வெள்ளிமணி

சுகப் பிரசவம் தருவாள் கோகிலாம்பிகை!

கர்ப்பிணிகளின் சுகப் பிரசவத்துக்கு அருளும் நல்மருத்துவராக, அன்னையாக விளங்குபவள்...

பனையபுரம் அதியமான்

கர்ப்பிணிகளின் சுகப் பிரசவத்துக்கு அருளும் நல்மருத்துவராக, அன்னையாக விளங்குபவள் வில்லியனூர் அருள்மிகு திருக்காமீஸ்வரர் உடனுறை அன்னை கோகிலாம்பிகை.

வில்லியனூர் தொண்டை வள நாட்டின் ஓர் ஊராக விளங்கியது. எட்டாம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் தொடங்கி, பல்வேறு மன்னர்கள் காலத்தைக் கடந்து வந்துள்ளது.

மன்னர்கள் காலத்திய 44 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

வில்லை ஆயுதத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் "வில்லியர்கள்' என அழைக்கப்பட்டனர். அதன்படி, "வில்லியநல்லூர்' மருவி "வில்லியனூர்' ஆனது. திருக்காமீச்சுரம், வில்வவனம், வில்லிநகர், வில்வநல்லூர், வில்லிப்பாக்கம், வில்வேச்சுரம் என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டன.

ஒருகாலத்தில் வில்வமர வனப் பகுதியாக விளங்கிய இத்தலத்தில், உழவர்கரை பண்ணையார் வளர்த்த பசுவானது புற்றின் மீது நாள்தோறும் பால் சொரிந்தது. தகவலின்பேரில் மன்னனும் அங்கு வந்து, இடத்தை சுத்தம் செய்து பார்த்தபோது சுயம்புலிங்கம் வெளிப்பட்டது. இதன் பெருமையை உணர்ந்த மன்னன் கோயில் எழுப்பினான் என்பது தலவரலாறு.

"சோழவள நாட்டைச் சேர்ந்த கமலாபுரி என்ற நகரை தருமபாலன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். முற்பிறவியில் அவன் செய்த பாவத்தின் பலனாக அவன் உடல் முழுக்க வெண்குஷ்ட நோய் தாக்கியது. புண்ணியகீர்த்தி என்ற அந்தணரின் ஆலோசனைப்படி, திருக்காமேஸ்வரன் கோயிலுக்கு வந்த மன்னன் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி நோய்கள் நீங்கப் பெற்றான். மன்னனும் அங்கேயே தங்கியிருந்து கோயில் எழுப்பினான்' என இன்னொரு புராணக் கதையும் உண்டு.

பிரம்மதேவன் உருவாக்கிய தீர்த்தமான இது ஹிருத்தாப நாசினி, பிரம்ம தீர்த்தம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இங்கு மூழ்கி பலன் பெற்றவர்கள் ஆதிசேஷன், இந்திரன், மன்மதன், கோவிந்தன் எனும் அந்தணர், சகலாங்க சவுந்தரி என்ற கணிகை, சோழன் நரசிங்கமூர்த்தி.. எனத் தொடர்கின்றன. குளம் 1.8 ஏக்கரில் உள்ளது. நடுவில் எழிலான நீராழி மண்டபம் அமைந்துள்ளது.

கோயிலைப் பற்றி அறிய உதவும் தலபுராணம் "வில்லைப் புராணம்' என்ற நூல் 495 பாடல்களைக் கொண்டது. இதனை இயற்றியவர் வீரராகக்கவி. பேராசிரியர் ஜூலின் வின்சென்ட் என்பவர் பாரீஸ் நகர தேசிய நூலகத்தில் இருந்த கையேட்டுப் பிரதியை நகல் எடுத்து, உ.வே.சாமிநாதை அய்யருக்கு அனுப்பி வைக்க, அது 1940}இல் பதிப்பிக்கப் பெற்று, வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

கோயிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள சுகப்பிரசவ நந்தியானது கோகிலாம்பாள் அம்மன் சந்நிதியை நோக்கியவாறு அமைந்துள்ளது. இரண்டு நந்திகள் இருக்கும். இதில் சிறிய நந்தி சுழலும் தன்மை கொண்டது. இதையே "சுகப்பிரசவ நந்தி' என அழைக்கின்றனர்.

கர்ப்பிணிக்காக அவரது உறவினர் நேரில் வந்து மனபூர்வமாக பிரார்த்தனை செய்ய வேண்டும். அர்ச்சகர் அன்னையை நந்தி பார்க்கும் வடக்கு திசையில் திருப்பி வைப்பார். அதன் பிறகு இந்தப் பிரசவ நந்தியை தெற்கு திசையில் திருப்பி வைத்துவிட வேண்டும். நிச்சயமாக அந்தப் பெண்ணுக்கு சுகப்பிரசவம் நடந்துவிடும். இதன்

பிறகு, தாயும், சேயும் கோயிலுக்கு வந்து அதற்கு சிறிய அளவில் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். அர்ச்சகர் நந்தியை தெற்கு திசையில் பார்த்தபடி வைப்பார். வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனை நோக்கியபடி வடக்கு திசையில் அந்த நந்தியை இயல்பு நிலைக்கு திருப்பி வைத்துவிட வேண்டும். இதுவே நேர்த்திக்கடன் நிறைவேற்றும் வழியாகும்.

மகாமண்டபத்தின் வடமேற்குத் தூணின் மேல்புறத்தில் சுகப்பிரசவம் நடக்கும் தத்ரூபமான காட்சி புடைப்புச் சிற்பமாக வடித்துள்ளது இதை உறுதி செய்கிறது.

இங்கு எழுந்தருளியுள்ள சுயம்புநாதரின் பெயர் திருக்காமீசுவரன். இவருக்கு நடுவழிநாதன், வைத்தியநாதன், வில்வநேசன், மிரமீஸ்வரர், நரசிங்கநாதர் எனப் பல பெயர்கள் உண்டு.

பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று தினங்களில் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் சுயம்புமூர்த்தியை வழிபடுகிறது.

3.6 ஏக்கரில் அமைந்த கோயிலுக்கு கிழக்கில் 67 அடி ராஜகோபுரமும், தெற்கில் 97அடி உயர இராஜகோபுரமும் விண்ணை முட்டி ஏராளமான சிற்பங்களைக்கொண்டு விளங்குகின்றன. விழுப்புரம் } புதுச்சேரி நெடுஞ்சாலையில் வில்லியனூர் உள்ளது.

} பனையபுரம் அதியமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT