நில அளவை அலுவலரான லெஃப்டினெண்ட் கர்னல் மேக்ஸ்வெல், அருங்குளத்தையும் கப்பலாபுரத்தையும் பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து நீக்கி, எட்டையாபுர ஜமீனோடு சேர்த்துவிட்டார்.
1792 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற இந்த நில அளவை மற்றும் எல்லை மாற்ற நடவடிக்கைகளே பின்னர் நிகழ்ந்த துன்பச் சம்பவங்கள் பலவற்றுக்கும் தொடக்கப்புள்ளி எனலாம்.
தங்களின் பாளையத்திலிருந்து எடுக்கப்பட்ட ஊர்களுக்குள் யாரும் கால் வைக்கலாகாது என்று கட்டபொம்மன் இட்ட ஆணைக்கு அனைவரும் அடிபணிந்தனர். அதே சமயம், "இவ்வாறு செய்தது தவறு' என்று ஆங்கிலேய அலுவலர்களுக்குக் கட்டபொம்மன் கடிதமும் எழுதினார். பிரித்துப் பிரிவினை செய்து, பின்னர் கையகப்படுத்தி விடுவார்கள் என்பதை உய்த்துணர்ந்த கட்டபொம்மன், கிஸ்தியும் வரியும் கட்ட மறுத்தார்.
"முன்னர் ஆற்காடு நவாப்புக்குக் கப்பம் கட்டியது வேறு. அவர் எங்கள் நாட்டவர். வணிகத்தின் பொருட்டு வந்து தங்கியவர்களுக்கு, காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இங்கே வாழும் நாங்கள் ஏன் கப்பம் செலுத்த வேண்டும்?' என்பதே கட்டபொம்மனின் நியாயமான எழுச்சியாக இருந்தது.
1792 தொடங்கி 1798 வரை இத்தகைய இழுபறியும் வாதப் பிரதி வாதங்களும் நீடித்தன. ஆலன் என்னும் பெயர் கொண்ட கம்பெனி அலுவலர் ஒருவர் கட்டபொம்மனிடம் தூது அனுப்பப்பட்டார்.
ஆறு ஆண்டுகளாகக் கட்டாத வரியை முழுவதும் கூடக் கட்டவேண்டாம். உங்களைப் பார்த்துப் பிற பாளையத்தாரும் முரண்டுகிறார்கள். ஆண்டுக்கு ஆயிரம் பொன் என்னும் பங்கில் ஆறாயிரம் பொன் கட்டுங்கள். கணக்கைச் சரி செய்துகொள்ளலாம் என்று நட்பு (?நடிப்பு) குரல் கொடுத்தார். முடியாது என்று கட்டபொம்மன் மறுத்தார். காரண காரியங்களை எடுத்துச் சொன்னார்.
பேசிப் பயனில்லை என்னும் நிலையில் ஆலன் புறப்பட, பாஞ்சாலங்குறிச்சி அலுவலர்களும் வீரர்களும் தங்களின் ஆத்திரத்தை அவர்மீது காட்ட முற்பட்டனர். என்னதான் இருந்தாலும், சமரசம் பேச வந்தவருக்கு ஊறு செய்யலாகாது என்னும் நேர்மையில் நின்ற கட்டபொம்மன், ஆலனோடு இன்னும் சில வீரர்களைத் துணைக்கு அனுப்பி, அவரைத் திருநெல்வேலியில் பத்திரமாகக் கொண்டுவிட ஏற்பாடு செய்தார். நெல்லையை அடைந்த ஆலன், நடந்தது அனைத்தையும் கம்பெனி நிர்வாகத்திற்குக் கடிதமாக எழுதி அனுப்பினார்.
எட்வர்ட் சாண்டர்ஸ் தலைமையில், ஜோசப் வெப், இர்வின், வில்லியம் பீட்டர் என்றொரு பெருங்கூட்டம் இதுகுறித்து ஆலோசனை செய்தது. இந்த மந்திராலோசனையின் முடிவுதான், ராமநாதபுரம் - நெல்லைப் பகுதிகளுக்கு டபிள்யூ. சி. ஜாக்ஸனை அனுப்புவது என்பதாகும்.
