முகப்பு
வெள்ளிமணி

நல்வாழ்வருளும் நாக பஞ்சமி வழிபாடு

வனத்தில் சஞ்சரித்து குகைகளில் வாழ்ந்த மனிதன் இயற்கை தெய்வங்கள்,..

Updated On : 2 ஆகஸ்ட், 2024 at 11:28 AM
பகிர்:

பண்டைய தமிழர்களின் இயற்கை வழிபாடுகளில் நாகவழிபாடும் ஒன்றாகும். இதிகாசங்களிலும் பண்டைய நூல்களிலும் நாக வடிவின் முக்கியத்துவமும் உள்ளது. சிந்துவெளி நாகரிகக் காலத்துக் கண்டுபிடிப்புகளில் காணும் நாக வடிவமும் தொன்மைக்குச் சான்றாகும்.

வனத்தில் சஞ்சரித்து குகைகளில் வாழ்ந்த மனிதன் இயற்கை தெய்வங்கள், ஆவிகளுக்கு அடுத்து வழிபட்டது நாகங்களைத்தான். அதனால், பெரும்பாலான தெய்வங்களுடனும், பெüத்த சமயத்திலும் நாகங்கள் தொடர்புடையனவாக உள்ளன.

நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகேஸ்வரம், திருப்பாம்புரம் , பாம்பணி, காளத்தி, நாக்பூர் போன்றவை நாகத்துடன் தொடர்புடைய ஊர்களாகும். நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், பக்கநாதர், வன்மீக நாதர், நாகபூசணி உள்ளிட்ட தெய்வத் திருப்பெயர்களும் நாகத்துடன் தொடர்புடையவையாகும்.

சிவன் தன்னுடைய கழுத்தில் வாசுகிப் பாம்பை ஆபரணமாகவும், பிற பாம்புகளை கைகளில் ஆபரணமாகவும் தரித்துள்ளார். திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பைப் படுக்கையாக வைத்துள்ளார். விநாயகர் நாகாபரணமும் தரித்துள்ளார். யமுனையை விஷமாக்கிய காளிங்கனும், நாகத்தின் மீது கண்ணன் நர்த்தனம் செய்து யமுனையிலிருந்து விரட்டி நீரை சுத்தமாக்கியதோடு, சாபத்தால் நாகமான காளிங்கனுக்கு விமோசனம் அளித்த நிகழ்வும் ஸ்ரீமத் பாகவதத்தில் தெரிவிக்கப்படுகிறது. அஸ்தினாபுர மன்னன் ஜனமேஜயன் முதல்முதலில் பாம்பு யாகம் செய்தான் என்று மகாபாரதத்தில் கூறப்படுகிறது.

இறந்தவுடன் அரசர்கள் பாம்பாக மறுபிறவி எடுத்து நம்மை காக்கிறார்கள் என்றும், முன்னோர்கள் வீட்டிலேயே "மனைப்பாம்பு' என்ற பெயரோடு வாழ்கிறார்கள் என்றும் கருத்து உண்டு.

பாம்புகளால் நிலமும் வளம் பெறுவதோடு செல்வம் பெருகி நிலைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் கோயில்கள், குளக்கரைகள், அரச மரத்தடிகள் போன்ற இடங்களில் பாம்பு வடிவம் செதுக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஆண்டு முழுவதும் நாகத்தின் ஆளுமை ராகு, கேது வடிவில் மனித வாழ்வில் பிணைந்திருக்கிறது. ஆனாலும் ஆடி வளர்பிறையில் ஐந்தாம் திதியானது "நாக பஞ்சமி' என கொண்டாடப்படுகிறது.

இந்த நாளன்று எலிகளைத் தேடி பாம்புகள் வரும்போது, கலப்பையின் நுனி பட்டு விடும் என்பதால் அன்று விவசாயிகள் நிலத்தை உழுவதில்லை.

நாக வழிபாட்டில் இந்த நாள் போற்றுதற்குரிய நாளாகும். இந்நாளில் நாகதோஷம் நீங்கவும், தங்களின் சந்ததிகளுக்கு அந்த தோஷம் தொடராமல் இருக்கவும் நாகவழிபாடு செய்யப்படுகிறது.

நாக பஞ்சமியன்று நாக பூஜை செய்வதன் அவசியம், கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் போன்றவை "ஹேமாத்ரி' என்ற வடமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பஞ்சமிக்கு முதல் நாளாகிய நாக சதுர்த்தியில் ஒருவேளை உண்டு, விரதமிருந்து பஞ்சமியன்று பகலில் உண்ணாமல் இரவு மட்டுமே உண்ண வேண்டும். வெள்ளி, மரம், மண், சந்தனம், மஞ்சளால் செய்யப்பட்ட நாக உருவத்தை செய்து பூஜையில் வைத்து வழிபடுவார்கள். பூஜை நடக்கும் இடத்தில் இடத்தில் சர்ப்ப கோலமிட்டு வாசனை திரவியங்களாலும் பூஜை செய்ய வேண்டும். அஷ்ட நாகங்களாகிய அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், பிங்களன், சங்கன், பத்மன், மஹாபத்மன் ஆகிய எட்டும் தோன்றாத் துணையாக புவியில் வாழ்ந்து தாங்கிக் கொண்டிருப்பதால் , அன்றைய தினம் அன்னதானம் செய்வது சிறப்பானதாகும்.

நாகபஞ்சமியன்று பெண்கள் தேன், பால் ஆகியவற்றை நாகத்துக்குப் படைத்து பயன்படுத்துவர். அதனால் மலட்டுத் தன்மை நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும். நாகதோஷம் உள்ள பெண்கள் விரதமிருந்து பூஜை செய்வார்கள். பாம்புப்புற்றை வணங்கி புற்றுக்கு பால், தேன், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை கொண்டு வழிபாடு செய்து வரும்போது, வளமுடன் உள்ள புற்றுமண்ணையும் சிறிது கையில் எடுத்து வருவார்கள். வீட்டில் அந்த மண்ணுடன் சிறிதளவு அட்சதையைக் கலந்து தங்கள் சகோதர, சகோதரர்களிடம் கொடுத்து ஆசிபெறுவர்., இந்த நாளில் சகோதரிகளுக்கு சகோதரர்கள் அன்பளிப்புகள் வழங்குவதால் வம்சம் தழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

நாகங்களுக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதால், பாம்புகள் உரிக்கும் தோலுறைகளைப் புனிதமானதாகக் கருதி பாதுகாக்கும் வழக்கமும் உண்டு. ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய நாள்களில் நாக வழிபாடு செய்வதும் பாம்புப் புற்றுக்கு பூஜை செய்வதும் வழக்கமாக உள்ளது.

நல்லவை அனைத்தையும் தந்தருளும் மகாசக்தி கொண்டது நாக வழிபாடு. முன்னோர் காட்டிய வழிபடும் முறையை அறிந்து , வழிபட்டு வணங்கினால், வளமும் நலமும் பெறலாம்.

இந்த ஆண்டில் ஆகஸ்ட் 9}இல் நாகபஞ்சமி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.