காடுகளால் சூழப்பட்ட சிவனாரின் ஐந்து திருக்கோயில்கள் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
அவை: (1)முல்லை வனநாதர் (திருக்கருகாவூர்), (2) சாட்சிநாதர் (அவளிவநல்லூர்), (3) பாதாளேஸ்வர சுவாமி (திருஅரதைப் பெரும்பாழி- ஹரித்வார மங்களம்), (4) ஆபத்சகாயேஸ்வரர் (திருஇரும்பூளை), (5) வில்வ வனேஸ்வரர் (திருக்கொள்ளம்புதூர்) ஆகிய இந்த ஐந்துத் தலங்களையும், காலை 6 மணிக்கு கிளம்பினால் இரவு 8 மணிக்குள் ஒரே நாளில் தரிசிக்கலாம்.
இந்த வரிசையில் இரண்டாவதாக வருவதும், பாடல் பெற்றத் தலவரிசையில் 100}ஆவது இடத்தைப் பிடித்த "அவளிவநல்லூர்' திருத்தலத்தைப் பற்றிக் காண்போம்.
நல்லூராக இருந்த இவ்வூர், அவளிவநல்லூராகப் பெயர் பெறக்காரணமான ஒரு சம்பவம் உண்டு. இத்தலத்திலுள்ள செüந்தரவல்லி சமேத சாட்சிநாதர் கோயிலில், சிவபாதசர்மா என்ற ஆதிசைவர் பணிபுரிந்து வந்தார். அவருக்கு இரண்டு மகள்கள். இருவரும் ஒரே உருவ அமைப்பில், அழகே உருவாய் பிறந்து வளர்ந்தனர். அரசவைப் புலவரின் மகனுக்கு தன் மூத்த மகளை மணமுடித்து வைத்தார்.
புலவரின் மகன் உலக ஞானம் தேடி தேச யாத்திரை மேற்கொண்டார். இரண்டு ஆண்டுகள் உருண்டோடின.
இதற்கிடையே, இளைய மகளை நல்லான் என்பவனுக்கு மணமுடித்து வைத்தார் சிவபாத சர்மா. அவளும் தன் புக்ககம் சென்றாள்.
சிலகாலம் சென்றது. மூத்த மகளான சுசீலைக்கு அம்மை நோய் வந்து, உடல் மெலிந்து, கண்பார்வை பறிபோனது. அடையாளமே தெரியாவண்ணம் சுசீலை உருக்குலைந்து விட்டாள். மாப்பிள்ளை ஊர் திரும்புவதற்குள் சுசீலை குணமாக வேண்டுமென அனைவரும் சாட்சிநாதரை வேண்டினர். சிவபாதருக்கு உதவ வந்த இளைய மகள் தந்தை வீட்டிலேயே தங்கியிருந்தாள்.
தூர தேச யாத்திரை சென்ற புலவர் மகன் திரும்பி வந்தார். வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதைப் பார்த்தார். ""நோயுற்றவள் என் மனைவி அல்ல; இளையவளே என் மனைவி!'' என்று அடம்பிடித்தார்.
சிவபாதர் சாட்சிநாதரிடம் சென்று கதறினார். அச்சமயம் ஓர் அசரீரி "எதிரேயுள்ள சந்திர புஷ்கரணியில் சுசீலையை நீராடி வரச்சொல்' என ஒலித்தது.
அதன்படி, சுசீலையும் அத்திருக்குளத்தில் மூழ்கியதும், நோய் அனைத்தும் மறைந்து, கண் பார்வை வரப்பெற்று, அதிரூப சுந்தரியாய் அனைவரின் முன் எழுந்து வந்தாள்.
அப்போது ஈசன் பார்வதியுடன் இடப வாகனத்தில் தோன்றி, புலவர் மகனைப் பார்த்து ""மனம் தடுமாற வேண்டாம். அவளே இவள்!'' என்று, திசையெங்கும் எதிரொலிக்குமாறு சாட்சி சொன்னார். அதனால் இத்தல ஈசன் பெயர் "சாட்சிநாதர்' என்றும், "அவளே இவள்' என்ற சொல் நல்லூருடன் இணைந்து இத்தலம் "அவள் இவள் நல்லூர்' என்றும் ஆனது.
இந்த நிகழ்வு தை மாத அமாவாசை அன்று நடந்ததால், அந்த நாளை இவ்வூர் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடி ஈசனை வணங்கி மகிழ்ந்து வருகின்றனர்.
பிப்ரவரி 11-ஆம் தேதி வியாழக்கிழமையன்று தை அமாவாசை தீர்த்தப்பெருவிழா இங்கு நடைபெறுகிறது. சிவக்கொண்டாட்டத்தில் கலந்து பேரானந்தம் அடைவோம். இத்தலம், கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேலும் விவரங்களுக்கு: ஸ்ரீஉமாபதி சிவாச்சாரியார்: 8940882365.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.