முகப்பு
வெள்ளிமணி

பூரண வாழ்வருளும் பசுமலை முருகன்!

"முருகு' என்ற சொல், அழகு, ஆளுமை, இளமை, கடவுட்தன்மை, மணம் முதலிய பொருள்களை உடையதாக விளங்குகிறது. முருகு என்னும் திருப்பெயரோடு "அன்' விகுதி சேர்ந்து முருகன் என ஆனது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:


"முருகு' என்ற சொல், அழகு, ஆளுமை, இளமை, கடவுட்தன்மை, மணம் முதலிய பொருள்களை உடையதாக விளங்குகிறது. முருகு என்னும் திருப்பெயரோடு "அன்' விகுதி சேர்ந்து முருகன் என ஆனது. சங்க காலத்தில் முருகனை இயற்கையோடு இணைந்த ஒரு தனித்தன்மை கொண்ட நன்மணம் பொருந்தி வீசக்கூடிய மலை நிலக்கடவுளாக வணங்கினர் என்று பரிபாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் திருமுருகன் குடிகொண்டுள்ள மலைக்கோயில்களில் சிறப்புவாய்ந்த ஒன்றாகத் திகழ்கின்றது பசுமலை ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். 

பசுமலை: பசுமலை என்ற பெயருக்கு ஏற்றாற்போல் அடர்ந்த மூலிகைத் தன்மை வாய்ந்த தாவரங்களுடன், இம்மலை கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் பசுமையுடன் காணப்படுகிறது. மலை அடிவாரத்திலிருந்து 420 படிகளைக் கடந்தால் திருக்கோயிலை அடையலாம். கோயில் கட்டுமான அமைப்புகளைக் கொண்டு நோக்குங்கால் சுமார் 500 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. இம்மலையைச் சுற்றி நான்கு புறமும் சுமார் 50 கி.மீ. சுற்றளவுக்குள் தீவனூர், சிங்கவரம், மேல் மலையனூர், மயிலம், தென்னாங்கூர், திருவண்ணாமலை போன்ற முக்கிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

மலைக்குகை மற்றும் சந்நிதிகள்: மலையடிவாரத்தில் பிரமாண்டமான சக்திவேல் பிரிதிஷ்டையாகி நம்மை வரவேற்கிறது. இரட்டை விநாயகர் சந்நிதியும், நவகிரக சந்நிதியும் அருகில் உள்ளன. சுமார் 120 படிகளைக் கடந்தால் ஆஞ்சநேயர் சந்நிதியும், இதன் அருகில் ஸ்ரீலஸ்ரீ நாராயணாநந்த சுவாமிகள் (சடைசாமியார்) மற்றும் ஸ்ரீலஸ்ரீ லலிதானந்த ஸத்குரு சுவாமிகள் போன்ற மகான்கள் தங்கி தியானம் செய்த குகை உள்ளது.

மலைமீது கொடி மரத்தைத் தாண்டி, ஸ்ரீ விநாயகப் பெருமானையும், அபூர்வமாக ஆவுடையார் மீது எழுந்தருளியிருக்கும் சக்தி தண்டபாணியையும், மூல ஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியையும் தரிசிக்கலாம். 

சுவாமி சந்நிதிக்கு முன் மண்டபத்தில் பாம்பைத் தன் மூக்கினால் தூக்கிக்கொண்டு தென்படும் அழகான மயில் சிற்பம் பிரதிஷ்டையாகியுள்ளது. யாகசாலை மண்டபம் வெளிப் பிரகாரத்தில் உள்ளது. மொத்தத்தில் பசுமலையும், மலையின் மேல் உள்ள முருகன் ஆலயத்தின் பேரழகும், காந்தம் போல் நம் கண்ணைக் கவர்கின்றன. 

வழிபட்ட அருளாளர்கள்: பசுமலையைப் பற்றி ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருப்புகழ் ஒன்று மலைமேல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பசுமலையை "கோக்கிரி' என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம். நங்கை நல்லூர் பொங்கி மடாலயம் தவத்திரு ஸாதுராம் சுவாமிகள் இத்தல முருகனைக் குறித்து பல பாடல்கள் புனைந்துள்ளார். திருக்கோவிலூர் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகள், ஹரிதாஸ் கிரியின் சீடர் நாமானந்த கிரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார், ஓம் முருகாஸ்ரமம் சுவாமிகள் ஆகியோர் இவ்வாலயத்திற்கு வந்து முருகனை தரிசித்துள்ளார்கள்.  

