வெள்ளிமணி

பாடகத்து பாண்டவதூதப் பெருமாள் கோயில்

கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க சக்திக் கோயில்கள்,  சைவ } வைணவக் கோயில்கள் பல அமைந்துள்ளன.

கி.ஸ்ரீதரன்


கோயில் நகரமாக விளங்கும் காஞ்சிபுரத்தில் வழிபாடு சிறப்புமிக்க சக்திக் கோயில்கள்,  சைவ } வைணவக் கோயில்கள் பல அமைந்துள்ளன.

வைணவக் கோயில்களில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றக் கோயில்களில் பாடகம் } பாண்டவத்தூதப் பெருமாள் கோயில் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் 48}ஆவது திவ்ய தேசமாக ஆழ்வார்களில் பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கை ஆழ்வார்களால் போற்றி மங்களாசாசனம் செய்யப்பட்டதாக விளங்குகிறது. 

"பாடகத்துள் இருந்தானை' என பூதத்தாழ்வாரும், "எம்பெருமான் நித்தியவாசம் செய்யப்பெற்ற தலம்'  என்ற சிறப்புடன் விளங்கும் தலம் என பேயாழ்வாரும், "குன்றிருந்த மாட நீடு பாடகம்',  "இருந்தது எந்தை பாடகத்து } நின்றதும் } இருந்ததும் } கிடந்ததும் என் நெஞ்சுளே'  என்று திருமழிசையாழ்வார் போற்றுவதைக் காணலாம். 

"மன்னிய பாடகத் தெம் மைந்தனை', "கல்லார் மதிள் சூழ் கச்சிநகருள் நச்சிபாடகத்துள் எல்லாவுலகும் வணங்க இருந்தவம்மான் } நல்லானுடைய நாமம் சொல்லில் நமோ நாராயணமே' என்று திருமங்கையாழ்வார் போற்றி வழிபடுவதையும் காணலாம் கண்ணபிரான் பஞ்ச பாண்டவர்களுக்கு தூதுவராகச் சென்றபோது, துரியோதனன் சூழ்ச்சியால் கண்ணனை நிலவறையில் வீழ்த்த நினைத்தார். அதனை அறிந்த கண்ணபிரான், "பெரிய மாமேனி அண்டமூடுவ பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்'  என்ற திருமங்கை ஆழ்வார் அருளியபடி விசுவரூப வடிவம் எடுத்து காட்சி தந்தார் கண்ணன். துரியோதனுடைய தந்தை திருதராட்டிரனுக்கு கண்பார்வை அளித்தும் தன்னுடைய விசுவரூப தரிசனத்தையும் காண்பித்தார். அமர்ந்த நிலையில் அபய - வரத கரங்களுடன் காணப்படும் அவ்வடிவமே இக்கோயிலில் போற்றி வணங்கப்படுகிறது. இத்திருமேணியை ‘தூதஹரி" எனவும் அழைக்கின்றனர். 

பெருமாளின் மிகப் பெரிய வடிவத்தை இந்தக் கோயிலில் கண்டு வணங்கலாம். இறைவன் எழுந்தருளி அருள்புரியும் கருவறையின் விமானப்பகுதி சாலாஹார விமானமாக அமைத்துள்ளது. இதனை "பத்ர விமானம்', "வேதகோடி விமானம்' எனவும் அழைக்கின்றனர்.  இந்தக் கோயிலில் ருக்மணி பிராட்டிக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் தனித்தனியே சந்நிதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தில் அமைந்துள்ள மத்ஸ்ய தீர்த்தத்தில் தவம் செய்த ஜனமே ஜயனுக்கும் ஹாரித மாமுனிக்கும் பாண்டவதூதப் பெருமாள் காட்சி அளித்ததாக தலவரலாறு கூறுகிறது.

கோயிலில் அருளாளப் பெருமானார் என்கிற எம்பெருமானார் என்கிற ஆசாரியார் எழுந்தருளியுள்ளது மற்றொரு சிறப்பாகும். இவ்வாசாரியர் முன்பு "யக்ஞமூர்த்தி' என்ற பெயர் கொண்டு இராமாநுஜரோடு 18 நாள்கள் வாதம் புரிந்து அவருடைய உபதேசங்களால் உள்ளம் உருகி, அவருடைய திருவடிகளில் அடைக்கலம் புகுந்தவுடன் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கியவர். 

ஸ்ரீ வைஷ்வை சம்பிரதாயத்துக்கு "ஞானசாரம்', "பிரமேயசாரம்'  என்ற இரு நூல்களை அருளிச் செய்துள்ளார். இவருக்கு கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரம் அன்று சிறப்பான முறையில் சாற்றுமறை வழிபாடு நடைபெற்று வருகிறது.

தொன்மைச் சிறப்பு வாய்ந்த இந்தக் கோயில் பல்லவர் காலத்திலேயே கட்டப்பட்டாலும், சோழமன்னர் குலோத்துங்க சோழன் காலத்தில் திருப்பணி (கி.பி. 1070 } 1120) செய்யப்பட்டதையும், இக்கோயிலுக்கு நந்தவனம் அமைத்துக்கொள்ள நிலம் தானமாக அளிக்கப்பட்டதையும் அறியமுடிகிறது. 

இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி. 1163 - 1178) இக்கோயிலில் வழிபாட்டுக்காகத் தானம் அளித்த செய்தியை அறிய முடிகிறது. பிற்காலத்தில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதையும் காணமுடிகிறது. 

சந்திர பகவானின் தேவியர்கள் ரோகிணி } கார்த்திகை ஆகியோர் ஆவார். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்தத் தலத்தில் தீப } தூபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பாக விளங்குகிறது. 

இந்தத் தலத்தில் கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி,  கார்த்திகை பரணி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம் போன்ற சிறப்பு நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் நகரில் ஏகாம்பரேசுவரர் கோயில், சங்கர மடத்துக்கு அருகே அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிப். 15}இல் குடமுழுக்கு நடைபெறுகிறது. அமர்ந்த கோலத்தில், விசுவருப வடிவில் காட்சி தரும் கண்ணபிரானை கண்டு வழிபட்டு வாழ்வில் அனைத்து பேறுகளையும் பெறுவோம்.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT