புண்ணிய காரியங்களை காலம் நேரம் பார்க்காமல் விரைந்து செய்ய வேண்டும். இன்னும் கையில் பணம் கூடுதலாக இருந்தால், இறைவனுக்குக் கோயில் எழுப்பித் திருப்பணிகள் செய்யலாம்.
-கொங்கணச் சித்தர்
துன்பம் தரும் ஆயிரம் நிகழ்ச்சிகளும், அச்சம் தரும் நூறு நிகழ்ச்சிகளும் நாள்தோறும் எல்லோருக்கும் நடக்கத்தான் செய்யும். அவற்றால் மூடன் பாதிக்கப்படுபவான்; ஆனால், அறிஞன் பாதிக்கப்படமாட்டான்.
-ஹிதோபதேசம், மித்திர லாபம்
உண்மையை உண்மையாகவும், பொய்யைப் பொய்யாகவும் காணும் தெளிவுடையவர்கள் மெய்ப்பொருளை அடைவார்கள். அவர்களே உண்மையான தேடுதல் உடையவர்கள்.
-தம்மபதம்
மிகவும் கொடுமையான இந்தக் கலிகாலத்திற்கும் ஒரு நல்ல குணமுண்டு. ஸ்ரீகிருஷ்ணனுடைய திருப்பெயரைக் கூறுவதாலேயே ஒருவன், சம்சார சாகரத்திலிருந்து விடுதலை பெற்று வைகுண்டத்தை அடைகிறான்.
-ஸ்ரீவிஷ்ணு புராணம்
தனது ஆச்சார அனுஷ்டானங்களான அறநெறிகள் அனைத்தையும் கைகழுவியவனும், அனைத்துப் பாவங்களையும் விரும்பிச் செய்தவனும்பகவானது திருப்பெயரைக் கூறுவானேயாகில், நிச்சயமாகப் பாவங்களிலிருந்து விடுதலை அடைகிறான்.
-வைஸம்பாயன ஸம்ஹிதை
தீமையைத் தவிர்த்துவிடு, நன்மை செய்யப் பழகு, மனதைத் தூய்மையாக்கு, எவரையும் வெறுக்காதே, யாருக்கும் தீங்கு செய்யாதே. மிதமான உணவும், (ஆன்மிக நலன் பொருட்டு) தனிமையான வாழ்க்கையும், எல்லோரிடமும் அன்பும் கொண்டிரு.
-பகவான் புத்தர்
"நமசிவாய' என்ற பஞ்சாட்சர மகாமந்திரம், மகா பாவங்களைப் போக்கி ஆத்மசுத்தியைக் கொடுக்கக் கூடியது. அந்த மகாமந்திரத்துடன் ஸ்ரீ பரமேஸ்வரனை இதயத்தில் தியானம் செய்துகொண்டும், ஜபம் செய்துகொண்டும், கிடைத்த ஆகாரத்தைப் புசித்துக் கொண்டும், புண்ணியத் தலங்களுக்குச் சென்று கொண்டும், மானத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் ஆடை உடுத்திக்கொண்டும் இருக்கக் கூடியவர்கள் எவர்களோ அவர்களே பாக்கியசாலிகள்.
-ஸ்ரீஆதிசங்கரர்
"இறைவன் நாமம்' என்ற அமிர்தத்தை எவர் பருகும்படிச் செய்கிறாரோ, அவரே உண்மையான குரு. பரமாத்மாவைக் காட்டிக் கண்களின் கலிதீரச் செய்பவரும், தன்னைக் கண்டால் பரமாத்மாவைப்போல தோன்றுபவருமே சத்குரு. ஆண்டவனைப் பற்றாதே; ஏனெனில், ஆண்டவன் நிதியும் நிலமும்தான் தருவான். ஆண்டவனின் அடியாரான குருவைப் பற்றிக்கொள். ஏனென்றால், அவர் ஆண்டவனையே உனக்குத் தருவார்.
-மகான் கபீர்தாசர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.