வெள்ளிமணி

மக்களின் காவலன் புரி ஜகந்நாதர்!

எஸ்.எஸ். சீதாராமன்

இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் தற்போதைய ஒடிஸா மாநிலத் தலைநகரமான புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தூரத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. சொல் வழக்கில் நாம் "பூரி" என்று கூறினாலும் இதன் வரலாற்றுப் பெயர் "புரி" என்றே உள்ளது.

தல வரலாறு: கிருஷ்ணாவதாரத்தின் முடிவில், ஜரா என்ற வேடனால் அம்படி பட்டு; சாய்ந்த ஸ்ரீகிருஷ்ணரின் உடல் மரக்கட்டைபோல் ஆனது; பின் அவர் தன் இருப்பிடமான ஸ்ரீவைகுண்டம் சென்றடைந்தார். 

பூரியை ஆண்டஇந்திரத் துய்மன் என்ற மன்னர் தன் கனவில் வந்த கண்ணனின் ஆணையை ஏற்று கடலில் மிதந்து வந்த அந்த மரக்கட்டையை எடுத்து வந்து சிற்பியைக் கொண்டு சிலை செய்யப் பணித்தார். 

சிற்பியால் சிலையை செதுக்க முடியவில்லை. உளி இரண்டாய் உடைந்துவிட்டது. அப்போது அங்கு தோன்றிய ஒரு முதியவர் "இச்சிலையை 21 நாள்களுக்குள் செய்து தருகிறேன்; ஆனால் வேலை முடியும் வரை யாரும் அறைக்குள் வரக் கூடாது" என்றார்.

அதனை ஏற்று அவருக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து, மூடிய அறைக்குள் சிலைவடிப்பு ஆரம்பித்தது.

முதல் மூன்று நாள்கள் மட்டும் உளிச்சத்தம் கேட்டது; பின்னர் எந்த அரவமும் இல்லாததால் "உள்ளே என்ன ஆனதோ?' என்று பதற்றமடைந்து கதவைத் திறந்து விட்டார் மன்னர். 

இதனால் தச்சன் உருவில் வந்த நாராயணர் கோபமுற்று ""என் கோரிக்கையை மறந்து கதவைத் திறந்து விட்டாய். ஆகையால் இக்கோயிலில் நிர்மாணிக்கும் சிலைகள் அனைத்தும் அரைகுறையாகவே இருக்கும்; அதை அப்படியே பிரதிஷ்டை செய்ய வேண்டும்!'' என்று கூறி மறைந்தார். 

மன்னர் தன் தவறை உணர்ந்தாலும் நாராயணரின் கட்டளையை ஏற்று அப்படியே பிரதிஷ்டை செய்தார். அவருக்குப் பின்வந்த "தையுமா" என்ற மன்னனும் இக்கோயிலைப் புனரமைத்தான்.
 
அதன்பிறகு இந்த ஆலயம் கங்கர் குலத்தரசன் ஆனந்த வர்மரால் கி.பி. 1135}இல் மீண்டும் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் 1200} ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. 
"பஞ்சரத முறைப்படி" அமைக்கப்பட்ட இக்கோயிலில், மேற்கில் எட்டு உலோகக் கலவையால் ஆன நீலச்சக்கரம் உருவாக்கப்பட்டது. "ஏழைகளின் காவலன்" என்ற பொருள்பட "பதீத பவன் பாவனா" என்று இக்கோயிலின் மேல் பறக்கும் கொடியினை அழைக்கின்றனர். 

பூரி நகர எல்லைக்கு சுமார் 20 கி.மீ. தூரத்திலிருந்து பார்த்தாலே அக்கோயிலின் உச்சியில் பறக்கும் கொடி தெரியும்.

இங்குள்ள ஜெகந்நாதர், பலபத்ரா (பலராமர்) மற்றும் சுபத்திரை ஆகியோரின் மூலவர் முகம் கைகள் மட்டுமே காணும் வகையில் மரத்தினால் ஆன சிலாரூபம் ஆகும். இவற்றை 12 ஆண்டுகளுக்கு  ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மரத்தினால் கடைந்து புதிதாகச் சிருஷ்டித்து பலமான வேள்விகளுக்குப் பின் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

இக்கோயிலின் பிரசாதங்கள் புத்தம் புதிய பானையில் ஒன்றன் மீது ஒன்றாக சுமார் 9 பானைகள் வைக்கப்பட்டு கீழே தீயிடப்படுகிறது. சாதாரணமாக, அடிப்பானை தானே முதலில் வெந்து சாதமாய் கிடைக்கும்; ஆனால் இங்கு மேலே உள்ள பானையில் ஆரம்பித்து கடைசியாக அடிப்பானை வெந்து பிரசாதமாகிறது. 

அனைத்துப் பானைகளும் இறைவனின் சந்நிதியில் படைக்கப்பட்டு, பிறகு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

பல ஆச்சரியங்கள் அடங்கிய இத்திருக்கோயிலில், ஒவ்வோர் ஆண்டும் தமிழ் ஆடி மாதப் பெளர்ணமியில் தொடங்கி ஒன்பது நாள்கள் நடைபெறும் ரதயாத்திரை குறிப்பிடத்தக்கது.  இந்தத் தேர்த் திருவிழாவை, "குண்டிச யாத்ரா",  "கோச யாத்ரா",  "நவ தீனயாத்ரா" எனப் பல பெயர்களில் அழைக்கின்றனர்.

"ஜெகந்நாதர், பலபத்ரா, சகோதரி சுபத்ரா ஆகிய மூவரும் தங்கள் சொந்த மண்ணிற்குத் தனித் தனியே தேரில் சென்று, ஏழுநாள்கள் அங்கு தங்கி, பின்னர் பூரிக்குத் திரும்பி வருகிறார்கள்" என்ற ஐதீகத்தை அடிப்படையாகக் கொண்டே இத்திருவிழா நடைபெறுகிறது.

இதில் ஒரு புதுமை என்னவெனில் ஒவ்வொரு வருடமும் மரத்தினாலான புதிய தேர்கள் செய்யப்படுகின்றன. மிகவும் உயரமான இந்தத் தேர்களுக்கு 1,100 மீட்டர் வண்ண வண்ணமான துணிகள் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது. 

மூல மூர்த்திகளே தேரில் எழுந்தருளுவது இந்த ரதவிழாவின் முக்கிய அம்சமாகும். பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் ரத்ன வீதியைத் தங்கத் துடைப்பத்தால் பூரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார். 

முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி தேரும் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகந்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

பூரி ஜெகந்நாதர் ஆலயத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவிலுள்ள குண்டிச்சா கோயில் நோக்கிச் செல்லும் ரதயாத்திரையின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோயிலில் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பூரி ஜெகந்நாதர் கோயிலை வந்தடையும்.
ஆதிசங்கர பகவத் பாதாளின் திருப்பாதங்கள் பட்ட புண்ணியபூமி இந்த பூரி நகரம்; அவர் நிறுவிய திருமடங்களில் பூரியும் ஒன்றாகும். 

ஸ்ரீராமாநுஜர், மத்வாச்சாரியார் போன்றோர் இங்கு வந்து தங்கி ஜெகந்நாதரை தரிசித்து, அவரைப் போற்றிப் பாடல்களையும் புனைந்துள்ளனர். 

இவ்வாண்டு பூரி ஜகந்நாதர் ரத யாத்திரை ஜூலை 12 (திங்கள்கிழமை) }இல் நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

அரசுப் பள்ளிகளின் சாதனை!

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT