முகப்பு
வெள்ளிமணி

விஜயன் ஏற்படுத்திய வடு!

திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலமும், உச்சுவாடி கிராமமும் ஓர் ஆற்றின் இரு கரைகளில் அமைந்த ஊர்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
பகிர்:

திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலமும், உச்சுவாடி கிராமமும் ஓர் ஆற்றின் இரு கரைகளில் அமைந்த ஊர்கள். ஒரு காலத்தில் திரு ஆரூரன் சர்க்கரை ஆலை வடபாதி மங்கலத்தில் இருந்ததால் இரண்டும் பெயர் பெற்று விளங்கின. உச்சுவாடியில் மிகப்பழைமையான ஸ்ரீபிரம்ம குந்தளாம்பாள் சமேத பிரம்ம நந்தீஸ்வரர் சிவனாலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் தலவரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு ஊர் பெயர் அமையப்பெற்றுள்ளது சிறப்பாகும்.

குருúக்ஷத்திர யுத்தத்திற்கு முன், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து, வேடன் ரூபத்தில் இருந்த சிவனுடனேயே வாக்கு வாதத்தில் ஈடுபட்டு, சண்டையிட்டு, இறுதியில் அவர் அருளுக்குப் பாத்திரனாகி பாசுபத அஸ்திரத்தைப் பெற்றான் அர்ஜுனன் (விஜயன்). இதிலிருந்து தொடர்கிறது இத்தலவரலாறு.

அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற பின்னர் தன் சகோதரர்களிடம் திரும்புவதற்கு முன்னர், குருúக்ஷத்திரத்திற்கு முன்னதாக தன் மனதை ஒருநிலைப்படுத்துவதற்காக சிறிது காலத்தை இந்தத் தலத்தில் நியம நிஷ்டைகளுடன் கழித்தான். 

ஈசன் ஒரு சிவனடியாராகவும், அம்பிகை ஒரு வண்டு உருக்கொண்டும் அர்ஜுனனின் குடிலுக்கு வந்தார்கள். அவ்வமயம் சிவபெருமான் ஒரு சிறு திருவிளையாடல் புரிந்து அர்ஜுனனை ஆட்கொள்ள நினைத்தார். அச்செய்கையில் சினம் கொண்ட அர்ஜுனன், வந்தது யாரென்று அறியாமல் தன் கையில் இருந்த கமண்டலத்தால் சிவனடியாரின் தலையில் இடித்தானாம். கமண்டலத்தின் கூர்பாகம் சிவனின் தலையில் காயம் ஏற்படுத்தி, குருதி வழியச் செய்ததாம். பதைபதைத்த உமையவள் சட்டென்று வண்டு ரூபத்திலிருந்து வெளி வந்து ஈசனின் தலையில் வழிந்த குருதியை துடைத்தாளாம். வந்திருப்பது ஈசனும், இடப்பாக இறைவியும் எனத்தெளிந்து அர்ஜுனன் தன் நிலை உணர்ந்து இருவரின் தாள் பணிந்தானாம். தெய்வத் தம்பதிகளின் பேரருளுக்கு மற்றுமொரு முறை பாத்திரனானான் அர்ஜுனன்.

ஈசனின் உச்சியில் அர்ஜுனன் கமண்டலத்தால் ஏற்பட்ட வடு இன்றும் லிங்கத்தின் உச்சியில் தென்படுகிறது. "உச்சிவடு' என்பது காலப்போக்கில் மருவி "உச்சிவாடி' என்றும், "உச்சுவாடி' என்றும் இந்த கிராமம் தற்போது அழைக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற இத்தலம் காலப்போக்கில் களையிழந்து இன்று கேட்பாரற்று இருக்கிறது. இந்நிலையை மாற்றி இதன் மகத்துவத்தை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் திருப்பணி வேலைகளை முதல் கட்டமாகத் துவங்க கிராம மக்கள் வெளியூர் பக்தர்கள் உதவியுடன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் இவ்வூரில் இருக்கும் பெருமாள் கோயிலுக்கும் திருப்பணி கைங்கர்யம் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.  இரு கோயில்களுக்குமான பாலாலய வைபவம் கடந்த மார்ச் மாதம் நடந்தேறியது.  

இந்த திருப்பணி கைங்கர்யத்தில் நிதியுதவியும், பொருளுதவியும் அளித்து உதவ விரும்புபவர்கள் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள செல்லிடப்பேசி எண்: 9840053289.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.