வெள்ளிமணி

ஆயுள் பலம் கூட்டும் அமிர்தகடேசன்!

க.கிருஷ்ணகுமார்


திருக்கடவூர் திருத்தலத்தைப் போலவே, சென்னைக்கு அருகே கிழக்கு தாம்பரத்தில் சேலையூர் பகுதியில் கேம்ப் ரோடு அருகில் ஈஸ்வரன் தெருவில் ஸ்ரீ அபிராமி உடனுறை ஸ்ரீ அமிர்த கடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கும் சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம், ஆயுள் ஹோமம் போன்ற வைபவங்கள் வைதீக முறையில் எளிமையாக சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஆலயத்தின் சிறப்பை அறிவோம்:

1970-ஆம் ஆண்டு சென்னைவிஜயத்தின்போது இப்பகுதிக்கு வந்த காஞ்சி மகா பெரியவர் உணர்த்தியபடி, புதை மண்ணால் சூழப்பட்ட ஓர் இடத்தை தோண்டிப் பார்க்கையில் அழகான சிவ லிங்கமும், அம்பிகை சிலா விக்கரமும் தென்பட்டது. அவர் அருளாசியுடன் ஆலயம் அமைப்பதற்காக திருப்பணி கிராம மக்கள் ஒத்துழைப்புடன் துவக்கப்பட்டு சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் சந்நிதிகள் அமைக்கப்பட்டு முதன் முதலில் 1975-ஆம் ஆண்டு ஓம் காளி ஸ்ரீலஸ்ரீ ராமநாத சுவாமிகள் அஷ்டபந்தன கும்பாஷேகத்தை நடத்திவைத்தார்.

பின்னர் படிப்படியாக பல முன்னேற்றங்களைக் கடந்து, 1994-ஆம் ஆண்டும், பின்னர் 2009-ஆம் ஆண்டும் குடமுழுக்கு வைபவங்கள் நடந்தேறின.

ராஜகோபுரத்துடன் மேற்கு நோக்கிய வாயில் கொண்டு திகழும் இவ்வாலயத்தில் கருவறையில் ஸ்ரீ அமிர்தகடேசுவரர் என்ற திருநாமத்துடன் மூலவர் சதுரவடிவ ஆவுடையாருடன் லிங்கத் திருமேனி கொண்டு காண்போர் மெய்சிலிர்க்கும் வண்ணம், அதே சாந்நியத்துடன் முக்கண் நாயகியாய் அம்பிகை அபிராமி அன்னை சந்நிதி கொண்டருளும் பாங்கினை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.

சதா அபிராமி அந்தாதியும், சிவ பாராயணங்களும் முழங்கிக் கொண்டிருக்கும் தெய்வீகச் சந்நிதிகள். சுவாமி, அம்பாள் உற்சவ மூர்த்திகள் முறையே தேவாரமும், அபிராமி அந்தாதியும் பாடியவாறே பொற்குழம்பை ஊற்றி ஐம்பொன் சிலைகளாக வடிக்கப்பட்ட சிறப்புடையது.

கோஷ்டமூர்த்தங்கள், நால்வர் சந்நிதி, நவக்கிரகங்கள், கால பைரவர், சூரியன், ஐயப்பன், சண்டிகேஸ்வரர், துர்கையம்மன் போன்று ஒரு சிவாலயத்துக்குரிய அனைத்து சந்நிதிகளும் அமையப் பெற்றுள்ள ஒரு பரிபூர்ண ஆலயம். இதைத் தவிர அலர்மேல் மங்கை தாயார் சமேத வேங்கடேச பெருமாளுக்கும், கருடாழ்வார்க்கும் சந்நிதிகள் உள்ளன. ஷோடச மகாலட்சுமி மண்டபம் சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

ஆலய தல விருட்சமாக அரச மரம் உள்ளது. அம்மன் சந்நிதி எதிரே உள்ள பெரிய அளவிலான திருக்குளம் "அமிர்த புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. இதன் சுற்றுச்சுவரின் வடக்கே கங்கை முதல் தெற்கே காவிரி வரை 18 நதிகளின் பெயர்களுடன் சிலைகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து நீர் கொட்டும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. மாசி மகத்தன்று இத்திருக்குளத்தில் நீராடுவது விசேஷமாகக் கருதப்படுகிறது.

ஆண்டில் சித்திரையிலிருந்து பங்குனி வரையில் உள்ள அனைத்து விசேஷ தினங்களும் முறையாகப் பின்பற்றப்படுகிறது. கார்த்திகையில் சோமவார சங்காபிஷேகமும், தை அமாவாசையன்று திருக்கடவூர் போலவே இங்கும் அபிராமி அந்தாதி வைபவமும் நடைபெறுவது சிறப்பு.

ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காலையில் அஷ்டாதச திரவிய அபிஷேகமும். புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. அவ்வமயம் திருமணம், புத்திரப்பேறு, கிரகப்பிராப்தி வேண்டி பக்தர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துப் பயன் பெறுகின்றனர். கோயில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷக விழா ஜூன் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பாலாலயத்தில் உள்ள கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. மேலும் தகவல்களுக்கு: 9444751833, 8056210745.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT