முகப்பு
வெள்ளிமணி

தேவியின் திருத்தலங்கள் - 26: திருஈங்கோய்மலை மரகதாம்பிகை

"விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் விநாசம் கீனாசோ பஜதி: தனதோ யாதி நிதானம்' 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:


"விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம் 
விநாசம் கீனாசோ பஜதி: தனதோ யாதி நிதானம்' 

-செளந்தர்ய லஹரி 

ஈசனின் உடலில் பாதியாகத்  திகழ வேண்டும் என்று அன்னை பல இடங்களில் தவம் இருந்தாலும் திருஈங்கோய்மலை மிகச் சிறப்புப் பெற்ற தலமாகத் திகழ்கிறது. அகத்தியர் ஈ வடிவில் ஈசனை வலம் வந்து தரிசித்த மலை.

ஒரு சமயம் வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் வலிமை மிக்கவர் என்ற போட்டி எழுந்தது. ஆதிசேஷன் தன் ஆயிரம் முடிகளாலும் மேரு மலையைச் சுற்றிக் கொள்ள, வாயு அதைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. காற்று இல்லாத இடங்களில் உயிர்கள் மடியத் தொடங்கின.

எனவே, தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்ட அவரும் தன் முடிகளில் ஒன்றைச் சுருக்கி வாயு செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தார். அந்த இடைவெளியில் தன் முழுவேகத்துடன் மேருச் சிகரங்களில் ஐந்தைப் பிடுங்கிக்  கொண்டு வாயு தென்திசை நோக்கிச் சென்றார். 

அந்தச் சிகரங்கள் சிதறி விழுந்த இடங்கள் சிவத்தலங்கள் ஆகின. அவற்றுள் ஒன்றே மரகதாசலம் என்ற திருஈங்கோய்மலை. ஆதிசேஷனின் அம்சமாக ஒரு புளியமரம் முளைத்தது. அதுவே இங்கு தலமரமாக விளங்குகிறது.

பிருங்கி ரிஷியானவர் அம்பிகையைத் துதிக்காமல் ஈசனை மட்டுமே வணங்கி வந்தார். அதில் மனம் வருந்திய அன்னை, இத்தலத்தை அடைந்து, லக்ஷ்மி தீர்த்தம் உண்டாக்கிப் பன்னிரண்டு ஆண்டுகள் கடுமையான தவம் செய்தார். ஈசன் அவர்மேல் கருணை கொண்டு கிருபாநிதியாக அவர் முன் தோன்றி தன் உடலின் நீங்காத பாகமாக அன்னையை ஏற்றார். இதனால் அர்த்தநாரீஸ்வரர் என்றும் அழைக்கப் பட்டார்.

இத்தலம் போக மோக்ஷத்தை அளிக்கக் கூடியது. கார்த்திகை வெள்ளிக்கிழமையன்று இங்கு பாயசம் படைத்து தானம் செய்தால் துன்பங்கள் நீங்கும். 

நவராத்திரியில் நவமியில் கருநெய்தல் மலர்களால் அம்பிகையை அர்ச்சனை செய்தால் கலைகளில் நிபுணத்துவம் பெறலாம் என்பது மகரிஷிகளின் வாக்கு. 
நோய் தீர்க்கும் புஷ்கரணி: பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விஷம் உண்டானது. அதை ஈசன் தன் கண்டத்தில் தாங்கி நீலகண்டன் ஆனார். அமிர்தம் எழுந்தபோது அதிலிருந்து சிந்திய சில துளிகள் மரகதமலையின் வடபாகம் வந்து விழுந்தது. அங்குள்ள புஷ்கரணியின் ஒரு துளியை உட்கொண்டால் கூட நோய்கள், எல்லாவித விஷங்களும் நீங்கும்.

அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா பீடம். ஈசன் அம்பிகைக்கு இடப்பாகம் தந்த மலை என்பதால்  இதற்கு சக்திமலை என்றும் பெயர். இதைக் குறிக்கும் வகையில் மலையிலும், முன் மண்டபத்திலும் அர்த்தநாரீஸ்வரர் உருவங்கள் உள்ளன.

இரு துர்க்கைகள்: மரகதாம்பிகை நின்றகோலத்தில் காட்சி தருகிறாள். கோபுர அமைப்பில்  மூன்று கலசங்களுடன் கருவறை விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கோஷ்டத்தில் துர்க்கை காலுக்குக் கீழ் வதம் செய்த மகிஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்த ரூபத்துடனும் காட்சி அளிக்கிறார்கள். ஒரே இடத்தில் துர்க்கையின் வெவ்வேறு உருவங்கள் இருப்பது இங்கு சிறப்பான ஒரு அமைப்பாகும்.

