உத்தம சோழன் என்னும் மதுராந்தகச் சோழனால், அந்தணர்களுக்காக மானியமாக வழங்கப்பட்ட ஊரே மதுராந்தகம். அதற்கு "மதுராந்தக சதுர்வேதிமங்கலம்' என்ற பெயர் வழங்கப்படலாயிற்று. ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர், ராமர் அயோத்திக்குச் செல்லும் வழியில் மதுராந்தகத்தில் இறங்கியதாக வரலாறு கூறுகிறது. இங்கு ராமானுஜருக்கு அவரது குரு ஸ்ரீ பெரிய நம்பிகள் பஞ்ச சம்ஸ்கார உபதேசம் அளித்துள்ளார். இந்த நகரில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் என்னும் ஏரிகாத்த ராமர் கோயில் பிரசித்தி பெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் செங்கை ஆட்சியராக இருந்தார் பிளேஸ் துரை. அதிக மழை பெய்ததால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து எந்த நேரத்திலும் ஏரி உடைந்து ஊருக்கு சேதம் விளைவிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. இங்குள்ள தாயார் ஜனகவல்லி சந்நிதி சேதம் அடைந்திருந்தது.
அப்போது பிளேஸ்துரை, "ராமரும், தாயாரும் சக்தி உடையவர்களாக இருந்தால் ஏரி உடையாமல் காப்பாற்ற வேண்டும். அவ்வாறு காப்பாற்றினால் கோயில் திருப்பணியை செய்து தருகிறேன்' என்றார். ஏரியும் நிரம்பி வழிந்தது. "எந்த நேரமும் ஏரிக்கரை உடையலாம்' என்ற பதற்றமான சூழ்நிலையில் அன்று இரவு ஏரியின் நிலைமையை பிளேஸ்துரை பார்வையிட்டார்.
அப்போது, ராமர் தமது தம்பி லட்சுமணனுடன் அலைமோதும் வெள்ள நீரினால் ஏரிக்கரை உடையாமல் வில் அம்பு ஏந்தி காத்து நின்ற அதிசயக் காட்சியைக் கண்ணுற்றார். இதுகுறித்து அவர் எழுதிய குறிப்புகளை சென்னை ஆவணக் காப்பகத்தில் இன்றும் காணலாம்.
உடனடியாக பிளேஸ்துரை கோயிலுக்கு வந்து வாக்களித்தபடி தாயார் சந்நிதியை புதுப்பித்து, திருப்பணி செய்தார். அவரது நினைவாக இன்றும் தாயார் ஜனகவல்லி சந்நிதியில் அவர் பெயர் தாங்கிய சிலாசாசனம் அமைக்கப்பட்டுள்ளது.
விபண்டக மகரிஷி வேண்டுதலின்பேரில், ஸ்ரீராமர் சீதாதேவியின் திருக்கரத்தைப் பிடித்தபடி திருக்கல்யாண கோலத்தில் இக்கோயிலின் கருவறையில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார். சுகர், விபகண்டர் போன்ற ஆச்சாரியர்கள் தவம் செய்த இடம் இது. கோயிலில் ஸ்ரீ ராமானுஜர் மந்திர உபதேசம் பெற்றதை ஆவணி மாதம் சுக்கில பஞ்சமியன்று கொண்டாடுகின்றனர். ஸ்ரீராமானுஜர் வெள்ளுடை தரித்து கிருகஸ்தராய் காட்சி அளிக்கிறார்.
இந்து சமய அறநிலையத் துறையின் வழிகாட்டுதலின்பேரில், அறங்காவலர் குழு தலைவர் கு.குமார் தலைமையிலான குழுவினர் பல்வேறு நன்கொடையாளர்களின் நிதி உதவி, பொருளுதவிகளைப் பெற்று திருப்பணிகளை நடத்தினர். ரூ 2 கோடியில் சந்நிதிகள், தேர், புதிய தேரின் வடம் உள்ளிட்டவை சீரமைக்கப்பட்டன. 16 ஆண்டுகளுக்குப் பின்னர், ஆகஸ்ட் 21}ஆம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.