நாம் சைவர்களா? இந்துக்களா?: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
இந்து சமயம் பற்றி ஆராய்வதற்கு முன்பாக, வேறு சில விடயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. வேதமே நம் சமயத்தின் முதல்நூலாம். வேதம் பலதெய்வங்களையும் பாராட்டி உரைக்கின்றது.
(சென்ற இதழ் தொடர்ச்சி...)
இந்து சமயம் பற்றி ஆராய்வதற்கு முன்பாக, வேறு சில விடயங்களைச் சொல்லவேண்டியிருக்கிறது. வேதமே நம் சமயத்தின் முதல்நூலாம். வேதம் பலதெய்வங்களையும் பாராட்டி உரைக்கின்றது.
ஆனால், வேதத்தில் இன்ன தெய்வம் தான் பெரிய தெய்வம் என்பதான, கருத்து ஏதும் இல்லை. அது சகல தெய்வங்களையும் ஒரே பரமாத்மாவின், வேறுபட்ட வடிவங்களாகத்தான் ஏற்றத் தாழ்வில்லாமல் சொல்கிறது. ஓரிடத்தில் "எல்லாம் சிவரூபமே' என்றும், மற்றோரிடத்தில் "எல்லாம் விஷ்ணுரூபமே' என்றும், இன்னோரிடத்தில் "வர்ணனே பரமாத்மா' என்றும் அது பேசும்.
Advertisement
"அப்படியாயின் வேதக்கருத்தில் குழப்பம் இருக்கிறதா?' என்று கேள்வி பிறக்கும் - நிச்சயம் அங்ஙனம் இல்லையாம். வேதத்தைப் பொறுத்தவரை, ஒரே உண்மைக்குப் பலபெயர்கள் கொடுக்கப்பட்டது என்பதே, அதன் முடிந்த முடிவு.
"ஏகம் ஸத் விப்ரா: பஹஜதா வதந்தி' என்று, அது தன்கருத்தைத் தெளிவாய்ச் சொல்கிறது.
வேதம் இப்படிச் சொல்லியிருப்பினும், வழிபட்டோர், தம் பற்றுதல் காரணமாக, தத்தம் இஷ்டதெய்வங்களையே பரம்பொருளாய் உரைத்து, தம்முள் பிரிவு கண்டனர். இங்ஙனமாய் எழுந்த குளறுபடிகளால் ஏற்பட்ட பூசல்களைத் தீர்க்க, ஆதிசங்கரர் "ஷண்மத ஸ்தாபிதம்' செய்தார்.
சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்தியம், கெளமாரம், செளரம் ஆகிய, இந்த ஆறு சமயவழிகளையும் சுத்தப்படுத்தி வைதீகமாக ஆக்கிக் கொடுத்து, இன்னொரு தெய்வத்தை நிந்திக்காமல், தத்தம் இஷ்ட தெய்வத்தை அவரவர் சுதந்திரமாய் வழிபடவே, சங்கரர் "ஷண்மத ஸ்தாபனத்தை'ச் செய்தார் என்பர்.
ஆதிசங்கரர் வகுத்த, வேதங்களை முதலாய்க் கொண்ட ஷண்மதங்களும், சிந்துநதிக் கரையில் வளர்ந்த சமயங்கள் என்றபடியால், இங்கு வந்த பிற நாட்டார் இவ் ஆறு சமயங்களையும் பொதுப்படக் குறிக்க, "இந்து சமயம்' என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
பிறகென்ன? வெள்ளைக்காரர்கள் சொன்னால் விடுவோமா நாம்? வெள்ளைக்காரன் சொன்னதுவே வேதம் என்பது தானே இன்றைய நம் கொள்கை. அதனால் அப்பெயரையே நாமும் பயன்படுத்தத் தொடங்கினோம். இதுவே "இந்து சமயம்' எனும் பெயர் பிறந்து நிலைத்த கதையாம்.
ஆனாலும் வெள்ளைக்காரர் சொன்ன இந்துசமயம் என்ற பெயர், சங்கரர் வகுத்த ஷண்மதங்களையே குறித்து நின்றது.
சுருங்கச் சொன்னால் சங்கரர் பெற்ற பிள்ளைக்கு, வெள்ளைக்காரர்கள் இட்ட புதுப் பெயரே இந்துமதம் என்பதுவாம். விரிவு கூடிக்கொண்டே போகிறது.
"முடிவாய் என்னதான் சொல்லவருகிறீர்? நமது சமயம் சைவசமயமா? இந்துசமயமா?'
உங்கள் கேள்வி புரிகிறது.
இங்கு நாம் பின்பற்றும் சமயம் சைவசமயமே. அதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. எனினும் எமது சமயத்தை, இந்துசமயம் எனும் பெயரால் அழைப்பதிலும் தவறில்லையாம். நான் சமாளிப்பதாய் நினையாதீர்கள். அடுத்த பந்தியில் என் கருத்தை விளக்கம் செய்கிறேன்.
உங்கள் தெளிவுக்காக ஒரு உதாரணம் சொல்லுகிறேன். "ஏசியன்ஸ்' என்ற ஆங்கிலப் பெயருக்குள், இந்தியர்களான நாம் அடங்குவோமா? இல்லையா?
