பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகப் பழைமையான கோயிலாகத் திகழ்கிறது, திருவள்ளூரில் அமைந்துள்ள அருள்மிகு தீர்த்தீஸ்வரர் திருக்கோயில். மூர்த்தி, தலம், தீர்த்தம் என அனைத்திலும் சிறப்பானது.
மூன்று நிலை கோபுரத்தைக் கடந்து ஆலயத்துக்குள் நுழைந்ததும் பலிபீடம், கொடிமரம், நந்தியம்பெருமானை தரிசிக்கின்றோம். அருகிலேயே வள்ளல் பெருமான், பைரவர், நால்வர் தனி தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
கருவறையில் தீர்த்தீஸ்வரர் சதுர ஆவுடையார் மீது கருணையே வடிவாகக் காட்சி தருகிறார். பெüர்ணமி தினத்தன்று சுவாமிக்கு செய்யும் அபிஷேகத் தீர்த்தத்தை சித்தர் ஒருவர் மற்ற புண்ணிய தீர்த்தங்களுடன் சேர்த்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சுவாச நோய் தீர பிரசாதமாக வழங்குவதாக தலவரலாறு கூறுகிறது.
தீர்த்தீஸ்வரரை மனமுருக வேண்டும் போது உடல், மன பிரச்னைகள் தீர்வதுடன், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்; வாழ்வில் திருப்பங்கள் ஏற்படும் என்பது நிச்சயம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாத அமாவாசையிலிருந்து மூன்று நாள்கள் நந்திமண்டபம், மகா மண்டபம் கடந்து வரும் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவரான தீர்த்தீஸ்வரர் மீது சில நிமிஷங்கள் பூரணமாக விழுந்து விலகுவதைப் பார்க்கும் போது மெய்சிலிர்த்துப்போகும். மூலவரை தரிசித்துவிட்டு பிரகாரத்தை வலம் வரும்போது, ஆலயத்தின் தலவிருட்சமான மகிழ மரத்தையும் நாகர் சிலைகளையும் தரிசிக்கின்றோம். அருகிலேயே மால்வினை தீர்த்த சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒரே சந்நிதியில் அருள்பாலிக்கின்றனர்.
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கு அசுரர்களால் தொடர்ந்து இடையூறுகள் ஏற்பட, தேவர்கள் தங்கள் துயர் தீர்க்கும்படி திருமாலை சரணடைகின்றனர். திருமாலும் தன் சக்ராயுதத்தால் அசுரர்களை வதம் செய்து, தேவர்களைக் காக்கின்றார். அதனால் ஏற்பட்ட தோஷம் திருமாலைப் பற்றிக்கொள்ள இங்கு வந்து அருள்மிகு தீர்த்தீஸ்வரரை நோக்கி தவமிருந்து, தன்னுடைய தோஷம் நீங்கப் பெற்றார்.
பொதுவாக சிவாலயங்களில் முருகப்பெருமான் வடமேற்கு மூலையில்தான் காட்சிதருவார். ஆனால் இங்கு தீர்த்தீஸ்வரர் சந்நிதிக்கும் திரிபுரசுந்தரி அம்மன் சந்நிதிக்கும் நடுவில் அவர் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருவது சிறப்பாகும். தண்டாயுதபாணிக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது.
தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் திரிபுரசுந்தரி அம்மன் கருவறையில் சாந்த சொரூபிணியாக நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். பொதுவாக ஐப்பசி மாத பௌர்ணமியின்போது சிவபெருமானுக்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் இங்கு தாயாருக்கும் அன்னாபிஷேகம் நடப்பது கூடுதல் சிறப்பு. மேலும் நவராத்திரியின் போது ஒன்பது நாள் உற்சவம், ஆடிப்பூர வளைகாப்பு போன்றவையும் திரிபுரசுந்தரி அம்மனுக்கு சிறப்பாக நடைபெறும்.
கோயிலின் வடமேற்கு மூலையில் தர்மசாஸ்தா ஐயப்பனுக்கு தனி சந்நிதி உள்ளது. அருள் தவழும் முகத்தால் பக்தர்களுக்கு ஆசிகளை வாரி வழங்கி வருகிறார் ஐயப்பன். கார்த்திகை, மார்கழி மாதங்களில் ஐயப்பன் சந்நிதி பக்தர்களால் நிரம்பி வழியும். மாலை அணிதல், சிறப்பு பூஜைகள், இருமுடிக் கட்டுதல் என்று தொடர்ந்து ஆன்மிக நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும். காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 முதல் இரவு 8 மணி வரையும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும் ஸ்ரீ தீர்த்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர் வீரராகவர் கோயிலுக்குப் பின்புறம் அமைந்துள்ளது.
ஏ. மூர்த்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.