எட்டுப்பேட்டை கட்டியாளும் கோட்டை மாரி
"கோட்டை பிறக்கையிலே கூடப் பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி...' என்ற பாடல் வரிகள் சேலம் மாநகரில் பிரபலம்.
"கோட்டை பிறக்கையிலே கூடப் பிறந்த பெரிய மாரி, சேலம் பிறக்கையிலே சேர்ந்து பிறந்த பெரிய மாரி...' என்ற பாடல் வரிகள் சேலம் மாநகரில் பிரபலம்.
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டுச் சிற்றரசர்கள் கோட்டை அமைத்து அதில் மாரியம்மன் கோயிலையும், அண்ணன் பெருமாள் கோயிலையும் அமைத்தனர் என்பதும், அம்மன் கோயிலை கோட்டை வீரர்கள் காவல் தெய்வமாக வழிபட்டனர் என்பதும் வரலாறு. கோட்டைக்கு அடையாளமாக "கோட்டைமேடு' இன்றும் உள்ளது.
அம்மாப்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை, சஞ்சீவிராயன்பேட்டை, அன்னதானப்பட்டி, பொன்னம்மாப்பேட்டை, சின்னக் கடைவீதி, குகை மாரியம்மன் ஆகிய எட்டு மாரியம்மன்களில் இவளே பெரியவள்; சக்தி வாய்ந்தவள்.
இதனால், "கோட்டை பெரிய மாரியம்மன்' என்றும் "எட்டுப் பேட்டை கட்டியாளும் அன்னை கோட்டை மாரி' என்றும் அழைக்கப்படுகிறாள். சேலம் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலும், சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து 6 கி. மீ. தொலைவிலும், ஈசான திசையில் (வடகிழக்கு திசை) காவல் தெய்வமாக நின்று மக்களை காத்து வருகிறாள் அன்னை மாரி.
கோட்டை பெரிய மாரியம்மனை முன்பு மணிமுத்தாற்றின் அருகிலிருந்து இப்போதிருக்கும் இடத்துக்கு இடமாற்றம் செய்து, கோயில் அமைத்து கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
மணிமுத்தாற்றிலிருந்து தினமும் அம்மன் அபிஷேகத்துக்குத் தண்ணீர் எடுத்து வரப்பட்டுள்ளது. பக்தர்கள் வந்து தங்குவதற்கு 1876} ஆம் ஆண்டில் தர்ம சத்திரம் கட்டப்பட்டது. 1881-ஆம் ஆண்டு கோயில் வடபுறம் தளம் அமைக்கப்பட்டுள்ளது. 81 அடி உயர ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 1993}இல் திருக்குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.
அன்னை, அக்னி ஜுவாலையுடன் ஒளிர, நான்கு கரங்களில் நாகபாசம், உடுக்கை, திரிசூலம், அங்குசம் கபாலத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு இடக்காலை மேலே பத்மாசனத்தில் மடித்து, ஈசான திசை நோக்கி அமைதியும், ஆனந்தம் பொங்கும் முகத்தினளாய் கம்பீரமாய் வீற்றிருக்கும் அன்னைக்கு அபிஷேகம் செய்து, மனம் உருக வேண்டினால், வேண்டியது அருள்வாள்; மழை பெய்து சுபிட்சம் அதிகரிக்கும்.
கோயில் தரிசன நேரங்களில் சர்க்கரைப் பொங்கலும், இரவில் பாலும் பழமும் நிவேதனம் செய்யப்படுகிறது. அதனை பூசாரிகள் அம்பாளுக்கு வெள்ளிக்கிண்ணத்தில் வைத்து, சிறு கரண்டியால் எடுத்து ஊட்டி விடுகின்றனர். ஆடிப்பெருந்திருவிழா சேலம் மாநகரத்தில் நடைபெறும் மிகப்பெரிய விழாவாகும்.
அம்மனுக்கு நேர்த்திக் கடனாக மண் உரு, கண்ணடக்கம், உரு வாரம் சாத்துதல், அடி அளந்து கொடுத்தல், உப்பு, மிளகு இடுதல் ஆகியன செலுத்துகின்றனர். அம்மனை வழிபட கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் கை கூடுகிறது.
கோயிலில் பூ போட்டு உத்தரவு கேட்டல் பிரசித்தமானது. சந்தேகங்களுக்கு பூ கட்டிப் போட்டு உத்தரவு கேட்டல் நடைபெறும். பக்தர்கள் தங்கள் மனதில் உள்ள பிரச்னைகளுக்கு, அம்மன் முன்பு பூ கட்டிப் போட்டு, அம்பாள் தரும் உத்தரவையே தீர்ப்பாக ஏற்றுக்கொள்கின்றனர்.
காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் தரிசன நேரமாகும்.
வேறு எங்குமே காண முடியாத அளவுக்கு மிகவும் சிறிய கருவறையுடன் இக்கோயில் இருந்தது. அம்மன் உத்தரவு பெற்று கோயில் கருவறையை விரிவுபடுத்தி புதிய விமானத்துடன் கூடிய கருவறை, சிற்ப சிறப்புகளுடன் கூடிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் மதில்சுவர், திருமடப்பள்ளி ஆகியவற்றுடன் திருப்பணிகள் முழுவதுமாக கருங்கல்லால் செய்யப்பட்டு உள்ளது. மதுரை வீரனுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
வரும் அக். 27}இல் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் 9 மணிக்குள் குடமுழுக்கும், 10 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெறவுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பின்னர், தங்கரதப் புறப்பாடு நடைபெற உள்ளது.
இதற்காக, அக். 18}இல் பூர்வாங்கப் பூஜைகளும், 25}இல் யாக சாலை பூஜைகளும் தொடங்குகின்றன.
தொடர்புக்கு: 7200600987; 0427}2267845 .