வில்லியம் காலின்ஸ் ஜாக்சன், தம்முடைய பதினெட்டாவது வயதில், புனித ஜார்ஜ் கோட்டையின் நிர்வாகத் துறையில், கிழக்கிந்தியக் கம்பெனியின் பணிகளில், எழுத்தராக நியமிக்கப்பட்டார். இங்கிலாந்தில் கப்பலேறி அப்போதைய மதராûஸ அடைந்திருக்க வேண்டிய ஜாக்சன், அப்போது நிலவிய அரசியல் மற்றும் சமூகச் சூழல்களில் தன்னுடைய திசையைத் திருப்பிக் கொண்டு பம்பாய் சென்ற கப்பலில் தாமும் பம்பாய் சென்றுவிட்டார்.
எப்படியோ, 1782 அக்டோபர் வாக்கில் மதராஸ் அடைந்தார். 1783 - ஆம் ஆண்டின் இறுதியில், திப்புசுல்தானோடு தூது பேசுவதற்கான குழு ஒன்றைக் கம்பெனி நியமித்தது. அப்போதைய மதராஸ் ஆளுநர் மெக்கார்ட்னி பிரபு, ஜாக்சனை அந்தக் குழுவின் செயலர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுத்தார்.
இதிலும், இதைத்தொடர்ந்து இதேபோன்ற செயல்பாடுகள் சிலவற்றிலும் கம்பெனிப் பணிகளின் மிகச் சிறந்த விசுவாசியாக ஜாக்சன் செயல்பட்டார். இந்தக் காலகட்டத்தில், சம்பளமாக, மாதத்திற்கு 20 அல்லது 30 பகோடாக்களை இவர் பெற்றிருக்கக்கூடும். ஒருசில கடிதங்களையும் பதிவுகளையும் வைத்துப் பார்த்தால், இதுபோன்ற தூதுக் குழுவினரை வசப்படுத்துவதற்கு, ஆற்காட்டு நவாப்பும் பிறரும், இவர்களுக்குத் தனியானதொரு தொகையை மாதா மாதம் தருவதற்கு முன் வந்ததாகத் தெரிகிறது.
1792 வாக்கில், கம்பெனியின் நிர்வாகச் செயலராக ஜாக்சன் பொறுப்பு வகித்த சமயத்தில், மாதம் 500 பகோடா வரைக்கும் இத்தகைய தனிக் கிம்பளம் பெறுவதற்கான வாய்ப்பு இருந்திருக்கிறது. இருப்பினும், இவற்றையெல்லாம் மறுதலித்து, கம்பெனியின் நிரந்தர விசுவாசியாக ஜாக்சன் இருந்திருக்கிறார்.
1796-இல் ஜாக்சனுடைய உடல் நலம் குன்றத் தொடங்கியிருந்தது. கம்பெனியின் பணிகளிலிருந்து தம்மை விடுவித்து விடும்படிவேண்டினார். 1796 ஜூன் 10}ஆம் தேதி ஹொபர்ட் (அப்போதைய மதராஸ் மாகாண கவர்னர்), ஆலுரட் க்ளார்க், எட்வர்ட் சாண்டர்ஸ்,
ஃபாலோஃபீல்ட் ஆகிய கம்பெனி நிர்வாகிகள் (ஆளுநர் குழு) இணைந்து, ஜாக்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஜாக்சனுடைய திறமை மற்றும் நேர்மை குறித்து கம்பெனி இயக்குநர்களுக்குத் தெரிவிப்பதாகவும், திருவாளர் பெüனி அவர்களின் ராஜினாமா சமகால அரசுக் காலத்திலேயே வருமென்றால், பாளையக்கார "பேஷ்கஷ்' கலெக்டர் பொறுப்புக்கான ஜாக்சனின் வேண்டுகோளை ஒத்துக்கொள்வதாகவும் இக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
இதை வைத்து நோக்கினால், பாளையக்கார "பேஷ்கஷ்' கலெக்டர் பொறுப்புக்குத் தம்மை நியமிக்கும்படி ஜாக்சன் வேண்டிஇருந்திருக்கவேண்டும். இதற்கிடையில்,1797-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கம்பெனி செயலர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்த ஜாக்சன், கர்நாடகத்தின் (தக்காணம்) தென்மண்டலக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். நியமனத்தின்போதே, தெற்கத்திய பாளையக்காரர்கள் மோசமானவர்கள் என்னும் எண்ணம் ஜாக்சனுக்கும் அப்போதைய கவர்னர் ஹொபர்ட்டுக்கும் இருந்ததாகத் தெரிகிறது.
இதே சமயத்தில்தான், நில அளவைக் குழப்பங்களும், கம்பெனி அலுவலர் ஆலன் என்பவர் கட்டபொம்மனிடம் சென்று பேசியதும் நிகழ்ந்தன.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.