ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர், வீரராம்பட்டினத்தில் வீரராகவச் செட்டியார் என்ற மீனவர் வசித்துவந்தார். ஒருநாள் வழக்கம்போல் மீன் பிடிக்க இவர் அருகேயுள்ள செங்கழுநீர் ஓடைக்குச் சென்றார். நெடுநேரம் வலை வீசியும் மீன்கள் சிக்கவில்லை. மனம் வெறுத்த வீரராகவச் செட்டியார் கடைசியாக ஒருமுறை முயற்சி செய்தபோது, பெரிய மீன் சிக்கியதற்கான அறிகுறி தென்பட்டது. அவர் வலையைக் கரைக்கு இழுத்து வந்து பார்த்தபோது, சிக்கியது மிகப் பெரிய மரக்கட்டையாக இருந்தது. அதை அவர் தன் வீட்டுத் தோட்டத்தில் கொண்டுவந்து சேர்த்தார்.
நாள்கள் கடந்தன. ஒருநாள் அடுப்பெரிக்க வீரராகவச் செட்டியாரின் மனைவி கொல்லைப் புறத்தில் கிடந்த மரக்கட்டையை கோடாரியைக் கொண்டு பிளக்க முயன்றார். அப்போது, மரத்தில் ரத்தம் பீறிட்டது. வீடு திரும்பிய வீரராகவச் செட்டியார் அந்த மரக்கட்டையைத் தன் வீட்டில் உள்ளே வைத்து வழிபட்டு வந்தார். அப்போது, அவரின் வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் ஏற்பட்டது.
ஒருநாள் இரவு வீரராகவச் செட்டியாரின் கனவில் அம்மன் வந்து, "ரேணுகாதேவியான நான் இங்கே குடியேற வந்துள்ளேன். இதற்காகவே மரக்கட்டையை உன்னிடம் வந்து சேர்ந்துள்ளது. இந்த மரக்கட்டையை நான் குறிப்பிடும் இடத்தில் நிறுவி, அதன்மீது என்
திருவுருவை விக்கிரகத்தால் பிரதிஷ்டை செய்து வழிபடு. அந்த இடம் பல்லாண்டு காலம் சித்தர் வழிபட்டு வரும் சித்தர் பீடமாகும். என்னை "செங்கழுநீர் அம்மன்' என்ற திருப்பெயரில் அழைக்கலாம்'', என்றார்.
மறுநாள் அவர் ஊர் மக்களுடன் சேர்ந்து, குறிப்பிட்ட இடத்தைத் தேடினர். அப்போது புதர்கள் அடர்ந்த பாம்புப் புற்றில் வெளிப்பட்ட பெரிய நாகம் படம் விரித்து ஆடி மூன்று முறை பூமியில் அடித்து இடத்தை அடையாளம் காட்டி மறைந்தது. அந்த இடத்தை சுத்தம் செய்து, கோயில் அமைக்கப்பட்டது.
புதுச்சேரியின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அரிக்கமேடு அருகே இந்தக் கோயில் அமைந்துள்ளது. வேண்டிய வரத்தை அருளும் செங்கழுநீர் அம்மனை புதுச்சேரி, தமிழ்நாடு மட்டுமின்றி, வெளிமாநில பக்தர்களும் வழிபட்டு செல்கின்றனர்.
ஆடி வெள்ளிக் கிழமைகளில் கோயில் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஐந்தாம் வெள்ளியன்று நடைபெறும் தேர்த் திருவிழாவை புதுவை துணை நிலை ஆளுநரும், முதல்வரும் இணைந்தே தொடங்கிவைப்பது, பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தின்போது தொடங்கிவைக்கப்பட்டது. இன்றும் தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.