வெள்ளிமணி

படைகளோடு கோயில் கொண்ட அம்மன்

DIN


தன்னால் இவ்வுலகம் உணர வேண்டியவை இருப்பதாக எண்ணிய சக்தி தேவி ரைவத மகாராஜனின் மகளாய் பூவுலகில் பிறந்தாள்.  ஜமதக்கனி முனிவரை மணம் முடித்து பரசுராமர் போன்ற குழந்தைகளுக்குத் தாயானாள்.  தேவி முனிவருக்குப் பணிவிடை செய்து வரும் நாளில்,  பூஜைக்கு பச்சைக் களிமண்ணால் நீர்க் குடம் செய்து முகந்து வருவாள்.  ஒருநாள் நீர் முகந்திட நதிக்குச் சென்றாள். 

அச்சமயம் வான வீதியில் கந்தர்வன் நிழலை நீரில் பார்த்து நின்றபோது, காலதாமதமாகி களிமண் குடம் கரைந்துபோனது. நடந்ததை ஞானத்தால் உணர்ந்த முனிவர் தன் மகன் பரசுராமனை விளித்து, அன்னையின் சிரசை துண்டிக்கச் சொன்னார்.  "தந்தை சொல் தட்டாத தனயன் அன்னையை சிரச் சேதம் செய்தான் .

சொல்லுக்குக் கட்டுப்பட்ட மகனிடம், "வேண்டும் வரம் தருகிறேன் கேள்'' என்றார் ஜமதக்கனி.  பரசுராமரோ சிரசு வெட்டுப்பட்ட தாயை உயிர்ப்பித்துத் தரக் கேட்டான். முனிவரும் மகனிடம் கமண்டலத்தில் நீரை மந்திரித்துக் கொடுத்தார்.

தன் தாய் வெட்டப்பட்ட இடத்திற்குச் சென்று விதிவசத்தால் அங்கே வெட்டுப்பட்டுக் கிடந்த வேறொரு பெண் உடலில் தவறுதலாக தேவியின் தலையை வைத்து நீரைத் தெளிக்க தேவி, அந்தப் பெண்ணின் உடம்போடு பிழைத்து நின்று தன் மகனிடம் தனக்கு நிகழ்ந்த தவறைச் சொன்னாள்.  பரசுராமன்  தன் தந்தையிடம் நடந்ததை விவரித்தான்.  

"இது தெய்வச் செயலால் நடந்ததால் மாற்ற இயலாது'' எனக் கூறினார் .  அது முதல் அவ்வேறுபட்ட உடலுடன் ஜமதக்கனி முனிவருக்கு அன்னை பணிவிடை செய்துவந்தாள்.

வேட்டைக்கு வந்த இடத்தில் கார்த்த வீரியார்ச்சுனன் ஜமதக்கனி முனிவரிடமிருந்த காமதேனுவை தனக்கு வேண்டினான்.  முனிவர் மறுத்ததால், அவரைக் கொன்று காமதேனுவை கவர்ந்து சென்றுவிட்டான் .


இறந்த கணவர் உடலுடன் தேவி உடன்கட்டை ஏறினாள்.  அந்த நேரம் தெய்வ சங்கல்பத்தால் மழை பொழிந்தது.  அந்த மழைநீரால் சுடலை நீர்த்துக் குளிர்ந்தது.   அன்னைகொப்புளங்களுடன் ஆடையின்றி எழுந்து வேப்பிலை ஆடையை சூட்டிக் கொண்டு, மகன் பரசுராமனை நினைத்தாள்.

பரசுராமன நடந்தது அறிந்து கார்த்த வீரியனைக் கொன்று அவன் குலம் முழுவதும் அழிக்கச் சபதம் செய்தான் .  சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு தேவர்களோடு தோன்றி,  சினம் நீக்கி சாந்தப்படுத்தினர். ஜமதக்கனி முனிவரை சிவபெருமான் உயிர்ப்பித்தெழச் செய்தார்.

