பிரம்மன், திருமால். சிவன் ஆகிய மும்மூர்த்தியரின் ஓருருவ வழிபாடு சுசீந்தரம் தாணுமாலயன் கோயிலில் உள்ளது. ஆதிமூலஸ்தானத்தில் சிவாகம பூஜையும், பெருமாள் சந்நிதியில் விஷ்ணு பூஜையும், தாணுமாலயன் சந்நிதியில் கேரள நம்பூதிரிகளால் தாந்திரீக பூஜையும் நடத்தப்படுகின்றன. மும்மூர்த்திகளின் வழிபாடே தமிழக எல்லைக்கு அப்பால், தத்தாத்தரேயர் வழிபாடாகும்.
அத்திரி முனிவர்} அனுசுயா ஞானாரண்யத்தில் தவவாழ்வு மேற்கொண்டிருந்தனர். ஒருமுறை அத்திரி இமயமலைக்குச் சென்றபோது, மூம்மூர்த்திகளும் அனுசுயாவின் கற்புத் திறத்தை உலகுக்கு வெளிக்காட்ட அந்தணர் வடிவில் ஆசிரமத்துக்கு வந்தனர். மூவரும் ஒருமித்த குரலில், ""ஆடை அணிந்தவரால் உணவு பரிமாறப்படுமாயின் உண்ண மாட்டோம்'' என்றனர். அனுசுயாவும் தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க, பச்சிளம் குழந்தைகளாக மாறியவர்களுக்கு உணவூட்டி, தொட்டிலிட்டு, தாலாட்டித் தூங்கச் செய்தாள். முப்பெரும் தேவியரும் கணவர்களை பழைய உருவுக்கு மாற்றித் தர அனுசுயாவிடம் வேண்ட, திரும்பி வந்த அத்திரியும் இதையே பரிந்துரைத்தார். தம்பதியர் தல விருட்சமான கொன்றை மரத்தினடியில் வேண்டினர். மும்மூர்த்திகளும் முழுக் காட்சியை அளிக்க, இருவரும், ""இங்கேயே தங்கி அருள வேண்டும்'' என வேண்டினர். இதன்படி, சிவன் (தாணு), விஷ்ணு (மால்), பிரம்மா (அயன்) ஆகியோர் ஓருருவாய் "தாணுமாலயன்' என்ற பெயரில் எழுந்தருளினர்.
கௌதம முனிவரின் மனைவி அகலிகை மீது தேவேந்திரன் காமம் மிகுந்தார். முனிவர் வெளிச் சென்றிருந்த நேரத்தில் அகலிகையை துய்க்க, முனிவரின் உருவில் நெருங்கினார். இதற்குள் முனிவர் திரும்பிவர , இந்திரன் பூனையாய் ஓட்டமெடுத்தார். அகலிகை அச்சத்தில் ஒதுங்கினார். முனிவர் கோபத்தில் இந்திரனுக்கு உடல் முழுவதும், ஆயிரம் கண்கள் பெண் உறுப்பு வடிவில் உண்டாகவும், அகலிகையை "கல் நிலையில் ஜடமாவாய்' எனவும் சாபமிட்டார்.
அகலிகைக்கு "ராமரின் திருவடி தீண்ட சாபவிமோசனம் பெறுவாய்' என்றார் முனிவர். முப்பெரும் தேவரும் ஒன்றாயருளும் தாணுமாலயனை தினம் ஒரு காலமாவது வழிபட்டு சாபவிமோசனம் பெற இந்திரனுக்கு கூற, அவரும் வழிபட்டு விமோசனம் பெற்றதாக வரலாறு. "சுசீ' என்றால் "தூய்மை'. இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால், "சுசீந்திரம்' எனப்பட்டது.
அன்றுமுதல் தினமும் அர்த்தஜாமத்தில் வந்து பூஜையை இந்திரன் செய்கிறார் என்பது ஐதீகம். கணபதி பெண்ணுருவில் "விக்கினேசுவரி' என்ற பெயரிலும் வழிபடப்படுகிறார்.
அறம் வளர்த்த அம்மன், கருவறை, ஆதிசந்நிதி, நந்தி மண்டபம் , ராமர் சந்நிதி, அனுமன் சந்நிதி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேல் சந்நிதிகள் உள்ளன. முக்கிய சந்நிதி அமைப்பு 9} ஆம் நூற்றாண்டில் சோழ சாம்ராஜ்யத்தில் கட்டப்பட்டு, திருமலை நாயக்கர், திருவிதாங்கூர் மகாராஜா காலங்களில் விரிவாக்கங்கள் நடைபெற்றுள்ளன.
134 அடி உயரமுடைய ஏழு நிலை ராஜகோபுரம், 5,400 சதுர அடி பரப்புமுடைய கோயிலின் கருவறையைச் சுற்றி இரு சுற்றுகள் பிரகார மண்டபம், சிற்பம் நிறை செண்பகராமன் மண்டபம், இசைத்தூண்களுடைய குலசேகர மண்டபம், திருக்கல்யாண ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டபம், சித்திரச் சபை உள்ளிட்டவை சிறப்புமிக்கவை. ராஜகோபுரத்தின் உள்ளே 350 ஆண்டுகளுக்கு முந்தைய தல வரலாறு, ராமாயண ஓவியங்கள் மூலிகை வண்ணத்தால் தீட்டப்பட்டுள்ளன.
ஆற்காடு நவாப் சந்தாசாகிப் சகோதரர்கள் நாஞ்சில் நாட்டுக்கு படையெடுத்து சுசீந்திரத்துக்கு வந்தபோது, ஊரார் முன்பே கோயிலின் பொருள்களை கருவறைக்குள் இட்டு பூட்டி சுவர் எழுப்பினர். 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையைக் காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்தனர். பிறகு 200 ஆண்டுக்குப் பிறகு மன்னர் காலத்தில், 1930 மே 2}இல் ஆஞ்சநேயரை மீண்டும் நிறுவினர்.
"உதயமார்த்தாண்ட விநாயகர், திருநீலகண்ட விநாயகர், இந்திர விநாயகர் ஆகியோரை சங்கடஹர சதுர்த்தி நாளில் மூன்று நெய்தீபம் ஏற்றி வழிபட செல்வம் கிட்டும். விநாயகர் அகவல் பாராயணம் செய்து ,தொடர்ந்து ஐந்து சங்கடஹர சதுர்த்தி நாள்களில் வழிபட சகல செல்வமும் கிட்டும். நவக் கிரகங்களை வணங்க கிரகக் கோளாறுகள் பாதிக்காது. ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் நீக்கும். திருமணம் கைகூடும். அனைத்து அருளும் கிடைக்கும்'' என்பது ஐதீகம்.
பிரதோஷத்தின்போது, சிவன் ரிஷபத்தில் உலா வர, பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவது சிறப்பாகும். விழாக்களின்போது, காவல் துறை மரியாதை செய்வதும் இங்கு சிறப்புடையது.
இரா.இரகுநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.