பன்னிரண்டு தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்துக்குப் பல சிறப்புகள் உண்டு. காவிரிக்கரைப் புண்ணியத் தலங்களில் கார்த்திகை மாதம் முழுவதுமே "ஞாயிறு தீர்த்தவாரி' களை கட்டத் தொடங்கிவிடும்.
கார்த்திகை மாதம் என்பது சூரியனுடைய மாதமாகும். இம்மாதத்தில் விருச்சிக ராசி மண்டலத்தில் சஞ்சரிக்கும் சூரியனானவர் பூமியில் உள்ள உயிர்களுக்கு அமைதியான, திடமான, உன்னதமான மனநிலையைத் தருவதாக ஜோதிடவியல் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தில் தான் பூலோகத்தில் பல தலங்களில் சூரியன் சிவபெருமானை வழிபட்டுப் பேறு பெற்றதாக புராண வரலாறுகள் போற்றுகின்றன. சூரியன் வழிபட்ட இத்தகு தலங்களில் இம்மாதத்தில் வழிபட சூரிய தோஷங்கள் அகன்று, பரிபூரணமான புண்ணியப் பலன்கள் கிடைக்கிறது. குறிப்பாக, கார்த்திகை ஞாயிறுகளில் புனிதமான நீர்நிலைகளில் தீர்த்தமாடுபவர்களை சிவபெருமானும் அம்பிகையும் அஸ்திர தேவர் ரூபமாக ஆசிர்வதிக்கின்றனர் என்கின்றன மறைநூல்கள்.
அந்நாள்களில் புண்ணியத் தீர்த்தமாடுவதால் கடுமையான கிரக தோஷங்களையும் போக்கி சிவகதி அளித்திடவல்ல தலம், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்கோடிக்கா எனும் திருத்தலம். இன்றைய நாள்களில் திருக்கோடிக்காவல் என வழங்கப்படுகிறது.
காவிரி நதிக்கென உள்ள புராண பெருமைகள் அளப்பரியன. இந்த நதியானது குறிப்பிட்ட ஒருசில பகுதிகளில் மட்டும் தனது இயல்பான போக்கின் திசையிலிருந்து விலகி வளைந்து, வடக்கு முகமாகப் பாய்வது இயற்கையின் அதிசயம். இத்தகு தலங்களில் பாயும் காவிரியானது கங்கை நதிக்கு நிகராக "உத்திர வாஹினி' என்று சிறப்பிக்கப்படுகின்றது. இந்த உத்திரவாஹினியான காவிரியில் புனித நீராடுவது கங்கையில் நீராடிய புண்ணியத்தைத் தரும் என்கிறது காவிரி மகாத்மியம். திருக்கோடிக்காவல் பகுதியில் உள்ள காவிரியானது இத்தகு "உத்திரவாஹினி' ஆக விளங்குகின்றது. இயற்கையாகவே திருக்கோடிக்காவல் தலமானது மூன்று எல்லைகளைக் கொண்டுள்ள முக்கோண வடிவுடையதால் "த்ரிகோடி' என்று புராண காலத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. தேவாரத் தமிழில் கோடிகா எனப் போற்றப்படுகிற தலம் இது.
கோடி-வளைவு; காசோலை. அதாவது கோடிகா என்றால் வளைவில் அமைந்திருக்கக்கூடிய சோலை என்பது பொருள். இந்த வளைவு என்கிற பதம் காவிரியின் போக்கினைக் குறிப்பது. இப்படி தலத்தின் பெயரிலேயே ஒரு விசேஷத்தினைக் கொண்டுள்ளது கோடிகாவின் சிறப்பு. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் சிறப்புமிக்க கோடிகாவில் உள்ள தீர்த்தம் சிருங்கோத்பவ தீர்த்தம் ஆகும். நந்தி பகவான் தனது கொம்பினால் பூமியைக் கீறியதால் பாதாளத்திலிருந்து பீறிட்ட கங்கை தீர்த்தமாகையால், இதற்கு "சிருங்கோத்பவ தீர்த்தம்' என்பது பெயர். தற்போது கோயில் அருகிலேயே இத்தீர்த்தம் சிறு குளமாகக் காணப் பெறுகிறது.
சிருங்கோத்பவ தீர்த்தக் குளம் மற்றும் அருகிலுள்ள உத்திரவாஹினியான காவிரி ஆகிய இரண்டு இடங்களிலும் கங்கையே தீர்த்தமாக இருக்கின்றபடியால், இவ்விரு இடங்களிலுமே ஒரே நாளில் தீர்த்தம் அளிக்கின்ற சிறப்புடைய தலம் இந்த கோடிகா. இறைவன் கோடீஸ்வரர்; இறைவி திரிபுரசுந்தரி.
தல புராணம் சொல்லும் கதை:
முற்காலத்தில், கணவனைக் கொன்ற பெண்ணொருத்தி இத்தலத்தில் தீர்த்தமாடி இறைவழிபாடு செய்தாள். பின் அவளது காலம் முடிந்து யம கிங்கரர்கள் அவளது உயிரை எடுத்துச் செல்லும்போது, சிவ கணங்கள் அவர்களுடன் போரிட்டு மீட்டனர். யமதர்மனோ, "கணவனைக் கொன்ற ஹத்தி தோஷம் பீடித்த பெண் ஆகையால் இவள் தண்டனைக்குரியவள்' என சிவபெருமானிடம் முறையிட்டார்.
ஆயினும், "கோடிகா தலத்தில் நீராடி வழிபட்டமையால் இவள் தோஷம் நீங்கி விட்டது. ஆகவே இவள் புண்ணிய லோகம் செல்லத்தக்கவள்' என தாமே திருவாய் மலர்ந்தருளினாராம் சிவபெருமான். கோடிகா தலமகாத்மியத்தில் வரும் இக்கதை இத்தலத்தில் தீர்த்தமாடுதலின் மகிமையைச் சொல்கிறது.
இங்கு நீராடி மூலவரான கோடீஸ்வரரை வழிபட பிரம்மஹத்தி தோஷம் கூட நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.
- சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.