வெள்ளிமணி

கற்கள் பூக்களாக மாறிய மகிமை

கி.ஸ்ரீதரன்

"கோயில் நகரம்' என்ற சிறப்புடன் விளங்கும் காஞ்சி மாநகரில் வழிபாடு சிறப்புமிக்க பல கோயில்களில் ஒன்றுதான் அப்பாராவ் முதலியார் தெருவில் உள்ள "திருவெட்டானேசுவரர்' என்ற "வீரட்டகாசம் கோயில்'.

சிவனின் நெற்றிக்கண் தீயால் அனைத்தும் அழிவுற்றபோது வீரட்டகாசமாக அவர் சிரித்ததால் "வீரட்டகாசம்' என்ற பெயர் பெற்றதாக வரலாறு. இங்கு கொங்கணச் சித்தர் தவமிருந்து வழிபட்டு, இறையருளைப் பெற்றதாகக் கூறப்படு

கிறது. "இறைவனை திருமால் வழிபட்டு தனது பச்சை நிறம் நீங்கி, பவள நிறம் பெற்றார்' என்று காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

தொண்டை நாட்டில் திருச்சங்கமங்கை என்ற ஊரில் அவதரித்த சாக்கியர், காஞ்சிபுரத்துக்கு வந்து ஞானம் பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து பல நூல்களைக் கற்றறிந்தார். புத்த சமயத்தில் ஈடுபாடு கொண்டு விளங்கியும், மனதுக்கு தெளிவு பிறக்கவில்லை. எனவே, "சிவநெறியே சாலச்சிறந்தது' என்று உணர்ந்து சிவ வழிபாட்டில் ஈடுபடத் தொடங்கினார்.

"செய்வினையும் செய்வானும், அதன் பயனுங் கொடுப்பானும்,

மெய்வகையால் நான்காகும் விதித்த பொருள் எனக் கொண்டே,

இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக்கில்லை' என்று சாக்கியர் உணர்ந்தார் என்பதை பெரியபுராணம் கூறுகிறது.

எனினும் பெüத்தத் துறவு கோலத்தை அகற்றாமலேயே சிவலிங்க வழிபாட்டை சாக்கியர் மேற்கொண்டார். "நாள்தோறும் சிவலிங்கத்தை கண்டு வணங்கிய பின்னரே உணவு உண்ண வேண்டும்' என்ற கொள்கை உடையவராக விளங்கினார். தாம் இருக்கும் இடத்தில் அருகில் வெட்ட வெளியில் சிவலிங்கத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, அதன் காரணமாக அருகில் கிடந்த கற்களை எடுத்து சிவலிங்கத்தின் மீது அன்பினால் எறிந்தார். கற்களை மலர்களாகவே சிவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து கொன்றை மலர்களைச் சூடிய சிவலிங்கத் திருமேனியை கண்டு வணங்கிய பின்னரே உண்ணுவது என்ற வழக்கத்தைக் கொண்டு விளங்கினார்.

ஒருநாள் தமது வழக்கத்தை மறந்து உண்ணத் தொடங்கினார். "எம்பெருமானை கல் எறிந்து வழிப்படாது மறந்தேனே" என்ற பதைபதைப்புடன் எழுந்து அங்கு கடந்த கல்லை எடுத்து சிவலிங்கத் திருமேனியின் மீது எறிந்து வழிபட்டார். இவருடைய எல்லையற்ற பக்தியை கண்டு இறைவன் உமையம்மையுடன் தோன்றி காட்சியளித்தார். சாக்கியர் இறைவனைக் கண்டு கைக்கூப்பி நிலத்தில் விழுந்து பணிந்து வணங்கினார். உள்ளன்புடனும், தூய பக்தியுடனும் இறைவனை வணங்கினால் இறைவன் கருணைக்கு ஆட்படுவோம் என்பதை சாக்கிய நாயனார் வரலாறு கூறுகிறது. இறைவன் சாக்கிய நாயனாருக்கு சிவலோகத்தில் தமது அடியாராக இருக்கும் பெரும் சிறப்பினை அளித்தார் என்று பெரிய புராணம் சிறப்பித்துக் கூறுகிறது.

பல்லவர் காலத்திலேயே கோயில் கட்டப்பட்டாலும், இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலங்களில் இக்கோயில் சிறப்பாக போற்றப்பட்டதை இங்கு காணப்படும் கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயநகர மன்னர் வீரகம்பண்ணன் காலத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்லவர் கால சிற்பங்களும் தூண்களும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

சிறிய கோயில்தான். கருவறை முன்மண்டபத்தில் இரு சிவ லிங்கங்கள் காணப்படுகின்றன. அவை அருகில் சோமஸ்கந்தர் வடிவம், இரண்டு திருவடிச் சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை ஆடவல்லான், சிவகாமி திருவடிகள் எனக் கூறப்படுகிறது. கருவறைக்கு எதிரில் சாக்கிய நாயனார் கையில் கல் ஒன்றுடன் காட்சி தரும் அழகிய சிற்பத் திருமேனியை காணலாம். கருவறையில் பின்புறச் சுவர் மாடத்தில் தொன்மைச் சிறப்புடன் திகழும் சிவலிங்கத் திருமேனியை கண்டு தரிசிக்கலாம்.

தொல்லியல் துறை (பணி நிறைவு).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT