முகப்பு
பரிகாரத் தலங்கள்

செவ்வாய் தோஷமா? தீராத நோயா?... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

வைத்தீஸ்வரன் செவ்வாய் பரிகாரத் தலத்தைப் பற்றி ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் தெரிவித்திருப்பது பற்றி..

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 10:30 AM
வைத்தீஸ்வரன் கோயில் கோபுரம்
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:39 PM

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாகும்.

காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 16-வது தலமாக விளங்கும் வைத்தீஸ்வரன் கோயில், நவக்கிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரியத் தலமாகப் பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோயிலில் தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி அருள்பாலித்து வருகிறார்.

நவக்கிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இங்கு அறுபடை வீடுகளுக்கு இணையாகச் செல்வ முத்துக்குமார சுவாமி தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இதனால் சிவ மூர்த்தமும், சக்தி மூர்த்தமும், முருக மூர்த்தமும் ஒருசேர அமைந்த திருத்தலமாக இது திகழ்கிறது.

Advertisement

தல வரலாறு

தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு. இவ்வாலயம், காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவதலங்களில் மிகச் சிறப்புப்பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும்.

சடாயு என்னும் புள் (பறவை), ரிக்குவேதம், முருகவேள், சூரியன் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலமாகும். பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோயிலில் வைத்தியநாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்தியநாதரையும் இறைவி தையல் நாயகியையும் வேண்டித் தொழுதால், எல்லா வகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோயிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.

கோயில் அமைப்பு

நான்கு புறமும் உயர்ந்த மதில்கள் சூழ கிழக்கிலும், மேற்கிலும் ராஜகோபுரங்களுடனும், ஐந்து பிராகாரங்களுடனும் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் உள்ள 7 நிலை ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்றால் அங்குக் காணப்படும் வேப்ப மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.

இந்த மரத்தின் அடியில் ஆதி வைத்தியநாதர் மேற்கு பார்த்தவாறு உள்ளார். எதிரில் வீரபத்திரர் சன்னதி உள்ளது. உள்வாயிலைக் கடந்ததும் தண்டபாணி சன்னதி. அடுத்து இடதுபுறம் சித்தாமிர்த குளம் உள்ளது. மேற்கு ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால், மூலவர் வைத்தியநாதர் மேற்கே பார்த்தவாறு காட்சி தருகிறார். சுவாமி சன்னதிக்கு நேரில் இரு கொடி மரங்கள் உள்ளன.

இறைவி தையல் நாயகியின் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். அருணகிரியார் இத்தலத்து முருகனை திருப்புகழில் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று இத்தலத்திலுள்ள முத்துக்குமார சுவாமிக்கு விசேஷ பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியவை நடைபெறும். அர்த்தசாம பூஜையில், முத்துக்குமாரசுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே இறைவனுக்கு வழிபாடு நடைபெறும்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:39 PM
உள் கோபுரம்

செவ்வாய் தோஷ நிவர்த்தி

செவ்வாய், இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட செங்குஷ்டநோய் வியாதி நீங்கப்பெற்றார். செவ்வாய்க்கு இத்தலத்தில் தனி சன்னதி உண்டு. மூல விக்கிரகத்தோடு உற்சவ விக்கிரகமான அங்காரகனும் இத்தலத்தில் உண்டு. இரண்டும் தனித்தனிச் சன்னதிகளாக உள்ளன.

செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால், பக்தர்கள் பெருமளவில் இத்தலத்துக்கு வருகை தருகின்றனர். ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும். அது மட்டுமின்றி, பல்வேறு வகையான இடையூறுகளும் செவ்வாய் தோஷத்தினால் விளைவதுண்டு.

செவ்வாய்க்கு அதிபதியான முருகன் இத்தலத்தில். இறைவியின் சன்னதிக்கு அருகில் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். செவ்வாய்க் கிழமைகளில் இத்தலம் வந்து அங்காரகன் எனப்படும் செவ்வாய் சன்னதியில் பிரார்த்தனை செய்து, செவ்வாய் தோஷ பரிகாரங்களைச் செய்து முருகப் பெருமானையும் வழிபட்டால் தோஷங்கள் நீங்கி நற்பலன்கள் அடையலாம்.

நோய் தீர்க்கும் திருச்சாந்து

இக்கோயில் 4,448 வகையான வியாதிகளைத் தீர்த்துவைக்கும் மருத்துவத்தின் தலைமைப் பீடமாகும். இங்குப் புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவற்றைக் கொண்டு திருச்சாந்து எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதை உண்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

தோல் நோய்களுக்கு இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப் பிணியையே தீர்த்துவிடுபவர். மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி செய்யும் தலமாகவும் இது விளங்குகிறது.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 4:52 PM
சித்தாமிர்த குளம்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைத்தீஸ்வரன் (செவ்வாய்) பரிகாரத் தலம் பற்றி தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்?

கையில் ஜாதகம். கலங்கிய கண்கள்!

