1799-இன் பிற்பகுதிச் சம்பவங்களைப் புரிந்துகொள்வதற்கு, இதே ஆண்டின் முற்பகுதியில் என்னென்ன நடந்தன என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
1799-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பாளையங்களுக்கு எதிராகப் படை நடத்துவதில் கம்பெனிக்கு ஆர்வம் இருக்கவில்லை. மைசூரின் திப்புசுல்தானை எதிர்த்துப் போர் செய்யவேண்டியிருந்தது; இதற்காகப் படைகளை மைசூர் நோக்கி அனுப்பவேண்டியிருந்தது. கம்பெனியின் மதராஸ் அரசாங்கம் (கம்பெனி கவுன்சில்), பாளையக்காரர்களிடம் சமாதானமாகச் சென்று, அவர்களின் ஆதரவைத் தனது பக்கம் சேர்த்துக்கொள்ளஎண்ணியது. "மைசூரைப் பணியச் செய்தபின், தெற்கத்திப் பாளையங்களைப் பணிவிப்பது அவ்வளவு கடினமாக இராது' என்று எண்ணினார்களோ என்னவோ! ஜாக்சனைத் திரும்ப அழைத்ததும் லூஷிங்டனை அனுப்பியதும்கூட, பெருந்திட்டத்தின் சிறு பகுதிகள்தாம்.
கம்பெனி நிர்வாகம் மைசூரைக் குறி வைக்கிறது என்பதைப் பாளையக்காரர்களும் கவனிக்காமல் இல்லை. மைசூர் பிரச்னையைக் கணக்குக் காட்டி, மாட்டு வண்டிப் போக்குவரத்துக்கு ஏற்கெனவே சில தடைகளைக் கம்பெனி போட்டிருந்தது.
"பேஷ்கஷ்' கலெக்டராக ஜாக்சன் ஆனவுடன், "கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில், படகுகள் வழியாகவும் நெல் எடுத்துச் செல்லப்படக்கூடாது' என்று தடை விதித்தார். இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மார்க்கங்கள் மூடப்பட்டு, தென் பகுதிகளில் செயற்கைப் பஞ்சம் விளைவிக்கப்பட்டது. துருப்பு நடமாட்டங்களால் மக்கள் அவதிக்குள்ளாயினர். இவையெல்லாம் சேர்ந்து, பாளையக்காரர்களிடம் சலனங்களையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தன.
நாகலாபுரம், மன்னார்கோட்டை, கோலார்பட்டி, காடல்குடி, சென்னல்குடி, குளத்தூர் போன்ற பாளையங்களின் ஜமீன்கள், சிவகங்கை மருது மற்றும் ராமநாதபுரம் மேலப்பன் ஆகியோர் தலைமையில் ஒன்று திரண்டுகொண்டிருந்தனர். இந்த ஒன்றிணைப்பில் தானாபதிப் பிள்ளைக்கும் பங்கிருந்தது. இதுவே அவர்மீது கம்பெனியாருக்குச் சினம் ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம்.
தானாபதிப்பிள்ளையின் தம்பியான பாண்டியப் பிள்ளை என்பவரை, பிரிட்டிஷ் துருப்புகளின் நடமாட்டம் குறித்துத் துப்பு கூறுவதற்காக மதராஸ் வரை கட்டபொம்மன் அனுப்பியுள்ளார். ஐரோப்பியர்களையும் அவர்தம் அணுக்கத்தாரையும் கண்காணிக்கத் தம்முடைய வீரர்களையும் ஆங்காங்கே நிறுத்தியுள்ளார்.
இருந்தும், விதியின் விளையாட்டை என்ன சொல்ல? மைசூர் மீதான கவனம் இன்னும் சில காலத்திற்கு நீடித்திருக்குமானால், நிலைமை வேறாக இருந்திருக்கும்!!
பிரிட்டிஷ் துருப்புகளுக்கும் திப்புவிற்கும் இடையிலான போரில் (நான்காம் ஆங்கிலோ-மைசூர் போர்) 1799 மே 4-ஆம் நாள் திப்பு கொல்லப்பட்டார். மைசூர் கிடைத்துவிட்டது என்னும் மகிழ்ச்சியில், தென்பாளையங்கள் மீது தன் கவனத்தைக் கம்பெனி திருப்பியது. மைசூர் போரை மேற்பார்வையிடுவதற்காக அப்போதைய கவர்னர் ஜெனரல் மார்னிங்டன் வெல்லெஸ்லி (அப்போதெல்லாம், கம்பெனியின் தலைமை அதிகாரியான கவர்னர் ஜெனரல், கல்கத்தாவில்தான் இருப்பார்; மார்னிங்டன் எர்ள் என்றழைக்கப்பட்ட இந்த ரிச்சர்ட் வெல்லெஸ்லியின் இளைய சகோதரர் ஆர்தர் வெல்லெஸ்லிதான், வாட்டர்லூ போரில் நெப்போலியனைத் தோற்கடித்தவர்) தாமே மதராஸில் வந்து தங்கியிருந்தார்.
