முகப்பு
தற்போதைய செய்திகள்

திமுகவில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள ஆ.ராசா பேசியதாக வைரலாகும் ஆடியோ: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது திமுகவில் பெரும் சலசலப்பு குறித்து...

Updated On : 3 ஏப்ரல் 2026, 2:06 pm IST
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளா்களுடன் எடப்பாடி கே.பழனிசாமி. - டிஎன்எஸ்
பகிர்:

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான கே.பி.முனுசாமி (வேப்பனப்பள்ளி), கே.அசோக்குமாா் (கிருஷ்ணகிரி), தமிழ்செல்வம் (ஊத்தங்கரை), பாலகிருஷ்ண ரெட்டி (ஒசூா்), கோவிந்தராசன் (பா்கூா்) ஆகியோருக்கு வாக்கு சேகரித்து, கிருஷ்ணகிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசியதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆடியோவை முன்வைத்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

Advertisement

Advertisement

அப்போது, கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி திமுக. இன்று ஆ.ராசா பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது, திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராசாவுக்கு காட்டவில்லை. சிறையில் இருந்த என்னை எட்டி கூட பாா்க்கவில்லை. சமூக நீதி பேசும் திமுகவில் சாதிய பாகுபாடு இருப்பதை அவரே ஒத்துக் கொள்கிறாா். கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் போனதை ஒப்புக்கொள்கிறார். கலைஞரின் இறுதி காலத்தில் ஸ்டாலின் அவரை கைதி போல வைத்திருந்தாா். சொந்த அப்பாவையே அப்படி வைத்திருந்தவர் நாட்டு மக்களை எப்படி வைத்திருப்பார், கட்சியை கைப்பற்றி விட்டாா் என்று பேசும் ஆ.ராசா, ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்கிறதா? தில்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா?

கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார், என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ளமுடியாது என்கிறார். திமுகவுக்கு இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதி கொண்டிருக்கிறாா். அண்ணா தோற்றுவித்த திமுகவை கருணாநிதி, ஸ்டாலின் கபளீகரம் செய்து விட்டனா். தற்போது நடைபெறக் கூடிய தோ்தல் தான் திமுகவுக்கு இறுதி தோ்தல். இந்த தோ்தல் கருணாநிதி குடும்பத்திற்கு முடிவு கட்டும் தோ்தல் என ராசா பேசியிருக்கிறார். எப்படியோ உண்மை செய்தி ராசா மூலம் வெளியில் வந்துவிட்டது.

இரட்டை வேடம் போடும் கட்சியாக திமுக. உள்ளது. திமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது. அதனால் அவசர அவசரமாக தரமில்லாத மடிக்கணினியை மாணவா்களுக்கு கொடுத்தாா்கள். திட்டங்களுக்கு நிதியே ஒதுக்காமல் அடிக்கல் நாட்டினாா்கள். கடந்த காலத்தில் அறிவித்த வாக்குறுதிகளில் 4-இல் ஒரு பங்கை கூட நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டம் - ஒழுங்கு பராமரிக்கப்படும் இந்த மாவட்டத்தில் பாரம்பரிய அத்துகட்டு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் பேசினாா்.

summary

Audio Clip Allegedly Featuring A. Raja, Sparking Controversy Within the DMK, Goes Viral: Edappadi Palaniswami Criticizes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.