நம்முடைய அனைத்து வேண்டுதல்களுக்கும் ஒரே தலத்திலேயே தீர்வு கிடைத்து விடும் என்றால் ஆச்சரியம்தானே! ஆம், அப்படிப்பட்ட அதிசய தலம்தான், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருமங்கலம். இங்குள்ளது விக்கிரமசோழீஸ்வரம் எனப்படும் ஸ்ரீ பூலோகசுவாமி கோயில்.
சகலலோகமும் உய்ந்திடும்படியாக அம்மையப்பரின் தெய்வத்திருமணம் திருமணஞ்சேரி தலத்தில் நிகழ்ந்தவுடன், சப்தபதி நடந்த தலம்தான் இந்த திருமங்கலம். அச்சமயத்தில் பூலோகத்தில் உள்ள சகல உயிர்களும் கண்டு வியக்கும்படியாக ஈசன் தமது திருமணக்கோலத்தினைக் காட்டியருளிய தலம் இது.
கிழக்கு நோக்கிய ஆலயம். கருவறைக்குள் எழுந்தருளிய பூலோகநாத சுவாமியை வாயிலில் இருந்தே தரிசிக்கலாம் என்பது சிறப்பு. இவருக்கு இருபுறங்களிலும் துவார சக்திகள் உள்ள விஸ்தாரமான மகாமண்டபம். எக்கணமும் ஈசன் உத்தரவு அளித்தால் புறப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் நந்தி வலது காலை முன்னெடுத்து வைத்த நிலையிலேயே காட்சி தருகிறார் இங்கு. ஆதலால் பிரதோஷ காலத்தில் இவரை வணங்குபவர்களுக்கு பெருமான் விரைந்து வந்து பலன் தந்திடுவதாக நம்பிக்கை. மூலஸ்தானத்து உடையவருக்கு இடது பாகத்தில் தானும் கிழக்குத் திசை நோக்கியவளாய் தனித்த கோயிலில் காட்சி தருகிறாள் இத்தலத்து அம்மையான
ஸ்ரீ பூலோகநாயகி. மங்கையர் வேண்டுதலுக்கு மனமிரங்கி மாங்கல்ய பலம் அருளிடும் மிகுந்த வரப்பிரசாதி.
மணமகளான அம்பிகைக்கு பூட்டுவதற்குரிய திருமாங்கல்யத்தினைச் செய்வதற்காக குபேரனிடம் திருமகளானவள் பொன் எடுத்துக் கொடுத்ததும் இத்தலத்தில்தான். எனவே, திருமணத்திற்கான திருமாங்கல்யத்தினை இவ்வாலயத்தில் வைத்து பூஜிப்பது ஆகச்சிறந்த நற்பலனைத் தரவல்லது. மாங்கல்ய தோஷம் இருப்பவர்கள் இங்கு வழிபாடாற்றிட சுப பலன் கிடைத்திடும். தவிர, திருமாங்கல்யதாரணம் ஆனவுடனேயே அருந்ததி பார்த்தல் என்பது நம்முடைய தொன் சம்பிரதாயம். ஆனால், அந்த அருந்ததியே தன் கணவரான வசிஷ்டமுனிவருடன் இத்தலத்திற்கு வந்து தரிசித்ததன் வாயிலாக அச்சம்பிரதாயத்திற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்ட பெருமை உடைய தலமிது.
இவ்வளவு பெருமைக்கு உரிய அம்பிகையானவள் புதுமணப்பெண்ணாக நாணம் குறையாது அத்தனுடன் காட்சி அளிக்கிறாள் இங்கு. சுற்றாலையில் நிலைப்படுத்தப்பட்டிருக்கும் கல்யாணசுந்தரேஸ்வரக் கோலத்துடனான இந்தக் கல்திருமேனி தான் இத்தலத்தின் அருஞ்சிறப்பு எனலாம். மாப்பிள்ளை சுவாமியையும், அருகிலிருக்கும் அன்னையையும் தரிசிப்பவர்களுக்கு திருமண பாக்கியம் சடுதியில் கூடியமையும் என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.
இவர்களுக்கு வலப்புறத்தில் கல்யாண கணபதியை தரிசிக்கலாம். வடமேற்கு மூலையில் எழுந்தருளிய சிவசுப்பிரமணியரை வணங்கிட செவ்வாய் தோஷம் அகலும்; ஞானம் கைகூடிடும். மேலும், அம்மையப்பருக்கு இடையில் இவர் சந்நிதி கொண்டிருப்பதால் இத்தலம் சோமாஸ்கந்த úக்ஷத்ரம் ஆகவும் அமைவது கூடுதல் சிறப்பு.
இத்தலத்தில் வசிஷ்டமுனிவர் அருந்ததியுடன் செய்த வேள்வியின் முடிவில், அத்தீயிலிருந்து பாலாம்பிகையுடனான காலசம்ஹார மூர்த்தியாக, தம்மை வணங்கிடும் மார்க்கண்டேயர் உடன் சிவபெருமான் தரிசனம் அளித்தாராம். இம்மூர்த்திக்கு பிரயோக காலசம்காரமூர்த்தி என்பது திருநாமம். இச்சந்நிதியில் தங்களது ஆயுள்விருத்திக்காக மிருத்யுஞ்சய ஹோமங்கள் செய்து பலனடைபவர்கள் ஏராளம்.
அருந்ததி மற்றும் வசிஷ்டர் இவர்களுடன் கூடுதலாக ரிஷிகள் நால்வர் புடைப்புச் சிற்பமாக கோஷ்டத்தில் இடம்பெற்றிருக்கின்றனர். இவ்வமைப்பு அரிய ஒன்று. தவிர, மங்களத் தலமாகிய இங்கு எழுந்தருளியிருக்கும் மகாலட்சுமிக்கும் மங்களமகாலட்சுமி என்பதே திருநாமம். இவளுடன் ஞானசரஸ்வதியும் அருகிலேயே அமைந்திருப்பது வேறெங்கிலும் காணவியலா சிறப்பு. மேலும், கோஷ்டத்தில் உள்ள நிருத்த கணபதி, தட்சிணாமூர்த்தி, துர்கை, சதுர்வேத லிங்கங்கள், லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, பிட்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், காலபைரவர், சூரியன், சந்திரன், குபேரன் ஆகியோர்களின் மூர்த்தங்கள் அவரவருக்கு உரிய ஸ்தானங்களில் நிலைப்படுத்தப்பட்டிருப்பது அழகு.
சோழர்கள் காலத்தில் பொலிவு பெற்று விஸ்தாரமாக விளங்கியிருந்த கோயில், ஏராளமான கல்வெட்டு செய்திகளைத் தன்னகத்தே கொண்டு வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது. திருமணஞ்சேரி செல்கிறவர்கள் புராணப்பெருமையும், வரலாற்றுச்சிறப்பும் உடைய திருமங்கலம் ஆலயத்தினை தரிசிக்க முயற்சிக்கலாமே!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்திற்கு அருகே திருமங்கலம் அமைந்துள்ளது.
- சுஜாதா மாலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.