முகப்பு
தினமணி கதிர்

ராணி சந்திரா - நான் சந்தித்த பிரபலங்கள் - 49

ராணி சந்திரா பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 15 மார்ச், 2026 at 9:43 AM
ராணி சந்திரா
பகிர்:

திருவிதாங்கூரில் கொச்சி கோட்டை என்ற இடத்தில் சந்திரன் - காந்திமதி தம்பதியருக்கு 1949-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி பிறந்தார் ராணி சந்திரா. 1972-இல் கேரளத்தின் அழகு ராணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் நடித்த முதல் மலையாளப் படம் 'அஞ்சு சுந்தரிகள்'. இதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். குறிப்பாக 'பாவப்பட்டவள்' (1967), 'நெல்லு' (1974), 'ஸ்வப்னதானம்' (1976) புகழ் பெற்ற படங்களாயின.

மலையாளப் படங்களைத் தொடர்ந்து தமிழில் பிரவேசம் செய்தார். 1973-இல் நான் எழுதி ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய படம் 'ராதா'. இதன் படப்பிடிப்பு கர்நாடாகாவில் உள்ள தீர்த்தஹள்ளி மலைப் பகுதியில் நடந்தது.

இதில் முத்துராமன், பிரமிளா, டி.கே. பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், சோ, சுகுமாரி, ஜெயந்தி உள்ளிட்டோர் நடித்தார்கள். தீர்த்தஹள்ளியில் நடந்த பத்து நாள்கள் படப்பிடிப்பில் அந்தக் கிராம மக்களில் ஒருவராக, பிரமிளாவின் தோழிகளாக பிரபல இயக்குநர் ஐ.வி.சசியின் மனைவி சீமா, பிரபல இயக்குநர் மகேந்திரனின் மனைவி பிரேமியுடன் ராணி சந்திராவும் நடித்தார்.

படப்பிடிப்பில் 'பத்தோடு பதினொன்னு அத்தோடு நீ ஒன்னு' என்ற நிலையில் ராணி சந்திரா 'ஏதோ வந்தோம் போனோம்' என்று ஒதுங்கி இருந்தார். ஒரு வாரத்துக்குப் பிறகு ராணி சந்திரா சொல்ல வேண்டிய வசனத்தை திருலோகசந்தர் 'வேண்டாம்' என்று கூறியதால், பேசத் தயாராக இருந்தவர் ஏமாற்றம் அடைந்தார்.

அடுத்த நாள் படப்பிடிப்பில் என்னிடம் வந்து, ' ஒரு வாரமா ஒரு டயலாக் இல்லை. இருந்த டயலாக்கையும் பேசாமல் செய்துவிட்டீர்களே!' என்று சிறிது வருத்தப்பட்டார்.

நான் அவருக்கு ஆறுதல் சொல்லி விட்டு அடுத்த நாள் படப்பிடிப்பில் திருலோகசந்தரிடம் அனுமதி பெற்று, 'ராதா , உன் புருஷன் படகுல வர்ற போது ஆத்து வெள்ளம் அடிச்சுக்கிட்டுப் போயிடுச்சு...' என்று ஓடி வந்து சொல்ல வைத்தேன். ஒரு வாரத்தில், 'இன்னைக்காவது ஒரு வசனம் கொடுத்தீங்களே!' என்று விரக்தியுடன் சந்தோஷப்பட்டார்.

படப்பிடிப்பின் கடைசி நாளில் ராணி சந்திராவுக்கு ஒரு டயலாக்கைக் கொடுத்துத் தயாராக இருக்கச் சொன்னேன். 'நல்லவங்களுக்கு நல்லதும், கெட்டவங்களுக்குக் கெட்டதும் நடந்தா வாழ்க்கை வாய்ப்பாகப் போயிடும்.'

இந்த டயலாக்கை அவரால் புரிந்துகொண்டு சொல்ல முடியாமல், அதை மலையாளத்தில் எழுதிக் கொண்டார். இதைப் பார்த்த திருலோகசந்தர் 'அதை டி.கே. பகவதி சொன்னால்தான் நன்றாக இருக்கும்' என்று கூறி, அவரைப் பேசச் சொன்னார். இதில் அவர் ஏமாற்றமடைந்தார். அவருக்கு ஆறுதல் கூறிய நான் என் அடுத்த படமான 'தேன் சிந்துதே வானம்' படத்தில் என் மதிப்புக்குரிய இயக்குநர் ரா.சங்கரனிடம் சிபாரிசு செய்து நடிக்க வைத்தேன்.

இதில் சிவகுமார், ஜெயசித்ரா நடித்தார்கள். இரண்டாவது ஹீரோவாக கமல்ஹாசன் நடித்தார். அவருக்கு ஜோடியாக ராணி சந்திரா நடித்தார். 'எழுதாத பாடல் ஒன்று' என்ற பாடலை கமல்ஹாசனுடன் சேர்ந்து ஆடிப் பாடி நடித்தார்.

நான் அவரிடம், 'டயலாக்கே இல்லைன்னு 'ராதா' படத்தில் வருத்தப்பட்டே. இப்போ பாரு கமலுடன் டூயட்டே பாடிட்டே!' என்று சொன்னேன். சிரித்தபடி எனக்கு நன்றி சொன்னார்.

அடுத்தது திருலோகசந்தர் பிரபல நாவலாசிரியர் மகரிஷியின் 'பத்ரகாளி' கதையைப் படமாக்க முடிவு செய்து, சிவகுமாருடன் நடிக்க யார் யாரையோ நினைத்த போது ராணி சந்திரா என்று முடிவு செய்து, ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

படம் வளர்ந்து, கிளைமாக்ஸ் மட்டும் எடுக்க வேண்டிய நிலையில் ராணி சந்திரா தன் நாட்டியக்குழுவுடன் துபை சென்று மும்பை வரும் வழியில் தன் 27-ஆவது வயதில், 1976-ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று விமான விபத்தில் தனது மூன்று சகோதரிகள் மற்றும் 95 பேருடன் மரணமடைந்தார்.

'பத்ரகாளி' படப்பிடிப்பு முடியும் நேரம் 'என்ன செய்வது?' என்று எல்லோரும் தவித்தார்கள். திரையுலகில், 'படத்துக்கு பெயர் வைத்தது சரியில்லை. 'பத்ரகாளி' என்று பெயர் வைத்திருக்கக்கூடாது' என்றார்கள்.

ஸ்ரீதர் 'காலமெல்லாம் காத்திருப்பேன்' என்று பெயர் வைத்து படம் பல காலம் வெளிவராமல் இருக்க, 'ஊட்டி வரை உறவு' என்று பெயரை மாற்றி வெளியிட்டார். எஸ். பாலசந்தர் 'ஓடாதே நில்' என்று பெயர் வைத்து ஓடாமலே போனது. எம்.ஜி.ஆர். படத்துக்கு 'யாரையும் அழ வைக்காதே' என்று இருந்ததை மாற்றினார்கள்.

ஒரு காலத்தில் பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படத்தின் கதாநாயகி அசுவத்தாமா நீண்ட காலம் நோய் வாய்ப்பட, அவரைப் போலவே இருந்த துணை நடிகை புஷ்பாவை நடிக்க வைத்து படத்தை வெற்றியாக்கியது போல திருலோகசந்தரும் இறந்து போன ராணி சந்திரா இல்லாமலே படத்தை முடித்து வெள்ளி விழா கொண்டாடினார். அந்த வெற்றியைப் பார்க்க ராணி சந்திரிகாவுக்குக் கொடுத்து வைக்கவில்லை.

(தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →