"தென்னாட்டிலேயே மிகச் சிறந்த வீரர் சிதம்பரம் பிள்ளைதான் என்பது திலகரின் கருத்து' என்று ராஜாஜி அவர்கள் கூட்டமொன்றில் குறிப்பிட்டார். இந்த அளவுக்குத் திலகர் மனத்திலும், தேசப் போராட்ட வீரர்களின் உள்ளங்களிலும் பீடமிட்டு அமர்ந்து கொண்டார் வ. உ. சி.
அந்நிய ஆட்சியின் இடர்ப்பாடுகளைச் சுட்டிக் காட்டி, சுதேசிய மாண்புகளை விளக்குவதற்காக "தேசாபிமான சங்கம்' என்பதனை 1908-இல் வ. உ. சி. தொடங்கினார். நெல்லையையும் தூத்துக்குடியையும் மையங்களாகக் கொண்டு செயல்பட்ட இச்சங்கம், ஆங்காங்கே கூட்டங்கள் நடத்தி நாட்டு நடப்புகளையும், விவரங்களையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னது.
மெல்ல மெல்ல அரசியலுக்குள் நுழைந்து கொண்டிருந்த வ. உ. சி-யிடம், தூத்துக்குடி கோரல் மில்ஸ் பிரச்னையும் முன்வைக்கப்பட்டது. எதிர்வந்த காலங்களில், இந்தக் கோரல் மில்ஸ்தான், வ. உ. சி-யின்வாழ்க்கையைப் பலவிதங்களிலும் புரட்டிப் போட்டது என்றாலும் மிகையில்லை.
பொருநைக் கரைகளின் களிகுரலாக வ. உ. சி-யின் பெயர் ஒலித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில்தான், பொருநையாளிடம் வந்து சேர்ந்தார் ஒரு சுவீகாரப் புதல்வர். கப்பலோட்டிக் கரை கடந்துகொண்டிருந்த ஒட்டப்பிடாரத்து மகனையும், இளந்துறவியாக புரட்சிப் புத்துரைகள் ஆற்றிக் கொண்டிருந்த வத்தலகுண்டுவின் மகனையும் ஒருசேரக் களமிறக்கினாள் பொருநையாள்.
வைகைக் கரைப் பகுதியான வத்தலகுண்டுவில் பிறந்தவர் சுப்பிரமணிய ஐயர். தமிழும், ஆங்கிலமும் நன்கு கற்றவர். இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாததால், இளமையிலேயே மனைவியைப் பிரிந்து, துறவு மேற்கொண்டார்.
வீட்டை வெறுத்தாலும் நாட்டை வெறுக்க இயலவில்லை. சூழவும் நடந்து கொண்டிருந்த சம்பவங்கள் பலவும், புரட்சி நெருப்பை இவருக்குள் பற்ற வைத்தன. தன்னந் தனியராகப் புறப்பட்டு, தன்னந் தனியராகவே கிராமம் கிராமமாகச் சென்று சுதேசிப் பிரசாரம் செய்தார். எதிர்காலத்தில், பசியும் பிணியும் வாட்டுகிற துன்பமிக்கத் தனிமையை இவர் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பது பொருநையாளுக்குத் தெரியும் போலும் - இப்போதைக்குத் துணை இருக்கட்டும் என்றோ என்னவோ, தன்னிடம் ஈர்த்து அணைத்துக் கொண்டாள்.
சிவகாசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இவருக்கு ஒரு வேலை கிடைத்தது. இருப்பினும், மேல் படிப்பைத் தொடரும் ஆசையில், வேலையை விட்டுவிட்டுத் திருவிதாங்கூருக்குச் சென்றார்.
கல்வியை நிறைவு செய்யும்போது, துறவு மனப்பான்மை முழுமையாக ஆட்கொண்டுவிட, சந்நியாச உடையை ஏற்றார். சுதேசியத்தையும் அந்நிய பகிஷ்கரிப்பையும் பிரசாரம் செய்துகொண்டே சுற்றி வந்தார். ஐயர் என்னும் பின்னொட்டைத் துறந்து, சுப்பிரமணிய சிவா என்றானார்.
