முகப்பு
வெள்ளிமணி

பக்தர்களைக் காக்கும் பரமசுந்தரர்!

பாம்புரியை ஆடையாக உடையவர் அல்லது பாம்பை வஸ்திரத்தின் மேல் இடுப்பில் கட்டிக்கொண்டிருப்பவர் என்னும் பொருளில் சிவசகஸ்ர நாமாவளியில் "ஸர்ப்பசீர நிவாஸனாய நம' என்று ஒரு அட்சரம் உண்டு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

பாம்புரியை ஆடையாக உடையவர் அல்லது பாம்பை வஸ்திரத்தின் மேல் இடுப்பில் கட்டிக்கொண்டிருப்பவர் என்னும் பொருளில் சிவசகஸ்ர நாமாவளியில் "ஸர்ப்பசீர நிவாஸனாய நம' என்று ஒரு அட்சரம் உண்டு. அந்த நாகராஜாக்களே இப்பூவுலகில் (குறிப்பாக தென்னகத்தில்) தங்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் நீங்க சிவபெருமானை வழிபட்ட பல தலங்கள் இருக்கின்றன. அதில் காவிரிப் படுகைகளில் இருப்பதில் 10-ஆவது பாம்பு தலமாக போற்றப்படுவது திருபுத்தகளூர். பிற தலங்கள் திருநாகேஸ்வரம், திருபாம்புரம், தேப்பெருமாள் நல்லூர், நாகப்பட்டினம், நாகூர், குடந்தை, காமரசவல்லி, கீழப்பெரும்பள்ளம், திருக்களஞ்சேரி என்பன. மேற்படி தலங்களே ராகு, கேது பெயர்ச்சி பரிகாரத் தலங்களாகவும் பக்தர்களால் வழிபடப்படுவது சிறப்பு. இனி புத்தகளூரின் சிறப்பைக் காணலாம்.

தலம் அமைவிடம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் வாழ்க்கை ஊராட்சியின் கீழ் உள்ளது திருபுத்தகளூர். இத்தலத்திற்கு கும்பகோணம் - நன்னிலம் - பூந்தோட்டம் வழியாக வரலாம். வாழ்க்கைக்கு வடக்கே 3 கி.மீ. தூரம்.

தல வரலாறு: இத்தலத்தில் உள்ளதுதான் அருள்மிகு பரமேஸ்வரி உடனுறை பரமசுந்தரர் ஆலயம். அக்காலத்தில் "புத்தகை' என்ற பெயருடைய முனிவர் ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தார். தன்னை மறந்த நிலையில் இருந்த அவரைச் சுற்றி புற்றுகள் வளர்ந்தன. "ஓம் நமசிவாய' என்ற ஒலி மட்டும் காற்றில் தவழ்ந்து வந்தது. தயை புரிந்தான் தயாளன். அம்பிகையோடு திருக்காட்சி நல்கினார். மனம் நிறைந்த முனிவர் தனக்கு காட்சியளித்தது போன்றே இத்தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கும் அருள்பாலித்திட வேண்டினாராம். முனிவர் பெயராலேயே இத்தலம் "புத்தகை' என்று பல வருஷங்கள் அழைக்கப்பட்டு, பின்னர் மருவி "புத்தகளூர்' என்றானது. அருகிலுள்ள ஊர்ப்பெயருடன் சேர்த்து "வாழ்க்கை - புத்தகளூர்' என்று தற்பொழுது அழைக்கின்றனர்.

சந்நிதிகள்:  இறைவன் பரமசுந்தரர் என்ற திருநாமத்துடன் லிங்கத்திருமேனியாகவும், அம்பாள் பரமேஸ்வரி என்ற பெயரில் நின்ற கோலத்தில் மிகவும் அழகுற காட்சியளிக்கின்றனர். தட்சிணாமூர்த்தியும், லிங்கோத்பவர், துர்க்கை அம்மனும் காட்சியளிக்கின்றனர். ஆலயச்சுற்றில் ஆனந்த விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நாகங்கள் என தனித் தனி சந்நிதி கொண்டு அருள்கின்றனர். இங்குள்ள சிறிய நந்தியும் தஞ்சாவூர் பெரியகோயில் பெரியநந்தியும் சிற்ப வேலைப்பாடுகளில் ஒரே மாதியான தோற்றமுடையவை. சரக்கொன்றை  தலமரமாக உள்ளது.

பரிகாரச் சிறப்பு: இத்தலம் ராகு, கேது தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் போன்றவற்றுக்குப் பரிகாரம் அளிக்கும் தலம். திருமணப் பேறு வேண்டி அம்பிகையை வழிபடுகின்றனர். ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.

தகவல் தொடர்புக்கு: பு.வ. உதயகுமார்: 9345808198 / 8110994758.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.