திருவாலியில் வேண்ட திருப்பம் நிச்சயம்...!
ஆலி நகர்க்கதிபதியே அயோத்தி யெம்மரசே ராகவனே தாலேலோ' என்று குலசேகராழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமால் நரசிம்மராக கணப் பொழுதில் அவதாரம் எடுத்து, இரண்யனை வதம் செய்தபோது, அந்தச் சீற்றம் அடங்கவில்லை. தேவர்களும், முனிவர்களும் அச்சமுற்று மகாலட்சுமியிடம் வேண்டவே, அவரோ பெருமாளின் வலது தொடையில் அமர்ந்து ஆலிங்கனம் செய்து சாந்தப்படுத்தினார். இதனால் இந்தத் தலம் "திருஆலிங்கன தலம்' என்று பெயர் பெற்றது. பின்னர், திருவாகியலட்சுமியை ஆலிங்கனம் செய்ததால் "திருவாலி' எனப் பெயர் பெற்றது.
"ஆலி நகர்க்கதிபதியே அயோத்தி யெம்மரசே ராகவனே தாலேலோ' என்று குலசேகராழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
மூலவர் அஷ்டாட்சர விமானத்தின் கீழ் வீற்றிருந்த கோலத்தில், " அழகிய சிங்கர்' என்ற லட்சுமி நரசிம்மராக இருந்து அருளுகிறார். உற்சவர் "திருவாலி நகராளன்' என துதிக்கப்படுகிறார். தாயார் அமிர்தகடவல்லி என்கிற பூர்ணவல்லித் தாயாராகும். தீர்த்தம் இலாக்ஷண புஷ்கரணியாகும்.
இத்தலத்துக்கு "லட்சுமி நரசிம்ம úக்ஷத்ரம்' என்று பெயர். "பஞ்ச நரசிம்ம ஷேத்திரங்கள்' எனப்படும் குறையலூரின் உக்கிர நரசிம்மன், மங்கை மடத்தில் வீர நரசிம்மன், திருநகரியில் யோக நரசிம்மன், ஹிரண்ய நரசிம்மன் ஆகியோருடன் சேர்த்து இந்த இடத்தைச் சுற்றி ஐந்து நரசிம்மத் தலங்கள் உண்டு.
எம்பெருமான் இரண்டாவது முறையாகத் தாமே இங்கு வந்து திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்ய எழுந்தருளியதால் இத்தலம் "பதரிகாச்ரமத்துக்கு சமமான தலம்' என்றே கருதப்படுகிறது. பூர்ண மஹரிஷி இங்கு தவம் செய்ததால், "பூர்ணபுரி' என்றும் ஒரு பெயருண்டு.
திருநகரிக்கு அருகில் உள்ள திருகுறையலூர் என்ற இடத்தில்தான் திருமங்கையாழ்வார் அவதரித்தார். இந்த இடமே "ஆலிநாடு' என்ற குறுநிலப் பகுதியாக இருந்தது. அதற்கு "நீலன்' என்ற பெயரில் திருமங்கையாழ்வார் குறுநிலமன்னராக இருந்தவர். "பில்வாரண்யம்' என்று அழைக்கப்பட்ட ஆரண்யத்தை யொட்டியதாக இப்பகுதி அமைந்திருந்தது.
அருகில் உள்ள திருவெள்ளக்குளம், திருமங்கையாழ்வாரின் தேவியாரான குமுதவல்லி நாச்சியார் தோன்றிய இடமாகும். திருவாலியில் வளர்ந்து வரும் குமுதவல்லியாரைப் பற்றி கேள்விப்பட்டு, அவரைத் திருமணம் செய்யுமாறு கேட்டார். குமுதவல்லியோ ""ஓராண்டுக்கு தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு அன்னதானம் செய்து, பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டால், திருமணம் செய்துகொள்கிறேன்'' என்று கூற, நீலனும் அவ்வாறே முதலில் அன்னதானம் செய்ய துவங்கினான். தன்னிடம் இருந்த பொருள் தீர்ந்தவுடன் வழிப்பறி செய்து அதைக் கொண்டு அன்னதானம் செய்தான்.
"திருமங்கையரசனுக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும்' என்று பிராட்டி எம்பெருமானை நச்சரித்தாள். ""நீ திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக அவதாரம் செய்து வளர்ந்து வரும்போது, நான் வந்து திருமணக்கோலத்தில் அங்கு வந்து உன்னை ஏற்கும்போது திருமங்கைக்கு அருள் செய்வோம்'' என்றார்.
உரிய காலத்தில் எம்பெருமான் திருமணக்கோலத்தில் மணவாளனாக இத்தலத்துக்கு எழுந்தருளி (ஆலி மணவாளனாக) பூர்ண மகரிஷியிடம் வளர்ந்த திருமகளை மணம் புரிந்து கொண்டு திருவாலிக்கும், திருநகரிக்கும் இடைப்பட்ட"வேதராஜபுரம்' என்ற இடத்தைக் கடக்கும்போது, திருமங்கையாழ்வார் மறித்து வழிப்பறி நடத்த, எம்பெருமான் திருமங்கையின் செவிகளில் "அஷ்டாச்சர மந்திரத்தை'
உபதேசம் செய்தார்.
எம்பெருமான் வடநாட்டு பதரியில் தானே குருவாகவும் தானே சீடனுமாய் நின்று திருமந்திர உபதேசம் செய்தார். அதன் பின்னர் நீலனும், திருமங்கையாழ்வார் ஆனார் என்கிறது வரலாறு.
வேதராஜபுரம் என்னுமிடத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர முதல்நாள் இரவு திருமங்கை மன்னன் ஸ்ரீவயலாளி மணவாளப் பெருமானை வழிமறித்து திருவேடுபறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா இன்றும் நடைபெறுகிறது. விழாவின் ஒன்பதாம் நாள் பகலில் திருவாலியில், திருநகரி வயலாளி மணவாளனுக்கும், அமிர்தகடவல்லி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
""திருவாலியில் வேண்டினால் விரைவில் திருமணம் கைகூடும். தொழில் அபிவிருத்திக்கு பெருமாளுக்கு அர்ச்சனை செய்து திருவடியில் வைத்து எடுத்துச் செல்லப்படும் தொகை பலநூறு மடங்கு விருத்தியாகும், குழந்தைகள் வேண்டுதல் செய்து கொண்டால் கல்வி பெருகும். நோய்கள் இருந்தாலும் வேண்டிக் கொண்டு அபிஷேக எண்ணெய் வாங்கிச் சென்று தடவி வர பூரணமாய் குணமாகும். திருவாலியில் வேண்ட திருப்பம் நிச்சயம்' என்பது ஐதீகம்.
மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழியில் மண்ணியாற்றின் வடபுறம் ஏரி குளங்கள் நடுவே உள்ள இந்தக் கோயில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, அக். 21}ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் மகா சம்ப்ரோட்சணம் நடைபெறுகிறது.
}இரா.இரகுநாதன்