அன்னை சிவனிடம் வேண்டியபடி, சிரசு மட்டும் பிரதானமாக இருந்து இப்பூவுலகில் பூஜைக்கு உரிய வடிவாய் விளங்கவும், உடலின் மற்ற பிரிவுகள் முனிவருடன் சொர்க்கத்துக்குச் சென்றது. அது முதல் தேவி "ரேணுகாதேவி' என அழைக்கப்பட்டு வணங்கப்படுகிறாள்.

ரேணுகை என்றால் சிரசு என்பது பொருளாகும். அப்போது முதல் அன்னை ரேணுகாதேவி பூவுலகில் சிரசை பிரதானமாகக் கொண்டு படைவீட்டில் அமர்ந்து அருள்பாலித்து வருகிறாள். 

கருவறையில்..:     கருவறையில் வேறெங்கும் காணாத வகையில் சிறப்பு அம்சமாக அன்னை ரேணுகாதேவி ( சிரசு மட்டும்)  சுயம்பு வடிவிலும் ,  பிரம்மா, விஷ்ணு,  சிவன் ஆகிய மும்மூர்த்திகள் அரூபமாக எழுந்தருளியுள்ளனர். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும்.  சிலாசிரசும், அத்தி மரத்தினாலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையிலிருந்து அருளுகின்றன.

கோயில்: கோயில் உட்பகுதியில் உள், வெளியென இரு சுற்றும்,  நான்கு மாட வீதிகளுடன் அமைந்துள்ளன.  விநாயகர்,  ஆறுமுகர் தனித்தனி சந்நிதிகளில் அருளுகின்றனர்.  அம்மன் சந்நிதிக்கருகில் சோமநாதீஸ்வரர்,  உமாமகேஸ்வரி தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளனர். திருக்குளம் உட்பிரகாரத்தில் வட கிழக்கில் அமைந்துள்ளது.

வரலாறு: சம்புவராய அரசர்கள் தமது ஆட்சிக்காலத்தில் படைவீட்டை தலைநகரமாகக் கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர். விஜயநகர நாயக்கர் மன்னர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளதால் அவர்களது தொடர்பும் அறியப்படுகிறது. விஜயநகர மன்னன் குமாரகம்பனன் என்பவனின் படைத்தலைவன் சோமைய தண்ட நாயக்கரால் 1352}இல் கோயில் கட்டப்பட்டதாகும்.

அமைவிடம்: சக்தி தலங்களில் ஒன்றாகவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கூறப்படும் அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் கோயில் அமைந்துள்ள படைவீடு எனும் கிராமம் கிழக்கு தொடர்ச்சி மலைகளின்  ( ஜவ்வாதுமலைத் தொடர்) அடிவாரத்தில்  உள்ளது. வேலூர்} திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில்,  சந்தவாசல் எனும் ஊரின் சாலை சந்திப்பிலிருந்து  7 கி.மீ.  மேற்கில் உள்ளது.

பிணியகற்றும் யாகத் திருநீறு: இவ்வூரில் ஜமதக்கனி முனிவர் யாகம் செய்த இடத்திலிருந்து ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சனத்தன்று பூஜித்து வெட்டி எடுத்துவரப்படும் திருநீறு சந்நிதி பிரசாதமாக வழங்கப்படுகிறது.  

தொடர்புக்கு: 9488648346 ; 9092217029.

- இரா.இரகுநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

சிஏஏ: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு

ராஜஸ்தான் சுரங்க விபத்து: ஹிந்துஸ்தான் நிறுவன அதிகாரி உயிரிழப்பு

இந்திய ராணுவம் குறித்த சா்ச்சை கருத்து: ராகுல் காந்தி மீது தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

சாம் கரன் அசத்தலில் பஞ்சாப் வெற்றி

SCROLL FOR NEXT