என் பெண்ணிற்குச் செவ்வாய் தோஷம் உள்ளது என்று கூறுகிறார்களே? அவளுக்கு விவாகம் நல்லபடி நடக்குமா? பரிகாரம் உண்டா?

அந்தத் தாய் படும் வேதனை, அவரது முகத்தில் தெரிகிறது. பெற்றோர்களை நடுங்க வைக்கும் இந்தச் செவ்வாய் யார்? உண்மையிலேயே இந்தக் கிரகம் கொடியவர்தானா? இக்கேள்விகளுக்கு ஜோதிடம் என்ற ஒப்புயர்வற்ற கலை பதிலளிக்கிறது.

பூமி தேவியின் மூலம் அவதரித்து, அங்காரகன், மங்களகன் செவ்வாய் என்ற பெயர்களால் விளங்கும் இக்கிரகம் எல்லையற்ற சக்தியையும், ஒளியையும் படைத்தவர் ஆவார். உறுதியான உள்ளம், பகைவரைக் கண்டு அஞ்சாத வீரம் ஆகியவற்றை அளிப்பவர் அங்காரகன்.

பெண், பிள்ளை ஆகியோருக்கு வரனை நிச்சயம் செய்யும்முன் இரு ஜாதகங்களிலும் செவ்வாயின் பலம், பலஹீனம் ஆகியவற்றைக் கணித்து, ஆராய்ந்த பின்னரே, வரனை முடிவு செய்ய வேண்டும் எனப் பிரசித்தி பெற்ற ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன.

செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவதற்கு நிபுணர்கள் திட்டமிட்டுச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்தக் காலநிலையில் நமது நாட்டு முன்னோர்கள் நாம் வசிக்கும் பூமிக்கும், செவ்வாய்க் கிரகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும், உறவையும் பற்றிக் கூறியுள்ள உண்மைகள் தற்கால வானியல் அறிஞர்கள் வியப்புடன் ஏற்றிருக்கிறார்கள்.

பெண் அல்லது பிள்ளை ஆகியோரின் ஜாதகத்தில் செவ்வாய் பலஹீனமாக இருந்தாலும், தோஷம் ஏற்பட்டிருந்தாலும் பரிகாரம் செய்வது அவசியமாகும்.

அங்காரகப் பரிகாரத் திருத்தலங்களில் முதன்மையானது வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீராமபிரான் ஜடாயுவிற்கு அந்திமக் கிரியைகளின் ஒரு பகுதியை இத்திருத்தலத்தில் செய்ததால் 'புள்ளிருந்த வேளூர்' என்ற சிறப்புப் பெயர் பெற்ற இங்குச் சேவை தரும் அழகு கொஞ்சிடும் செல்வமுத்துக்குமாரனையும், தையல்நாயகி அம்பிகையையும் வணங்கி அங்காரகனுக்குத் தீபம் ஏற்றி வழிபடச் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும்.

‘தரணீ கர்ப்பஸம்பூதம் வித்யுத்காந்தி ஸமப்ரபம் குமாரம்

சக்திஹஸ்தம்ச மங்களம் ப்ரணமாம்யஹம்'

"ஸ்ரீ வியாச பகவான் மகாபாரதம் இந்தத் துதியைத் தினமும் 108 முறை பாராயணம் செய்துவர செவ்வாய் தோஷத்தின் விளைவுகள் நீங்கி மங்களம் பெருகும். (மீள்பிரசுரம்)

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 5:44 PM
முத்துக்குமாரசுவாமி

சடாயு குண்டம்

கோயிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடம் உள்ளது. ராவணனுடன் சடாயு போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும், அந்த சடாயுவுக்கு ராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக்கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.

கோயிலில் உள்ள பிற சன்னதிகள்

வடக்குப் பிராகாரத்தில் பத்திர காளியம்மன் சன்னதி உள்ளது. வீரபத்திரர், அன்னபூரணி, தட்சிணாமூர்த்தி, கஜலக்ஷ்மி, அஷ்டலக்ஷ்மி, நடராஜர் மற்றும் துர்க்கை சன்னதிகளும் இவ்வாலயத்தில் உள்ளன. நடராச சபையில் சிவகாமியுடன் மாணிக்கவாசகரும், காரைக்கால் அம்மையாரும் உள்ளனர். ரிக், யஜுர், சாம, அதவர்ண ஆகிய நான்கு வேதங்கள், அமராவதி, கைலாசநாதர், மீனாட்சி சுந்தரேஸ்வரர், விசுவநாதர் முதலிய பெயர்களில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தங்களும், சஹஸ்ரலிங்கமும் வரிசையாக உள்ளன. இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிப்பது மேலும் சிறப்பாகும்.

எப்படிச் செல்வது?

சென்னையிலிருந்து ரயிலில் சென்றால் 270 கி.மீ. தொலைவிலும், சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது இத்திருக்கோயில். மயிலாடுதுறை, சீர்காழி, கும்பகோணம் மற்றும் தமிழ்நாட்டின் பல முக்கிய ஊர்களிலிருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.

கோயில் திறக்கும் நேரம்

காலை 5.30 மணி முதல் பகல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.