சிட்டகாங்கைச் சேர்ந்த சந்தவர்கர் என்பவரோடு சேர்ந்து, 1908 ஜனவரியில் நெல்லைப் பகுதிகளை அடைந்த சிவா, அம்பாசமுத்திரத்தில் சுதேசியக் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்கள் சிலவற்றில் கலந்துகொண்ட வ. உ. சி., தூத்துக்குடியில் தாம் அமைக்கவிருந்த சுதேசிச் சங்கக் கூட்டத்தில் பங்குகொள்ளும்படி சிவாவுக்கும், மக்களுக்கும் அழைப்பு விடுத்தார். "சுதேசி இளைஞர் சங்கம்' என்னும் அமைப்பு தன்னைத் தூத்துக்குடிக்கு அழைத்திருப்பதைக் கூறிய சிவா, 1908 பிப்ரவரி 3-ஆம் தேதி, தூத்துக்குடிக்கு வந்துசேர்ந்தார்.
தூத்துக்குடி கடற்கரையில் சுதேசிக் கூட்டங்கள் நடக்கும். சிவாவின் உரையைக் கேட்பதற்கு எங்கெங்கிருந்தோ மக்கள் கூடுவர். நாவாய்க் கம்பெனியின் பணிகளை முடித்துக் கொண்டு, வ. உ. சி-யும் மாலைக் கூட்டங்களுக்குச் செல்வார்.
ஒரேபோன்ற சிந்தனை, ஒரேபோன்ற செயல் ஆர்வம், ஒரேபோன்ற துடிப்பு - 36 வயது சிதம்பரம் பிள்ளையும், 23 வயதுகூட நிரம்பாத சிவாவும் அத்யந்த நண்பர்கள் ஆகினர்.
இருவரும் இணைந்து உரையாற்றிய கூட்டங்கள் ஏராளம். சுதேசியம், அந்நிய பகிஷ்கரிப்பு என்பவற்றின் எல்லைகள் விரியத் தொடங்கின. பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு அடிபணிய மறுப்பு, பிரிட்டிஷ் அரசுப் பள்ளிகளின் கல்வியைப் புறக்கணித்தல், நீதிமன்றங்களைப் புறக்கணித்தல் என்று இன்னும் பலவும்சேர்ந்தன.
"பிறக்கும் மனிதர் யாவரும் இறந்துதான் தீரவேண்டும்; வேறு ஏதேதோ காரணங்களுக்காக இறப்பதைவிட, சுதேசப் போராட்டத்தில் ஈடுபட்டு, அன்னை நாட்டின் சுயராஜ்யத்திற்காக இறப்பதுதானே உயர்வு!' என்னும் அளவுக்குச் சிவா உரையாற்றுவார்.
உடல் வலிமையையும், உடற்பயிற்சிகளையும் சிவா வலியுறுத்துவது வழக்கம். "சிறிய நாடான ஜப்பான் 20,000 வீரர்களைக் களத்தில் தியாகம் கொடுத்து ருஷ்யாவை வெல்ல முடியுமானால் 50,000 ஐரோப்பிய அதிகாரிகள் இந்தியாவிற்குள் இருக்கும் நிலையில், லட்சக்கணக்கான இந்தியர்கள் பசியிலும் பட்டினியிலும், தவிப்பிலும், துடிப்பிலும் மடியவேண்டுமா?' என்பதே சுப்பிரமணிய சிவாவின் முத்தாய்ப்பு வினாவாக இருக்கும். ஜப்பானின் முறையை நாமும் பின்பற்றி சுயராஜ்யத்தை விதைக்கக்கூடாதா?
ஏற்கெனவே, வ. உ. சி-யின் மும்முனைத் தாக்குதலில் பிரிட்டிஷாரும் ஐரோப்பியரும் பரிதவித்துக் கொண்டிருந்தனர். சுதேசி நாவாய்க் கம்பெனியின் வழி ஐரோப்பிய வணிகர்கள், தேசாபிமான சங்கத்தின் வழி ஐரோப்பிய அதிகாரிகள், ஒரு சில தொழிலகங்களில் தொடங்கப்பட்டிருந்த தொழிற்சங்கங்கள் வழி ஐரோப்பிய முதலாளிகள் என்று முப்பெரும் பாதிப்புக்கு ஐரோப்பியரும் பிரிட்டிஷாரும் உள்ளாகியிருந்தனர். வணிகர்களும் முதலாளிகளும் இதற்கேதாவது செய்யும்படி அதிகாரிகளை நெரித்துக் கொண்டிருந்தனர்.
இத்தகைய சூழலில், சொற்களிலேயே சுடர்நெருப்பைப் பற்றவைக்கும் சிவாவின் பேச்சுகளும், உடனின்ற வ. உ. சி-யின் உரைகளும் ராஜ துவேஷமாகக் காணப்பட்டதில் வியப்பிருக்க முடியுமா?
இந்த நிலையில்தான், தூத்துக்குடி கோரல் மில் போராட்டங்கள் எழுந்தன.
- தொடரும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.