வெள்ளிமணி

முருகன் வழிபட்ட கோயில்!

விஜய நகர மன்னர் திருமலை தேவ மகராயர் கல்வெட்டிலும் "தையூர் திருமுருகீசுரமுடைய தம்பிரானார்' என அழைக்கப்படுகிறார்.

கி.ஸ்ரீதரன்

தலசயனபுரமாகிய "தையூர்' "ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து ஆமூர்க் கோட்டத்துக் குமிழி நாட்டு இராசகேசரி நல்லூர்' எனக் குறிப்பிடப்படுகிறது. இவ்வூருக்கு "இராசகேசரிநல்லூர்' என்ற பெயரும் இருந்துள்ளது.

அம்பாள் சந்நிதியில் காணப்படும் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில், இறைவனை "அழகிய சொக்கனார்" என்றும் படுவூர் நாட்டுத் திருவிடவெந்தையைச் (திருவிடந்தை) சேர்ந்தவர்கள் வழிபாட்டுக்காக நிலம் தானமளித்ததாகவும் கூறுகிறது. விஜய நகர மன்னர் அச்சுத தேவராயர் (1536) கல்வெட்டில் இவ்வூர் ஸ்ரீ ராஜகேசரி நல்லூரான "தையூர் நயினார் திருமுருகீசுவரமுடைய நயினார்' என்று இறைவன் குறிப்பிடப்படுகிறார். விஜய நகர மன்னர் திருமலை தேவ மகராயர் கல்வெட்டிலும் "தையூர் திருமுருகீசுரமுடைய தம்பிரானார்' என அழைக்கப்படுகிறார்.

கருவறை நுழைவு வாயிலின் அருகே காணப்படும் வழிபாட்டில் உள்ள விநாயகர் சிற்ப வடிவத்தில் பீடத்தில் "ஸ்ரீ உரு மேற்று' என்ற வாசகப் பொறிப்பு காணப்படுவது கோயிலின் பழமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

கிழக்கு பார்த்த கோயில். வாயிலில் கோபுர அமைப்பு இல்லை. கருவறையில் லிங்க வடிவில் இறைவன் காட்சி தருகிறார். அடுத்து அர்த்த மண்டபமும், மகா மண்டபமும் அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது. சந்நிதி எதிரே எழுந்தருளியுள்ள நந்திக்கு பிரதோஷ நாளில் சிறப்பான வழிபாடுகள் நடைபெறுகின்றன.

கருவறை மேலே உள்ள விமானம் மூன்று அடுக்குகளுடன் அழகிய சுதை சிற்பங்களுடன் காட்சி தருகிறது. கருவறை சுவரில் காணப்படும் தேவகோட்டங்களும் அவற்றின் இடையே காணப்படும் கும்ப பஞ்சர அமைப்புகளும் சிற்ப அழகுடன் காட்சி தருகிறது. சுவரில் கண்ணப்ப நாயனார் வரலாறு, சிவலிங்கத்தை பசு பால் சொரிந்து வழிபடும் காட்சி, தேவி இறைவனை வழிபடும் காட்சி, தவமிருக்கும் காட்சி, பனை வழிபடும் காட்சி போன்ற பல புடைப்புச் சிற்பங்களால் கருவறை சுவர் சிற்ப களஞ்சியமாக விளங்குகிறது.

விமானத்தின் கூரையில் நாசிக்கூடு என்ற சிற்ப அலங்காரத்தின் நடுவில் எண்திசை காவலர்கள் சிவனின் பல்வேறு வடிவங்கள் காணப்படுவது கோயிலின் சிற்ப அழகுக்கு பெருமை சேர்க்கின்றன.

விஜயநகர மன்னர் காலத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த உத்தண்டன் குறித்து "உத்தண்டன் கோவை' என்ற நூலை புலவர் ஒருவர் இயற்றியுள்ளார். இந்த நூலில் தையூரின் இயற்கை வளம், கடல் வளம், உப்பளம் என மருதநிலம், குறிஞ்சிநிலம், நெய்தல் நிலம் என்ற மூன்று பகுதிகளின் சிறப்பும் கூறப்படுகிறது.

வழிபாடு சிறப்பும் இலக்கிய சிறப்பும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் விளங்கும் தையூர் முருகீசுவரர் கோயிலில் இந்து சமய அறநிலைய வழிகாட்டுதலின்படி தொன்மைச் சிறப்பு மாறாமல் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. செப். 15}இல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சமராபுரி முருகப் பெருமான் வழிபட்ட தையூர் மரகதவல்லி உடனாய முருகீசுவரரை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களையும் அடைவோம்.

சென்னையில் இருந்து திருப்போரூக்கு செல்லும் பழைய மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கத்தை அடுத்து தையூர் கிராமம் அமைந்துள்ளது.

தொல்லியல் துறை (பணி நிறைவு)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு

சிரி... சிரி...

SCROLL FOR NEXT