வெள்ளிமணி

இடர்கள் நீக்கும் இடர்குன்றம்

தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் ஆடு, மாடுகள் மேய்த்து வந்த இளைஞன் ஒருவன் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். 

செங்கை பி. அமுதா

தொண்டை மண்டலத்தில் இடையன் காடு என்ற ஊரில் ஆடு, மாடுகள் மேய்த்து வந்த இளைஞன் ஒருவன் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். 

அப்போது அவன் எண்ணம், சொல், மனம் முழுவதும் விலங்குகளின் அரசன் சிங்கத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும். ஒருநாள் யாரோ தெரிவித்த சிம்மமூர்த்தியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான்.

அவரை எப்படிக் காண்பது என்று முதியோரிடம் கேட்க, அவர்கள் காட்டிய வழியில் செல்லலானான்.  

பல குன்றுகளைக் கடந்து காட்டு வழியில் செல்லும்போது, அசரீரி ஒன்று, "இந்தக் குன்றே அரி! இங்கே தவமிருந்தால் சிம்மமூர்த்தி காட்சி தருவான்!' என்று கூறியது. 

அதன்படி அக்குன்றில் அமர்ந்து சிம்மமூர்த்தியை தரிசிக்க வேண்டுமென சிந்தையை ஒருமுகப்படுத்தி தவமிருந்தான். 

ஒரு சித்ரா பெளர்ணமியன்று  ஐந்துதலை நாகம் குடைப்பிடிக்க, கர்ஜனை செய்து கொண்டு சிம்மமூர்த்தி காட்சி தந்தார். கண்விழித்து வணங்கிய இளைஞன் ""காட்டரசன் உருவில் வந்த நீங்கள் பக்தர்களுக்கு அருளும் வண்ணம் இதே குன்றில் இருந்து இடர்களைத் தீர்த்தருள வேண்டும்!'' என வேண்டினான். 

அப்படியே அருள்வதாக சிம்மமூர்த்தி வாக்களித்தார். அவ்வாறு நரசிம்மமூர்த்தியை அந்தி சாயும் வேளையில் தரிசித்த அந்த இளைஞன்தான் "இடைக்காடர்' என்னும் "இடைக்காட்டுச்சித்தர்'  என்பது தல வரலாறு.

மகேந்திரவர்ம பல்லவர் காலத்தில், சிற்றரசன் வயந்தப்பிரியன் கந்தசேனன் என்பவன் இடைக்காடருக்கு சிம்மமூர்த்தி காட்சி தந்த இடத்தில் ஒரு புதிய குடைவரைக் கோயிலை உருவாக்க ஏற்பாடுகள் செய்தான்.  

அவ்விடத்தில் ஊரார் சென்று பார்க்கும்போது, அக்குன்றாகவே சுயம்புவாய் நரசிம்மர் ஐந்து தலை நாகத்தின் கீழ் உருவாகி இருப்பதை அறிந்து, மக்கள் வியந்து வழிபடத் துவங்கினர். 

இயற்கையாய் வந்துதித்த இறைவனை வேண்ட, அவர்களின் அனைத்து இடர்களும் நீங்கின. அந்தக் குன்றும் இடர் நீக்கும் குன்றாக அமைந்ததால் "இடர்குன்று'  என அழைக்கப்பட்டது.  

இடைக்காட்டுச்சித்தர் உறையும் குன்றாதலால் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நரசிம்மர் அருளால் நீங்கின. மக்களின் நம்பிக்கைக்குரிய குன்றமாக, இடர்நீக்கும் குன்றமாக பெருமாளே விளங்குகின்றார்.

இடர் நீக்கும் குன்றத்து லட்சுமி நரசிம்மர் கருவறையில் சுயம்பு மூலவருக்கு முன்புறமாக அபிஷேக சிலாத் திருமேனியாக லட்சுமி நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். 

நம்மாழ்வார், பேயாழ்வார், சுயம்பு இடைக்காடர், பெரியாழ்வார், கருடன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். சற்று அருகில் அனுமன் சந்நிதி உள்ளது. 

தினமும் ஒருகால பூஜை நடைபெறும் இத்திருக்கோயில் காலை 8 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும்.  மாலைவேளைகளில்  ஊருக்குள் இருக்கும் அர்ச்சகருக்குத் தகவல் தெரிவித்தால் வந்து சுவாமி தரிசனம் செய்து வைப்பதாகக் கூறுகின்றனர்.

நரசிம்ம ஜயந்தி, அனுமன் ஜயந்தி, இடைக்காடருக்கு காட்சி தந்த சித்ரா பெளர்ணமி, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

பெளர்ணமி நாள்களில் மாலை 6 மணிக்கு இடர் நீக்கும் குன்றமாக எழுந்தருளியிருக்கும் நரசிம்ம உற்சவர், மலைப் படிக்கட்டில் இருந்து புறப்பட்டு, திருமலையீசுவரர் கோயில் வரை சென்று கிரிவலம் வருவது வழக்கத்தில் உள்ளது. 

இவரை தரிசிப்பதால் பில்லி, சூனியம் போன்றவை அகலும் என்கிறார்கள். கடன் தொல்லைகள் அகலும்; வியாபாரம் அபிவிருத்தியடையும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

அமைவிடம்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் உள்ள கொட்டமேடு கூட்டு ரோடு அருகே 2 கி.மீ. தொலைவில் இடர்குன்றம் திருத்தலம் அமைந்துள்ளது. 

தொடர்புக்கு: 9360017923.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT