சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் இந்திய கண்டத்தில் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் தொடங்கிவிட்டன. யவனேஸ்வரா என்ற அறிஞரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட இந்த ஜோதிடத்தை, ஜோதிட சாஸ்திரத்தின் பிதாமகர் என்றழைக்கப்படும் வராஹமிகிரர் "பஞ்ச சித்தாந்திகா' என்ற பெயரில் வரையறுத்துக் கொடுத்தார்.
பின்னர் இதனை பிருஹத் பராசரர் "ஹோரா சாஸ்திரா' என்றும், கல்யாண வர்மா என்பவர் "சாராவாலி' என்றும் பல பிரிவுகளாக எளிமையாக்கிக் கொடுத்ததுதான் தற்போது புழக்கத்தில் உள்ள ஜோதிட நூல்களாகும்.
ஜோதிடம், பஞ்சாங்கம் இன்றி ஒரு துளிக்கூட நகர முடியாது. எப்படி நம் உடலை பஞ்சபூதங்கள் இயக்குகிறதோ அதுபோல் திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து அங்கங்களை (காலத்தின் உறுப்புகளை) இயக்கும் நூலுக்கு "பஞ்சாங்கம்' என்று பெயர்.
வாக்கிய பஞ்சாங்கமும், திருக்கணித பஞ்சாங்கமும்: வாக்கியம் மற்றும் திருக்கணிதம் என்று இருவகைகள் பஞ்சாங்கத்தில் உண்டு. வாக்கியம் என்பது தொன்று தொட்டு ரிஷிகளாலும், முனிவர்களாலும் கணக்கிடப்பட்ட ஒன்றாகும்.
கி.பி.15}ஆம் நூற்றாண்டில் அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, சுமார் 6 முதல் 7 மணி நேர வித்தியாசத்தில் திருக்கணித பஞ்சாங்கம் கணிக்கப்பட்டது. இது எந்த விதமான தொழில் நுட்ப வசதிகளும் இல்லாத அக்காலத்திலிருந்து தொடர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய கலையாகும். விரதங்கள், விழாக்கள் முதலியன எந்தெந்த நாள்களில் வருகின்றன என்பதை இப்பஞ்சாங்கத்தில் திதி, வார, நட்சத்திரத்தைக் கொண்டு நாம் அறியலாம்.
ஒன்பது கோள்களின் ஆதாரமாய் இருப்பது சூரியனே ஆகும். அதை மையப்படுத்தியே அனைத்து கோள்களும் இயங்குகின்றன.
சூரிய சஞ்சாரம்: சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலுள்ள 12 ராசிகளில் ஒவ்வொரு மாதமும் சஞ்சாரம் செய்கிறார். சித்திரையில் மேஷ ராசியில் உச்சநிலையிலும், ஐப்பசி மாதத்தில் பலவீனமான நிலையிலும் உள்ளார். ஒருவரின் வாழ்நாளில் நேரிடும் சுபயோக பலன்களை, கிரகங்களின் ராசி சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவதே ஜோதிடம் ஆகும்.
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபதும் இப்பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளது. அத்துடன், வருடங்களின் உட்பிரிவு (அயனங்கள்), ருதுக்கள், நட்சத்திரங்கள், கிரகணங்களின் நிகழ்வு, விதைவிதைப்பதற்கான நேரம் எனப் பல அம்சங்களைப் பஞ்சாங்கத்தில் காணலாம்.
இந்தக் கிழமையில், இந்தத் திதியில், இந்த நட்சத்திரம் சேர்ந்து வந்தால் அதற்கான யோகமும் தரப்பட்டுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், செயற்கைக் கோள்களை விண்வெளியில் செலுத்த நல்ல நாள்களை இந்தப் பஞ்சாங்கத்தின் மூலமே தேர்வு செய்கிறார்கள்.
பஞ்சாங்கம் வாசித்தல்:
அக்கால மன்னர்கள் தங்கள் அரச சபையில் ஜோதிடர்களை வைத்துக் கொண்டு, சபை ஆரம்பிக்கும் முன், அன்றைய திதி, நாள், நட்சத்திரத்தைப் படித்த பின்னரே அவை நடவடிக்கைகளைத் தொடங்குவார்கள்.
முக்கனிகளான மா, பலா, வாழை இவற்றில் மா, பலா இரண்டும் காய்த்துக் குலுங்கும் காலம் பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி ஆகும். அதனால் தென்மாநிலங்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் பஞ்சாங்கங்கத்தை இந்த நன்னாளில் பூஜையில் வைத்து அனைத்து வகை கனிகளுடன், பூக்களால் அர்ச்சித்து, ஈசனுக்கு படைத்து, "பஞ்சாங்க படனம்' (புதுப்பஞ்சாங்கம் வாசித்தல் என்று பெயர்) வாசிப்பார்கள்.
முன்பு அனைத்து கோயில்களிலும், பாடசாலைகளிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னரே அன்றைய நாளைத் தொடங்கும் பழக்கம் இருந்தது.
தற்போது பல கோயில்களிலும், சபாக்களிலும் பஞ்சாங்கப் படனம் வாசிக்கப்படுகிறது. பஞ்சாங்கத்தை வாசிப்பவர் அந்த வருடத்திற்கான பலன்களை விரிவாக எடுத்துச்சொல்வார். தவறாமல் நாம் இந்நிகழ்வில் பங்கேற்று அவர்கள் படிப்பதைக் கேட்டால், அவ்வருடத்திற்கான அனைத்துப் புண்ணியங்களும் நம்மை வந்தடையும்.
அப்படியே ஆகட்டும்: நம்மைச்சுற்றி அண்டசராசரங்களில் அஸ்வனி தேவதைகள் பறந்தபடி "ததாஸ்து' எனக் கூறிக்கொண்டே இருப்பார்களாம். இதன் பொருள் என்னவெனில் "அப்படியே ஆகட்டும்' என்பதாகும்.
நாம் நல்லதைச் சொன்னாலும், தீயதைச் சொன்னாலும் "அப்படியே ஆகட்டும்' என்று தேவதைகள் கூறுவதால் அவை பலித்துவிடும். அதனால் முடிந்தவரை உலகிற்கு நன்மை பயக்கும் சொற்களாகவே பயன்படுத்த வேண்டுமென "பஞ்சாங்க படன சாத்திரம்' கூறுகிறது. இவ்வாண்டு ஏப்ரல் 14 }இல் தமிழ் பிலவ ஆண்டு பிறக்கிறது. நாமும் தவறாமல் பஞ்சாங்கம் தினசரி படிப்பதைப் பழக்கிக் கொண்டு நன்மை பெறுவோமாக!
- எஸ்.எஸ்.சீதாராமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.