அருணகிரிநாதரால் பாடல்பெற்ற பெருமைமிக்கது திருஆவினன்குடி. பழனி மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கோயிலே இப்புராதன தலத்தின் ஆதிகோயிலாகும். இத்தலத்தை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகனின் மூன்றாம் படை வீடாகப் போற்றியுள்ளார்.
திருமகளும், காமதேனுவும், ஆதவனும், நிலமகளும், அக்கினிக் கடவுளும் இத்தலத்துக்கு வந்து இங்கே எழுந்தருளியுள்ள திருமுருகனை வழிபட்டதால், "திருஆவினன்குடி' என்னும் தெய்வீகத் திருப்பெயர் ஏற்பட்டதாகவும், இத்திருப்பெயர் சொன்ன அளவிலேயே முக்திப்பேறு நல்கும் மேலான சிறப்பை உடையது எனவும் பழனி தலபுராணம் கூறுகிறது. திருஆவினன்குடி திருமுருகனை தேவர்களும் முனிவர்களும் வழிபட்டு தங்களின் குறைதீர்த்துக் கொண்டனர்.
மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயிலில் முருகன் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்ற பெயருடன் தம்மைச் சிந்தித்துப் போற்றி வணங்கி வழிபடுவோருக்கு வேண்டும் வரம் வழங்கும் வள்ளலாக எழுந்தருளியுள்ளார். இம்மை நலத்தையும், மறுமை நலத்தையும், வீடுபேற்றினையும் வழங்கிக் காத்தருளும் கருணைக் கடலாக, கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்றார். இதனை அருள்ஞானப் பரம்பரையில் தோன்றிய நக்கீரர், அருணகிரியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அருளாளர்களின் அருள்வாக்கால் அறிகிறோம்.
கோயிலின் வடகிழக்குப் பகுதியில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. பழனி முருகனை வழிபட வரும் பக்தர்கள் திருஆவினன்குடி முருகனை வழிபட்ட பிறகு மலைக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இங்கு பங்குனி உத்திரத் திருவிழா திருத்தேரோட்டத்துடன் விமர்சையாக நடைபெறுகிறது.
அண்மையில் அருள்மிகு குழந்தைவேலாயுத சுவாமி சந்நிதி மற்றும் திருச்சுற்று தெய்வங்களின் சந்நிதிகள் அழகுறத் திருப்பணி செய்யப்பட்டு பொலிவு பெற்றுள்ளது. இக்கோயிலில் டிசம்பர் 8}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.