பாளையக் கலகக்காரர்களையும் அடக்கிவிடலாம் என்னும் எண்ணத்தில், தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருத்தப்பட்டிருந்த துருப்புகளைத் திருநெல்வேலிக்கு அனுப்பினார். திருவிதாங்கூர் படையும் சேர்ந்துகொண்டது. இந்தப் பெரும் படைக்கு மேஜர் பானர்மென்னைத் தளபதி
ஆக்கினார் வெல்லெஸ்லி.
ஒரு பக்கம் பானர்மெனின் படை ராமநாதபுரம் பகுதியை அடைந்துகொண்டிருந்தது, இன்னொரு பக்கம் நெல் பொதிச் சம்பவக் குழப்பம் நிகழ்ந்து கொண்டிருந்த அதே நேரத்தில், கட்டபொம்மனும் சிவகங்கையின் மருதுபாண்டியர் உள்ளிட்ட உள்நாட்டுத் தலைவர்களும் தங்களுக்குள் பலவிதமான கலந்தாலோசனைகளை நடத்திக்கொண்டிருந்தனர். வெள்ளையரை முறியடிப்பதற்கான கலந்தாலோசனைகள் இவை. திருநெல்வேலிப்பாளையங்களில், பாஞ்சாலங்குறிச்சி வெட்டவெளிப் பகுதியாக இருப்பதால், எதிர்ப் படைகள் சுலபமாகத் தாக்கிவிடும் என்று கருதிய இந்தத் தலைவர்கள், தலைமையிடமாக வேறேதும் பாளையத்தை நிறுவலாமா எனச் சிந்தித்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச்சரிவில், அடிவாரத்தில் இருந்த சிவகிரி தக்க இடம் என்றும் கணித்துள்ளனர்.
ஆனால், சிவகிரி, எட்டையபுரம், ஊற்றுமலை ஆகிய பாளையத்தார்கள், முன்னரிருந்த உட்பூசல்கள் காரணமாகக் கட்டபொம்மனுக்கு எதிர்ப்பக்கம் நின்றனர். இதனாலேயே கம்பெனியின் பக்கம் சேர்ந்தனரோ என்னவோ!
சிவகிரியையும் அதன் பாதையிலிருந்த குறுகலான நிலவழியையும் தங்களின் உறைவிடமாகக் கொள்ளலாம் என்னும் நம்பிக்கையில், கட்டபொம்மனுடைய அணுக்கர்களான சிவத்தையா, வீரபாண்டிய நாயக்கர், தானாபதிப்பிள்ளையின் தம்பியான வீரபத்திரப் பிள்ளை ஆகியோரும், கோலார்பட்டித் தலைவரும் சிவகிரிப்பாளையத்தாரின் மருமகனுமான மாப்பிள்ளை வன்னியரும், ஏழாயிரம் பண்ணையின் காளை வன்னியரும், சிவகிரியாரின் மகனும், இரண்டாயிரம் போர் வீரர்களோடு, தளவாய் குமாரசுவாமி நாயக்கர் தலைமையில் சிவகிரி நோக்கி நகர்ந்தனர். இது நடந்தது, 1799 ஆகஸ்ட் மாதம்.
ஏழாயிரம் பண்ணையார் மீது தமக்கிருந்த பழம் பகைமையாலும், கட்டபொம்மனுக்குக் கிடைக்கும் மரியாதையாலும் வருத்தம் கொண்ட சிவகிரியார், "அவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்துவிட்டனர்; நான் தனியனாகி விட்டேன்; என்னைக் காப்பாற்றுங்கள்' என்றொரு கடிதத்தைக் கம்பெனியாருக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி எழுதினார். ஊற்றுமலை ஜமீன்தாரும் இதே செய்தியைத் தெரிவித்து, இதே போன்ற விண்ணப்பத்தோடான கடிதத்தை ஆகஸ்ட் 7-ஆம் நாள் எழுதினார்.
இத்தகைய கடிதங்களும், கலெக்டர் லூஷிங்டன் ஏற்கெனவே கட்டபொம்மன் தட்டிக் கழிப்பதாக எழுதியிருந்த கடிதங்களும் கிடைக்கப்பெற்ற நிலையில், பாளையப்படைகளின் எழுச்சியைத் தங்களுக்கெதிரான கிளர்ச்சியாகக் கண்ட கம்பெனி நிர்வாகம், கலகத்தை அடக்கும்படி பானர்மென்னுக்கு ஆணையிட்டது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.