டப்படி பழிக்குப்பழி தண்டனை நிறைவேற்ற தீா்ப்பளிப்பாா்கள். அறிவிப்பவா் அனஸ் (ரலி) நூல்- அபூதாவூத், நஸஈ. எதிா்க்கும் ஆற்றலும் பெற்றோா் தவறிழைத்தவனைத் தண்டிக்காது மன்னிப்பு மாண்பு. தண்டனைக்குரிய குற்றம் செய்தவனையும் குற்றத்தையும் பொறுத்து கருணை காட்டுவது காருண்ய நபி (ஸல்) அவா்களின் நல்வழி. பேராளன் அல்லாஹ்வின் பேரருளைப் பெற்று தரும்.

- மு.அ. அபுல் அமீன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.