கருடன் சாதாரணப் பறவை அல்ல. திருமாலின் வாயிற்காப்பாளன் என்பதோடு திவ்ய வாகனமுமாகும். கருடனின் பார்வையில் பாதி பாவங்கள், தோஷங்கள் நீக்குவது போன்ற சக்திகளை திருமால் அருளியிருக்கிறார். கருடனை ஆழ்வார் எனும் திருநாமம் சேர்த்து, கருடாழ்வார் என்று போற்றுகிறது புராணம்.
திருமால் திருத்தலங்களுக்குச் செல்பவர்கள் நேராக பெருமாளையும், அனுமனையும், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டு வருவதைக் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் ஆகம விதிப்படி, கருடரை வழிபட்ட பின்னர்தான் பெருமாளை வழிபட வேண்டும்.
அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட்டால் தான் அந்த கும்பாபிஷேகம் முழுமை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது .
பாம்பு தீண்டி விஷம் ஏறிவிட்டால் "கருட வித்யா' மந்திரத்தை ஜெபித்தால் விஷம் இறங்கிவிடும். கருடன் ஆபத்தில் அபயம் தருபவர்; அதோடு செய்த தவறுக்கு தண்டனையைத் தரக்கூடிய "கருட புராணம்' கூட கருடனின் பெயரில்தான் உள்ளது என்பதை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.
திருமாலின் பிரதான வாகனமாக, பெரிய திருவடியாகப் போற்றப்படுபவர் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த கருடாழ்வார்.
கருடனின் அவதாரம்: காஸ்யப மகரிஷி - வினதை தம்பதிக்குப் பிறந்தவர் பக்ஷிராஜன் எனப்படும் கருடன். சூரியனின் தேரை ஓட்டக் கூடிய அருணன் இவரின் தம்பி. கருடனுக்கு சுகீர்த்தி மற்றும் ருத்திரை என்போர் மனைவியர் ஆவர்.
தாயைக் காத்த தனயன்: காஸ்யபரின் மனைவிகளான கருடனின் தாய் வினதை மற்றும் நாகர்களின் தாய் கத்ரு ஆகியோர் காட்டுவழியே சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்திரனின் குதிரையின் நிறம் "வெள்ளை' என வினதையும், "கருமை' என கத்ருவும் கூறினர்.
"சரியான நிறம் சொன்னவருக்கு மற்றவர் அடிமை' என்பது போட்டியாகும். கத்ரு சூழ்ச்சி செய்து, தேவலோகத்தில் உள்ள குதிரைகளை கருநாகங்கள் சூழச் செய்தாள். குதிரைகள் பார்க்க கருமையாகத் தெரிய கத்ரு வெற்றி அடைந்ததாகக் கூற, வினதையின் குழந்தைகளான கருடன், அருணன் ஆகியோர் நாகர்களின் தாய் கத்ருவுக்கு அடிமையானார்கள்.
அவர்கள் விடுதலை பெற வேண்டுமானால், தேவலோக அமிர்த கலசத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கட்டளையிட்டனர்.
அதன்படி, கருடன் அமிர்த கலசத்தை தேவலோகத்திலிருந்து கொண்டு வந்து, நாகர்கள் முன்பாக தர்ப்பைப் புல்லில் வைத்தார்.
வினதை, கருடன், அருணன் கத்ருவிடமிருந்து விடுதலை ஆனார்கள்.
நாகர்கள் குளித்துவிட்டு அமிர்தத்தைப் பருக வர, அதற்குள் இந்திரன் அந்த அமிர்த கலசத்தைத் தூக்கிச் சென்று விட்டான்.
அமிர்த கலசம் இருந்த புல்லை சுவைத்தால் பலன் கிடைக்கும் என்ற ஆவலில் தர்ப்பைப் புல்லை நாகங்கள் நாவால் நக்க, பாம்புகளின் நாக்குகள் பிளவுபட்டன.
சக்திமிகு கருடன்: தன்னைவிட அதிக எடை கொண்ட உயிரை எளிதாக வேட்டையாடி தூக்கிச் செல்லும் சக்தி வாய்ந்தது கருடன். மரத்தில் தலை கீழாகத் தொங்கி தவம் செய்து கொண்டிருந்த வாலகில்ய முனிவர் கீழே விழ இருந்தபோது, கருடன் வந்து காத்ததால், கருடனுக்கு எதையும் எளிதில் சுமக்கும் பெரும் ஆற்றல் மிக்க வரம் கிடைத்தது.
ஆடி மாதத்தில் வளர்பிறை சதுர்த்தி நாளில் வருவதுதான் நாக சதுர்த்தி. அடுத்த நாள் பஞ்சமி. அதாவது கருட பஞ்சமி. கருட பஞ்சமி எனும் கருட ஜயந்தி மிக உன்னதமான நாள்.
கருடன் சக்தி வாய்ந்த பறவை. கருடாழ்வார் அளப்பரிய ஆற்றலும் சக்தியும் வழங்குபவர். அதனால்தான் ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி, கருட பஞ்சமி என்று போற்றப்படுகிறது.
இந்தநாள், கருடாழ்வாருக்கு உகந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
கருடனை, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட தீராத நோய் போகும். திங்களில் வழிபட குடும்பம் சிறக்கும். செவ்வாயில் வழிபட உடல் வலிமை பெருகும். புதன்கிழமைகளில் வழிபட எதிரிகள் தொல்லை நீங்கும். வியாழக்கிழமைகளில் வழிபட ஆயுள் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் வழிபட லஷ்மி கடாட்சம், சனிக்கிழமைகளில் வழிபட மோட்சம் கிட்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
ஆகஸ்ட் 13-ஆம் தேதி (இன்று) கருட பஞ்சமி தினமாகும். பட்சிராஜனை வணங்கிப் பலன் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.