தேவி லலிதா, மரகதவல்லி என்றும் அழைக்கப்படுகிறாள். இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. மாசி சிவராத்திரியின்போது லிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் பட்டு லிங்கம் நிறம் மாறிக் காட்சி அளிக்கும்.

ஐந்நூறு படிகள் அமைந்த மலைக்கோவில். சேர,சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டது. அம்பிகையை வணங்கினால் சகல வளங்களும் கிடைக்கும் என்றாலும், முக்கியமாக திருமணத்தடை அகலும், குழந்தைப்பேறு கிடைக்கும்.

தைப்பூசத்தன்று ஈசன் அம்பிகையுடன் காவிரிக்கரையில் எழுந்தருள்கிறார். இங்கு கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி மூன்று விதமாகக் காட்சி தருகிறார். அம்பிகை ஈசனை வழிபட்டு இடப்பாகம் பெற்றதால் இத்தலத்திற்கு வந்து அம்பிகையை வழிபட்டால் தம்பதிகள் ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈ வடிவில் ஈசன் தரிசனம்: தென்திசை வந்த அகத்தியர் இம்மலையை அடைந்தபோது நடை சாற்றி விட்டார்கள். ஈசனைத் தரிசிக்க முடியவில்லயே என்று அவர் வருந்தியபோது, மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி வரச்சொல்லி அசரீரி ஒலித்தது. அதேபோல் அவர் நீராடிய போது "ஈ' வடிவம் பெற்றார்.

மகிழ்ச்சியுடன் மலைமீது பறந்து வந்து, சந்நிதிக் கதவின் சாவித் துவாரம் வழியே உட்சென்று ஈசனை வலம் வந்தார். பின் தன் பழைய வடிவம் பெற்றார். எனவேதான் இம்மலை "திருஈங்கோய்மலை' என்று அழைக்கப்படுகிறது. சத்திய யுகத்தில் இது மரகதமலையாக இருந்து, கலியுகத்தில் கல் மலையாக மாறி விட்டது.

இங்கு ஸ்ரீலலிதா வெள்ளைப் பளிங்குத் திருமேனியாகத் திகழ்கிறாள். இடது கையில் கரும்பு, வலது கையில் புஷ்ப பானம் இருக்கிறது. இடது கீழ்க்கையில் பாசம், வலது கீழ்க்கையில் அங்குசமும் ஏந்தி, அம்பிகை எழுந்தருளி இருக்கும் இந்தப் பீடம் "மேரு பீடம்' என்று அழைக்கப்படுகிறது.

அம்பிகைக்கு சிம்ம வாகனமும் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மகேஸ்வரன் நான்கு கால்களாக இருந்து தாங்குகின்றனர். லட்சுமி, சரஸ்வதி, மும்மூர்த்திகள், இந்திரன், வருணன் என்று அனைவரும் பூஜிக்க, அம்பிகை கோலோச்சுகிறாள்.

பெண் துறவிகள்: சர்வம் சக்தி மயம் என்பதுபோல் இந்த லலிதா பீடத்தில் யோகினிகளே அனைத்து பூஜைகளும் செய்கிறார்கள். 

"மகா சதுஸ் சஷ்டி கோடி கண சேவிதா' என்று போற்றப்படுவதுபோல் பெண் துறவிகளே அபிஷேகம், ஆராதனைகள், நவாவர்ணப் பூஜைகள், ஸ்ரீவித்யா ஜபம், லலிதா அர்ச்சனை, திரிசக்தி அர்ச்சனை அனைத்தையும் முறைப்படி செய்கிறார்கள். 

இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்த பெருமிதம் பொங்கக் காட்சி அளிக்கும் தேவியைத் தரிசிக்கும் பாக்கியமே மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

"உன் கண் விழியால் வெற்றி கொண்டுதானே ஈசனின் இடபாகத்தில் அமர்ந்தாய்' என்கிறார் அபிராமி பட்டர். "மன்மதனையே தன் விழியால் எரித்த ஈசனை, உன் அருள் விழியால் வசீகரித்து ஆட்கொண்டாய்' என்கிறார்.

நிலையான மகிழ்ச்சி என்பது அம்பிகையைத் தரிசிப்பதும், அவள் நினைவில் ஆழ்ந்திருப்பதும்தான்..!

அமைவிடம்: திருச்சி - நாமக்கல் சாலையில் திருச்சியிலிருந்து சுமார் 47 கி.மீ. தொலைவில் திருஈங்கோய்மலை திருத்தலம் அமைந்துள்ளது.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →