துன்பங்களைப் போக்கும் கோயில்
காஞ்சி மாநகரில் நாயன்மார்களால் போற்றி வழிபடப் பெற்ற ஐந்து திருத்தலங்களில் "கச்சி அனேகதங்காவதம்' என்று அழைக்கப்படும் கோயிலும் ஒன்றாகும்.
பல்லவ மன்னர்களால் எடுப்பிக்கப்பட்ட கோயில்தான் இது. முதலாம் குலோத்துங்க சோழனது காலத்தை சேர்ந்த (கி.பி. 1090) மூன்று கல்வெட்டுகள் இந்தக் கோயிலின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துக் கூறுகின்றன. கருவறை தேவக் கோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை போன்ற இறை வடிவங்கள் அழகு செய்கின்றன.
இறைவன் "அநேக தங்காவதேசுவரர்' என அழைக்கப்படுகிறார். தென்மேற்கு மூலையில் அழகிய பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது. "அனேகதம்' என்றால் "யானை' என்று பொருள். யானை வடிவில் விநாயகரும், குபேரரும் இறைவனை வழிபட்டதாக தல வரலாறு கூறுகிறது.
Advertisement
சுந்தரர் போற்றி, திருப்பதிகங்கள் அருளியுள்ளார். அவர் ஒவ்வொரு பாடலின் இறுதியில் "கலிக்கச்சி அனேக தங்காவதமே' என்று போற்றுவதையும் காணலாம். பெரிய புராணத்தில் "ஏயர்கோன் கலிக்காம நாயனார்' புராணத்தில் சுந்தரர் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபட்டதை சேக்கிழார் கூறுகிறார். இதேபோன்று திருஞானசம்பந்தரும் இத்தலத்துக்கு வந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. காஞ்சிப் புராணத்திலும் இத்தலத்தின் சிறப்பு கூறப்படுகிறது.
வினைப் பகை தீரும் இடம், சித்தம் ஒரு நெறி வைத்த இடம், எமன் தூதர் செய்யும் கொடிய துன்பங்களைத் தீர்த்து வைக்கும் இடம், உலகிய பந்தங்களைப் போக்கும் இடம், வீடு பெறப் பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம், வினை தீரும் இடம்... என்றெல்லாம் இத்தலத்தின் சிறப்புகளாக திருப்பதிகங்களில் கூறப்படுகின்றன.