தீபாவளியில் குபேர பூஜை!
தஞ்சாவூருக்கு அப்பெயர் வர முக்கிய காரணமானவர் தஞ்சபுரீஸ்வரர் ஆவார். தன்னை தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பதில் வல்லவர் அவ்விறைவன்.
தஞ்சாவூருக்கு அப்பெயர் வர முக்கிய காரணமானவர் தஞ்சபுரீஸ்வரர் ஆவார்.
தன்னை தஞ்சம் அடைந்தவர்களைக் காப்பதில் வல்லவர் அவ்விறைவன். தஞ்சை பெருவுடையார் கோயில் அமைவதற்கு முன்பாகவே தஞ்சபுரீஸ்வரர் கோயில் இருந்திருக்கிறது. ராஜராஜ சோழன் இங்கு வழிபாடுகள் நடத்தியிருக்கிறார்.
தலவரலாறு: விஸ்வகர்மா உருவாக்கிய அழகாபுரி என்ற பட்டணத்தில் குபேரன் அரசாட்சி நடத்தினான். சங்க நிதியும், பத்மநிதியும் அவனுடன் இருந்தார்கள்.
ஒருமுறை ராவணன் தன் தவவலிமையால் குபேரனிடம் இருந்த செல்வங்களைப் பறித்துக்கொண்டான். செல்வம் இழந்த குபேரன் சிவபெருமானிடம் தஞ்சம் அடைந்தான்!”
ஈசன், குபேரனின் செல்வங்களை ராவணனிடமிருந்து மீட்டுத்தந்து, வடதிசை பாலகனின் நவநிதியத்தைக் காக்கும் பொறுப்பையும் அளித்தார்.
தஞ்சமென்று வந்த குபேரனுக்கு அருள் புரிந்த சிவபெருமான் "தஞ்சபுரீஸ்வரர்' என்றும், அவர் எழுந்தருளிய ஊர் "தஞ்சாவூர்' என்றும் ஆனது.
கோயிலின் வலப் புறத்தில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதியும், இடப்புறத்தில் ஐயப்பன் சந்நிதியும் உள்ளன. திருச்சுற்றில் லிங்க பாணங்கள், தட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் உள்ளனர். பஞ்சமுக ஆஞ்சநேயர், நவகிரக சந்நிதிகள் உள்ளன.
கருவறையில் தஞ்சபுரீஸ்வரர் லிங்க வடிவிலும், இறைவி ஆனந்தவல்லி நின்ற கோலத்திலும் அருள்கின்றனர். மூலவர் தேவ கோஷ்டத்தில் துர்க்கை, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, நடராஜர் ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது.
மகா மண்டபத்தின் வெளிப்புறம் தஞ்சபுரீஸ்வரரை குபேரன் கைகூப்பி வணங்கிக் கொண்டிருக்க, அருகில் லட்சுமி அருளும் வண்ணம் அமர்ந்திருக்கும் திருக்கோலக் காட்சியும் உள்ளது.
குபேரன் இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றது, ஐப்பசி மாத அமாவாசை தினத்தில் தான். இதனால் தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசையன்று கலச ஸ்தாபனம் செய்து குபேர யாகம், குபேர பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இவ்வாண்டு நவ. 4-ஆம் தேதி தீபாவளியன்று மாலை 6 மணிக்கு மேல் குபேர பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடைபெறும்.
அமைவிடம்: தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் கரந்தட்டாங்குடியை அடுத்துள்ள வெண்ணாற்றங்கரை பகுதியில் தஞ்சபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயில் வரை பேருந்துகள் செல்கின்றன.
தொடர்புக்கு: 9677818114 / 9600360499.