கிருபானந்த வாரியார் 60 ஆண்டுகளுக்கு முன் இங்கு விஜயம் செய்து, திருப்புகழ் திருப்படி விழாவை துவக்கி வைத்துள்ளார்.

விழாக்கள்: வருடத்தில் சித்திரை முதல் பங்குனி வரை முருகப் பெருமானுக்குரிய அனைத்து விசேஷ தினங்களும் இங்கு கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணியில் நடைபெறும் திருப்புகழ் திருப்படி திருவிழாவில் தெள்ளாரம்பட்டு மற்றும் பசுமலையைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் அடியார் குழுவினர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். 

பங்குனி உத்திரத்தில் 10 நாள் பிரம்மோற்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. பிரதி மாதம் பௌர்ணமியில் கிரிவலமும், அன்னதானமும் நடைபெறுகிறது. கிரி வலப்பாதையின் தென்புறத்தில் அமைந்துள்ள தேவேந்திரனுக்கு உண்டான பிரத்யேக சந்நிதியில் ஊர் மக்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்துகின்றனர்.

பரிகாரத் தலம்: பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி, கிரிவலம் வருதலையும், மலைமேல் துவஜஸ்தம்பம் அருகில் வேல் நட்டு வழிபாடு செய்தலையும் மேற்கொண்டு வருகிறார்கள். இங்கு தேவியர்களுடன் கல்யாண முருகனாக அருளுவதால், திருமண பிராப்தி வரம் வேண்டி பக்தர்கள் வருகிறார்கள். பிணிகள் நீக்கும் பரமனாகவும் இத்தல முருகன் விளங்குகிறார். பால்குட வழிபாடு, மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நேர்த்திக் கடன்களும் செலுத்தி, வழிபடுகின்றனர். 

மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானை சமேதகல்யாண முருகனாக காட்சியளிப்பதால், இங்குசூரசம்ஹாரம் கிடையாது. விழா நாள்களில் தினசரி ஹோமம், வேதபாராயணம், அர்ச்சனை, உற்சவ மூர்த்தி உட்பிரகார வலம் போன்ற வைபவங்கள் நடைபெறும். 

திருப்பணிகள்: பரம்பரை ஆதீன நிர்வாக தர்மகர்த்தா சோமயாஜுலு குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் இவ்வாலயத்தில், பக்தர்களின் பங்களிப்புடன் 2006-இல் கும்பாபிஷேகம் நடந்தேறியது. இவர்களுடன் இணைந்து "பசுமலை நித்திய சேவா கமிட்டி' என்ற அமைப்பு ஆலய வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

மலையேறும் வழியில், இருபக்கமும் உள்ள கைப்பிடிச்சுவர்களும், படிகளும் பழுதடைந்துள்ளன. இதனை சீர் செய்வதுடன், பக்தர்கள் தங்கும் மண்டபம், கழிப்பறை, குளியலறை வசதிகள், மடப்பள்ளி, உணவுக்கூடம் அமைத்தல், மலையடிவாரத்திலிருந்து இழுவை மோட்டார் நிறுவுதல் எனப் பல்வேறு திருப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நிலையில் ஆலயம் உள்ளது. முருகனடியார்கள் முன்வந்து பாங்குடன் இப்பணிகளில் பங்கேற்க வேண்டும். பசுமலையான் பாதம் பணிவோம், பாவ விமோசனம் பெறுவோம்!
அமைவிடம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுக்கா, மேல் ஒலக்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது பசுமலை முருகன் கோயில். இத்தலத்திற்குச் செல்ல காஞ்சிபுரம், வந்தவாசி, செஞ்சி போன்ற இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. 

தொடர்புக்கு: 9962344722 / 9003114240.

கந்த சஷ்டி விழா

முருகப் பெருமான் சூரபதுமனை வெற்றிக் கொண்டு, தேவர்களை அவனிடமிருந்து காப்பாற்றி, தேவலோகத்தை மீட்டு, தேவேந்திரனை மீண்டும் இந்திர லோகத்திற்கு அரசனாக்கிய நிகழ்ச்சியையும், தேவேந்திரன் தனது மகள் தெய்வானையை முருகப் பெருமானுக்கு திருமணம் செய்து கொடுத்த வரலாற்றையும் குறிக்கும் விதமாக அனைத்து முருகன் திருத்தலங்களிலும் ஆறு நாள்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா, இக்கோயிலிலும் இவ்வாண்டு நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கி 11 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10-இல் புஷ்பாஞ்சலியும், மறுநாள் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.