"நிச்சயம் அடங்குவோம்' என்பதை அறிவீர்கள். "ஏசியன்ஸ்' என்பது, பூமியின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் இருக்கும், அனைத்து நாட்டவரையும் குறிக்கும் பொதுப்பெயர் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால் அக்குழுமத்தில் இருந்து, நம்மைத் தனித்து, பிரித்து இனங்காட்டும் பெயராக, "இந்தியர்' அல்லது "இலங்கையர்' என்னும் பெயர்கள் அமைகின்றன.
"இந்தியன்' அல்லது "இலங்கையன்' என்று குறிப்பிடப்படும் எங்களை, "ஏசியன்ஸ்' என்று சொல்லும் போது, அந்த "ஏசியன்ஸ்' என்ற பெயருக்குள் மறைமுகமாய், இந்தியன் அல்லது இலங்கையன் எனும் எங்களின் தனித்த பெயர்களும் அடங்கிநிற்கும் என்பது, வெளிப்படையன்றோ?
அதுபோலவே, இந்துமதம் என்று சொல்லும் அந்த பொதுப்பெயருக்குள், எங்கள் தனித்துவப் பெயரான சைவம் என்பதுவும் அடங்கியிருக்கிறது, என்பதை நாம் உணர்தல் வேண்டும்.
ஆதலால் சைவர்களை இந்துக்கள் என்று குறிப்பிடுதலில், பெருந்தவறேதும் இல்லையாம்! நான் இந்தியன் என்றோ இலங்கையன் என்றோ உரைக்கும் போது, என் தனித்த அடையாளம் பேணப்படுவது உண்மையேயாயினும், "ஏசியன்' என்று உரைத்தலின்போது ஏற்படும் விரிந்த ஒரு குழுமப்பலம், தனித்து ஓர் நாட்டின் பெயர் சொல்லி அழைக்கும் போது, இழக்கப்படுகிறது என்பது உண்மையேயாம்.
இன்னும் தெளிவிற்காகச் சொல்வதானால், நான் மதுரைக்காரன் என்று சொல்லும் போது, என் தனி அடையாளம் உரைக்கப்படுகிறது. நான் இந்தியன் என்று சொல்லும்போதோ, என் விரிந்த பலம் உரைக்கப்படுகிறது. இதுவே நான் ஒரு சைவன் என்று சொல்வதற்கும், நான் ஓர் இந்து என்று சொல்வதற்கும் உள்ள பேதமாம்.
இந்து எனும் பெயருக்குள் அடங்கியிருக்கும் ஆறு சமயங்களும், நம் மண்ணில் விளைந்த ஆதார சமயங்களாம். பிற்காலத்தில் பிறநாட்டவர்களின் வருகையால், வேதத்தை அடிப்படையாய்க் கொள்ளாத பல புதுப்புதுச் சமயங்களும், நம் மண்ணில் கால்பதிக்கும் உரிமை பெற்று விட்டன. அதுமட்டுமல்லாமல் அவை இன்று, வேதத்தின் வழிவந்த நமது ஆதாரசமயங்களை, விழுங்க முனைந்து நிற்பதும் வெளிப்படையாம்.
வேதத்தை முதலாய்க் கொண்ட சமயங்கள் என்றவகையில், நமக்கு உறவான ஆறு சமயங்களும், பரம்பொருள் விடயத்தில் வேறுபட்டிருப்பினும், கொள்கையளவில் அவை மாறுபடாதவையாம். இந்நிலையில், வேற்றுச் சமயங்களால் இடருற்று நிற்கும் நம்மவர்க்கு, தனித்த அடையாளத்தைவிட ஒருமித்த பலமே அவசியமாகிறது. அவ் அடிப்படையில் நோக்க, அறுசமயத்தையும் சேர்ந்த நம்மவர்கள், இந்துக்கள் எனும் பெயரில் ஒன்றுபட்டு, பலம் வளர்த்து நிலைக்க முயல்வதுவே சரியான வழியாம்.
நம் சமயங்களுக்குள் இருக்கும் பிரிவு ஒரு குடும்பப்பிரிவு. அப்பிரிவுகளை நிலைநிறுத்த நினைந்து, வேற்றுச் சமயத்தாரிடம் நம் சமயங்களை விற்றுவிடுவது உகந்தது அல்லவாம்.
இவ்விடத்தில்,
"ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி'
எனும் பாரதியின் பாடலை நினைவுறுத்தல் அவசியமாகிறது.
நிறைவாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இன்றைய நிலையில் மொழியைப்போல சமயமும், ஓர் இன அடையாளமாய் ஆகிவிட்டபடியால், அதுபற்றிய வரையறைகளை, நாம் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது.
அங்ஙனமன்றி நம் ஆன்ம ஈடேற்றத்திற்கே சமயம் என்ற, நிலையில் சிந்திப்போமாயின், அந் நிலைக்கு இப்பெயர்கள் எல்லாம் எவ்விதத்திலும், இடையூறு இயற்றாதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முடிந்தவரை சமயத்தை இன அடையாளமாய் ஆக்காமல், அதனை ஆன்ம ஈடேற்றத்திற்காய் பயன்படுத்துவதே, உயர்ந்தது என்பது என் உறுதிபட்ட முடிவு.
(நிறைவு)