சுவையால் இணைந்த நாடுகள்!
லண்டன் மாநகரில் ரீஜென்ட் தெருவில் உள்ள 'லண்டன் வீராசாமி உணவகம்' எனும் நூற்றாண்டு காணும் பாரம்பரிய இந்திய உணவகம், ஆங்கிலேய-இந்திய கலாசாரத்தின் அடையாளமாக விளங்குகிறது.
லண்டன் மாநகரில் ரீஜென்ட் தெருவில் உள்ள 'லண்டன் வீராசாமி உணவகம்' எனும் நூற்றாண்டு காணும் பாரம்பரிய இந்திய உணவகம், ஆங்கிலேய-இந்திய கலாசாரத்தின் அடையாளமாக விளங்குகிறது. 'சுவையின் வழியாக இணைந்த இரு நாடுகளின் வரலாறு' என்று உணவுத் துறை நிபுணர்கள் பெருமையுடன் கூறுவதுண்டு.
மகாத்மா காந்தி, இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், இந்தியப் பிரதமர்கள் ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இங்கு விருந்து உண்டுள்ளனர். மார்லன் பிராண்டோ, சார்லி சாப்ளின், டேவிட் காமரூன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் மனம் கவர்ந்த உணவகம் என்று குறிப்பிட்டுள்ளனர். டென்மார்க்கின் இளவரசர் ஆக்சல் இங்கே தயாராகும் உணவுகளை விரும்பிச் சுவைப்பார்.
வீராசாமி உணவகத்தைத் தொடங்கியவர், எட்வர்டு பால்மெர். இவர் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபுவின் தனிச் செயலாளராக இருந்த ஜெனரல் வில்லியம் பால்மெரின் கொள்ளுப் பேரன்.
Advertisement
வட இந்தியாவைச் சேர்ந்த ஃபியாஸ் உன்னிசா பேகம் என்ற மொகலாய இளவரசியை வில்லியம் பால்மெர் மணந்தார். இருவரும் 'நிஜாம்' என்ற பெயரில் இந்திய மசாலாப் பொருள்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலைச் செய்து வந்தனர்.
எட்வர்டு பால்மெரின் தந்தை சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வந்தபோது, 1800-களின் பிற்பகுதியில் இங்கிலாந்துக்குச் சென்று 'வீராசாமி & கோ' என்ற பெயரில் மசாலாப் பொடி விற்பனையை நடத்தினார். ஆங்கிலேயர்களுக்கு இந்திய உணவுக் கலாசாரத்தை அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் அவர் 1926-இல் தொடங்கியதே 'வீராசாமி உணவகம்'.
தொடக்கத்தில் இங்கு மெட்ராஸ் சிக்கன் கறி, அரிசிச் சோறு ஆகியன பிரபலம். பால்மெர் பிற்காலத்தில் சமையல் நூல்களை எழுதியபோது, அவற்றை 'வீராசாமி' என்ற பெயரில்தான் வெளியிட்டார். பின்னாளில் அவரிடமிருந்து சர் வில்லியம் ஸ்டூவர்டு என்பவர் உணவகத்தை வாங்கி, நடத்தினார். சமையல், கலைப்பொருள்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர் வில்லியம் ஸ்டூவர்டு. அதன்பின் பலர் நிர்வாகத்தை ஏற்று நடத்தினர்.
1997-ஆம் ஆண்டு முதல் வீராசாமி உணவகத்தை இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட இங்கிலாந்துவாசிகளான ரஞ்சித்- மாத்ரானி தம்பதியினர் நடத்தி வருகின்றனர்.
எதிர்காலம் என்ன?
இங்கிலாந்து அரசக் குடும்பத்தினருக்குச் சொந்தமான 'விக்டரி ஹவுஸ்' என்ற பழமை வாய்ந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் இயங்கி வரும் வீராசாமி உணவகத்தின் எதிர்காலம் குறித்த கேள்வி இப்போது எழுந்துள்ளது. அரசக் குடும்பத்தினரின் சொத்துகளை நிர்வகிக்கும் அரண்மனையின் எஸ்டேட் துறையினரிடம் 99 ஆண்டு கால குத்தகையில் தொடங்கப்பட்ட உணவகத்தின் குத்தகைக்காலம் முடிவுக்கு வருகிறது.
'குத்தகையை நீட்டிக்க வேண்டும்' என்று உணவக நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரண்மனையின் எஸ்டேட் துறையினரோ, 'கட்டடத்தை இடிக்காமல் புதுப்பிக்க இருக்கிறோம். இங்கிருந்து காலி செய்து வேறு இடம் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டனர்.
'வீராசாமி உணவகத்தை மூடுவதோ, இடம் மாற்றுவதோ கூடாது. அதே இடத்தில் உணவகம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும்' என்று பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல உணவுக்கலை நிபுணர்கள் சங்கத்தினரும் உணவகம் தொடர்ந்து அதே இடத்தில் இயங்க வலியுறுத்தி, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளனர். நீதிமன்றத்தை நாடியுள்ளனர் மாத்ரானி தம்பதியினர்.
-எஸ். சந்திரமெளலி